இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா, கட்சியின் மூத்த தலைவர்கள் பாலச்சந்திர காங்கோ, சையது அஸீஸ் பாஷா, தினேஷ் வர்ஷ்னி ஆகியோர் வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:- பிரதமர் நிவாரண நிதி விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும். சமூகநலன் மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும். புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். ஆளுநர் பதவி நீக்கப்படும். சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும். நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.
பா.ஜ.க.வின் வணிகமயமான, மத ரீதியிலான கல்வித் திட்டங்கள் திரும்பப் பெறப்படும், நிதி ஆயோக்கை கலைத்துவிட்டு, திட்டக்குழு மீண்டும் ஏற்படுத்தப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், புதுச்சேரி மற்றும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும். மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும். சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் இயற்றப்படும். தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதோடு சமவாய்ப்பு சமத்துவத்துடன் பொதுத்துறையை மேம்படுத்துவதற்கு போராடுவோம். இடஒதுக்கீட்டில் 50% என்ற உச்ச வரம்பை நீக்கக் கோரி தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராடுவோம். இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கும் அக்னிபத் திட்டம் மற்றும் அரசுப் பணிகளில் ஒப்பந்த முறைகளை ஒழிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, “இந்த மக்களவைத் தேர்தல், நமது மதச்சார் பற்ற ஜனநாயகத்தையும், அதன் எதிர்காலத்தையும், நமது அரசியலமைப்பு நெறிமுறைகளையும் காப்பாற்றுவதற்கான முக்கியமான தேர்தல். இதில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சி நாட்டுக்கு மிகப்பெரிய பேரழிவு. ஆர்எஸ்எஸ்சின் அரசியல் படையாக இருக்கும் பாஜ அரசியலமைப்பை திருத்தி, இறுதியில் முழுமையாக மாற்ற முயற்சிக்கிறது” என்றார்.