இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு கூட்ட முடிவுகள்

-டி.எம்.மூர்த்தி

கட்சி நூற்றாண்டை உற்சாகத்தோடு கொண்டாடுவோம்!
அதானியின் அட்டூழியத்தையும் துணைபோகும் அரசையும் கண்டித்து டிசம்பர் 10ல் ஆர்ப்பாட்டம்!
2025 செப்டம்பர் 21-25 தேதிகளில் சண்டிகரில் 25வது கட்சிப் பேராயம்!

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழுக் கூட்டம், கட்சி தலைமையகமான அஜய் பவனில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் பிரகாஷ் பாபு தலைமையில், நவம்பர் 28,29, 30 தேதிகளில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, அரசியல், பொருளாதாரம், மற்றும் கட்சி காங்கிரஸிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை பற்றிய அறிக்கையை முன்மொழிந்து பேசினார்.

அதன் மீது விரிவான விவாதம் நடைபெற்றது. பாஜகவின் தவறான ஆட்சி முறை, கொள்கைகளின் காரணமாக உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியிலும், நாடு முழுவதிலும் நடைபெறும் வகுப்புவாத வன்முறைகள் குறித்தும், அதற்கு எதிராக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் விவாதத்தில் தமது கருத்துக்களை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சண்டிகரில் கட்சிப் பேராயம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கட்சிப் பேராயத்தை (அகில இந்திய மாநாடு) பஞ்சாப் மாநிலம், சண்டிகரில், 2025 செப்டம்பர் 21 முதல் 25 தேதி வரை நடத்துவது என தேசிய குழு ஒருமனதாக முடிவு செய்தது.

தேசிய, மாநில மாநாடுகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுதல், குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை, உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை தேசியக் குழு தீர்மானித்தது. 2025 ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக மாநில மாநாடுகளையும், அதற்கு முன்னதாக மாவட்ட, இடைக்குழு, கிளை மாநாடுகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தீர்மானங்கள்:
டெல்லி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கு!

தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, நகரின் அனைத்து கட்டுமானப் பணிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையும்,  ஊதியமும் இழக்கிறார்கள்.  எனவே, இப்பணியாளர்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோருகிறோம்.

மணிப்பூர் மாநில அரசே, பதவி விலகு!

மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது, மேலும் 60,000க்கும் மேற்பட்டோர் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஓராண்டு கடந்தும் அங்கு நிகழும் வன்முறைகளை கட்டுப்படுத்த இயலவில்லை. இவை மாநில அரசின் தோல்வியைத் தெளிவாகக் காட்டுகின்றன. எனவே மணிப்பூர் மாநில அரசு பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்து!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, ஏராளமான தொழிலாளர்களின் பெயர்கள் தகுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை விபரங்களோடு பொருந்தவில்லை என்று கூறி வேலையும் ஊதியமும் மறுக்கப்படுகிறது. இத்திட்டத்தை ஒழுங்குபடுத்துவது எனும் பெயரில் ஒழிப்பதற்கு அரசு முயல்கிறது. இந்தப் போக்கைக் கண்டிப்பதோடு,  தொழிலாளிக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், நாளொன்றுக்கு ரூ. 700 ஊதியமும் வழங்க வேண்டும்,.

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்

வங்கதேசத்தில் இந்து மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. இந்த வெறுப்பு மண்டிய ஆக்கிரமிப்புச் செயல்களால், மதச்சார்பின்மை, சமத்துவம், நீதி நெறிமுறைகளைக் குழி தோண்டிப் புதைப்பது மட்டுமின்றி, மத நல்லிணக்கமும் பன்முகத்தன்மையும் வாய்ந்த வங்கதேச சமூகத்துக்கு கடுமையான அச்சுறுத்தலாகவும் அமைகின்றன.

வங்கதேசத்தின் ஆளும் கட்சியோ அல்லது வகுப்புவாத தமது சுயலாபத்துக்காக, இந்த அமைதிச் சீர்குலைவை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதை, உள்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு, மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து நின்று முறியடிக்க  வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு கூட்டம் கேட்டுக்கொண்டது.

கட்சியின் நூற்றாண்டு விழா

நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது பற்றி ஒவ்வொரு மாநிலமும் ஏராளமாக திட்டமிட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொண்டாடுவதற்காக திட்டங்கள் பற்றி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஜனசக்தியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

கான்பூரில் பேரணி

நூற்றாண்டு துவங்கும் 2024 டிசம்பர் 26 அன்று கட்சியின் அமைப்பு நிலை மாநாடு நடந்த உத்திரப் பிரதேசத்தின் கான்பூரில் பொதுக்கூட்டமும் பேரணியும் நடைபெறும்

நிறைவு நாளில் கம்மத்தில் பேரணி

இதேபோல், நூற்றாண்டு நிறைவு நாளான 2025 டிசம்பர் 26 அன்று வீரத் தெலுங்கானா போராட்டம் நடந்த, கம்மத்தில் கொண்டாட்டங்களின் நிறைவாக மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

சண்டிகரில் நடைபெறவிருக்கும் கட்சிப் பேராயத்துக்கு முன்னதாக, மாநில, மாவட்ட, இடைக்குழு, கிளை மாநாடுகளை உயிர்த் துடிப்போடும் உணர்வோடு இணைந்தும் கட்சியை வலுவுற கட்டியமைக்க, புத்துயிரூட்ட, புதிய இளைஞர்களை, பெண்களை பொறுப்புக்கு கொண்டு வர, இவற்றின் மூலம் கட்சி புதுப்பிக்கப்பட ஒன்றுபட்டு செயல்படுவோம்! உற்சாகத்தோடும் உறுதியோடும், தியாகங்களையும் அளப்பரிய போராட்டங்களையும் கொண்ட பெருமிதம் மிக்க நமது கட்சியின் நூற்றாண்டு விழாவை பயன் தரும் வகையில், பலரும் அறியும் வகையில், உற்சாகத்தோடு கொண்டாடுவோம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கட்சிப் பேராயம் வெல்லட்டும்!

-டி.எம்.மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button