இளம் வழக்கறிஞர் பி.கௌதம்குமார் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டத் தலைவரும், இளம் வழக்கறிஞருமான பி.கௌதம்குமார் (26) அகால மரணமடைந்த செய்தி அதிர்ச்சியும், ஆற்றவொண்ணா வேதனையும் அளிக்கிறது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகில் உள்ள இச்சிப்பாளையம் என்ற ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பி.வேலுசாமி – பொன்னி (எ) பொன்னம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தவர் கௌதம் குமார். இவரது தந்தை பி.வேலுசாமி கம்யூனிஸ்டு கட்சியிலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திலும் தீவிரமாக செயல்பட்டவர். இதன் காரணமாக கௌதம்குமார் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து மாணவர்கள் நலனுக்கும், உரிமைகளுக்கும் போராடியவர். சட்டப்படிப்பு முடிந்த பிறகு வழக்கறிஞராக பதிவு செய்து, சட்டப்பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.
அண்மையில் நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வந்தவர்.
நேற்று முன்தினம் 21.03.2025 ஆம் தேதி கௌதம் குமார் கோவையில் இருந்து கொடுமுடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திருப்பூர் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் தலைக் காயம் ஏற்பட்டு, உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் மூளைச்சாவுக்கு ஆளாகியிருந்த துயரம் தெரியவந்தது.
இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் கௌதம் குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து, ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (22.03.2025) அவரது மறைவுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
வகுப்புவாத, பிளவுவாத, வெறுப்பு அரசியலுக்கு எதிராக நூற்றுக்கணக்கான இளைஞர்களையும், மாணவர்களையும் அணிதிரட்டி, சமூக நல்லிணக்கத்திற்காக முனைப்பாக செயல்பட்டு இளைஞர்களின் நன் நம்பிக்கையை பெற்று வளர்ந்து வந்த நிலையில் அவரது இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாது பெரும் வேதனையாகும்.
மகனை இழந்த பெற்றோர்களை எந்த வார்த்தை கூறியும் ஆற்றுப்படுத்த முடியாது. அவர்களை காலம் தான் ஆற்றுப்படுத்த வேண்டும். நெஞ்சைப் பிளக்கும் வேதனையிலும் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் அவர்கள் என்றென்றும் நினைவு கூறப்படுவார்கள்.
கௌதம் குமாரின் அகால மறைவுக்கு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், இளைஞர் அமைப்பின் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.