தோழர் கானம் ராஜேந்திரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கேரள மாநிலச் செயலாளருமான தோழர்.கானம் ராஜேந்திரன் (73) 08.12.2023 அன்று பிற்பகல் எர்ணாகுளம் மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், கூட்டிக்கல் கிராமத்தில் வி.பரமேஸ்வரன் நாயர் – செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக 1950 நவம்பர் 10 ஆம் தேதி பிறந்த கானம் ராஜேந்திரன் பள்ளியில் பயிலும் காலத்தில், தோட்டத் தொழிலாளர் போராட்டங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் கம்யூனிஸ்டு இயக்கத்தை தேர்வு செய்தவர்.
கல்லூரியில் பயின்ற காலத்தில் மாணவர் இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர். பின்னர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கேரள மாநிலச் செயலாளர், தேசிய துணைத் தலைவர் பொறுப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்.
தொழிற்சங்க அரங்கில் பல்வேறு பிரிவு தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கி உரிமைகளுக்கு போராடியவர்.
கோட்டயம் மாவட்டம், வாழூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, கேரள சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று, 1982 முதல் 1991 வரை சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதித்தவர். கட்டுமானத் தொழிலாளர் சமூக பாதுகாப்புக்காக இவர் அறிமுகப்படுத்திய மசோதா மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பொறுப்பில் செயல்பட்டு வரும் கானம் ராஜேந்திரன் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் சக்தி வாய்ந்த தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த கட்சியின் தேசிய மாநாட்டில் தேசிய செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மக்களின் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற பெரும் பங்காற்றியவர்.
வகுப்புவாத சக்திகளை ஒன்றிய அரசு அதிகாரத்தில் அகற்றவும், அரசியல் அமைப்பு முறையை பாதுகாக்கவும் தீவிரமாக போராடி வரும் கால சூழலில் கானம் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரது வாழ்விணையர் வனஜா ராஜேந்திரன், இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். மறைந்த தோழர் கானம் ராஜேந்திரன் நினைவுகளை நெஞ்சில் ஏந்தி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அவரது மறைவுக்கு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கேரளா மாநிலத் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது
அன்னாரின் மறைவுக்கு ஒரு வார காலம் துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டில் கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் இறக்கி அஞ்சலி செலுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வருத்தத்துடன்,
இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி