இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு: நெருப்பாற்றில் நீந்திய இயக்கம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 99 ஆண்டுகளை நிறைவு செய்து 2024 டிசம்பர் 26 ஆம் தேதி நூற்றாண்டுக்குள் நுழைகிறது.
என்ன சாதித்தது இந்தக் கட்சி?
இது இன்னும் இருப்பதே ஒரு சாதனைதான். இந்தக் கட்சியின் உறுப்பினர்களும் தலைவர்களும் அனுபவித்த துன்பங்களையும் சித்திரவதைகளையும் வேறு எந்த கட்சியும் சந்தித்து இருக்காது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சித்து வேலைகளை எல்லாம் செய்து அதையே கருத்தியலாக பேசிக்கொண்டு இருக்கும் கட்சிகளின் மத்தியில் மெய்யாகவே மார்க்சியத்தை கருத்தியலாகக் கொண்டது இந்தக் கட்சி.
கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே இந்தக் கருத்தியலைக் கொண்டவர்கள் மீது, பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் போல்ஷவிக் வழக்கு, மீரட் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு என சதி வழக்குகள் போடப்பட்டன.
“ஒரு வன்முறைப் புரட்சியின் மூலம் இந்தியாவை பிரிட்டனில் இருந்து முழுமையாகப் விடுவிப்பதன் மூலம், இங்கிலாந்து பேரரசருக்கு பிரிட்டிஷ் இந்தியாவின் மீதான இறையாண்மையை பறிக்க முனைந்ததாக” இந்த வழக்குகள் குற்றம் சுமத்தின. கருவிலேயே அழிக்கும் முயற்சிகள் இவை.
1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கப்பட்டது. காந்தியடிகள் 1915ல் இந்தியாவுக்கு வந்துவிட்டார். காங்கிரஸ் மீதோ காந்தியடிகள் மீதோ எந்த சதி வழக்கும் போடப்பட்டதில்லை. சட்ட விரோதம் என்று தடை செய்யப்பட்டதும் இல்லை. கம்யூனிஸ்டுகள் மீது மட்டும் ஏன்?
முழு விடுதலை முழக்கம் காரணம் இருந்தது. இந்திய தொழிலாளர்களுக்கு முதல் மத்திய அமைப்பாக அகில இந்திய தொழிற்சங்கப் பேராயம் (ஏஐடியுசி) 1920ல் தொடங்கப்பட்டது. இயல்பாகவே, தொழிலாளி வர்க்க கருத்தியலை கொண்ட மார்க்சியவாதிகள் தொழிற்சங்கங்களில் ஈடுபட்டுப் பணி புரிந்தார்கள்.
1921ல் ஏஐடியுசி, இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும், பிரிட்டிஷ் பேரரசின் ஆளுகைக்கு கீழ் டொமினியன் அந்தஸ்து அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதை அன்றைய காங்கிரஸும், காந்தியும் ஏற்கவில்லை.
1925ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறப்பெடுத்த போது அது முதலில் முன்மொழிந்த தீர்மானமும் இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்பதே. இதனை காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்பதற்காக அது நடத்திய போராட்டம் பெரியது. 1929ல் தான் முழுமையான சுதந்திரம் என்ற கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.
மீண்டும் மீரத் சதி வழக்கு
இந்தியாவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அனைவர் மீதும், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் உட்பட, 1929ல் மீண்டும் மீரட் சதி வழக்கு தொடுக்கப்பட்டது. 1933 வரை இந்திய மக்களிடமிருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களை பிரித்து பிரிட்டிஷ்காரர்கள் சிறைவைத்தனர்.
அவர்கள் சிறை மீண்ட போது, 1934ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமானது என பிரிட்டிஷ் இந்திய அரசு தடை செய்தது. அந்தக் கட்சியிலோ தொழிற்சங்கத்திலோ விவசாயிகள் சங்கத்திலோ உறுப்பினராவது கிரிமினல் குற்றம் என அறிவித்தது. ஆனாலும் அவர்கள் தலைமறைவாக இருந்து இயங்கிக் கொண்டே இருந்தார்கள்.
1939ல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி ஆகிய நாஜிகளுடன் ஜப்பான் அரசர் ஹீரோ கிட்டோவும் சேர்ந்து அச்சு நாடுகள் கூட்டணியை உருவாக்கினர்.
உலகத்தை பாசிச அபாயம் சூழ்ந்து விடாமல் இருக்க, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் சோவியத் யூனியன் கூட்டுச் சேர்ந்து நேச நாடுகள் அணி உருவானது. இந்தியாவில் இங்கிலாந்து அரசை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஹிட்லர் இங்கிலாந்தை தாக்கவில்லை, மாறாக சோவியத் யூனியன் மீது படையெடுத்தான்.
தங்களுக்குள்ள ஒப்பந்தப்படி இரண்டாம் போர் முனையை திறக்காமல் அமெரிக்காவும் இங்கிலாந்தும், ஹிட்லரோ அல்லது சோவியத் யூனியனோ எது அழிந்தாலும் நல்லது தான் என்று ஒதுங்கிக் கொண்டன.
தலைமறைவாக இருந்தும், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தும் வெள்ளை அரசுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள், ஹிட்லரை தோற்கடித்துத் தீர வேண்டிய வரலாற்றுக் கடமை கருதி, உலகப் போர் ‘மக்கள் யுத்தம்’ என்ற நிலைக்குச் சென்று விட்டது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
அதற்கு நேச நாடுகளின் போர்த் தயாரிப்புகளுக்கு உதவ வேண்டும். அதனால் இங்கிலாந்து அரசை பின்னுக்கு இழுப்பது ஹிட்லருக்கு உதவி செய்ததாகிவிடும் என்று கருதினார்கள். அதை செயல்படுத்தவும் செய்தார்கள்.
யாரடா தேசத் துரோகி?
1942 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையை பிரிட்டிஷ் இந்திய அரசு விலக்கிக் கொண்டது. பகிரங்கமாக செயல்பட்டு கட்சி மறு கட்டமைப்பு செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதை விரும்பாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டிஷ்காரர்களுக்கு துணை போய்விட்டதாக கூறி தேசத்துரோகிப் பட்டத்தை சுமத்தினார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வெகுமக்கள் இயக்கங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். நில பிரபுக்கள், சமஸ்தானங்கள், ஆதிக்க சக்திகள், சாமானிய மக்களுக்கு இழைத்த தீங்குகளை எதிர்த்து மக்களை திரட்டினார்கள். கொடூரமான அடக்குமுறைகளை எதிர் கொண்டு போராடினார்கள்.
இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய கய்யூர் போராட்டம் 1943, புன்னப்புரா வயலார் போராட்டம் 1946, தெபாகா போராட்டம் 1946 ஆகியவை கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடத்தப்பட்டவை தான்.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராய்..
தமிழ்நாட்டில் 1943-ல் காவிரி படுகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. (அப்போதே சங்கத்தின் பெயரில் தமிழ்நாடு என்று சொல்லப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தன்னுடைய பெயரில் தமிழ்நாடு என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியது விவசாயிகள் சங்கம் தான்).
பட்டியலின மக்கள், நிலப்பிரபுக்கள் மடாதிபதிகளின் நிலங்களில் இரண்டு படி நெல் கூலிக்கு வேலை செய்ய வேண்டும்; உடல் நலம் சரியில்லாவிட்டாலும் வேலைக்கு வராமல் இருந்தால் சவுக்கடி சாணிப் பால் தண்டனை கிடைக்கும்; கருவுற்ற பெண்களுக்கு வயல்வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிரசவம் நடக்கும்; குழந்தை பிறந்த 10 நாட்களுக்குள் திரும்ப வேலைக்கு வந்து விட வேண்டும்; மரக்கிளையில் தூளி கட்டி தொங்க போட்டு இருக்கிற பச்சிளம் குழந்தை பசியால் கதறி அழுதாலும் மணியக்காரர் உத்தரவு இல்லாமல் பால் கொடுக்கப் போகக்கூடாது; அவர்களது பெண் குழந்தைகளை நிலப்பிரபுகளின் வீடுகளில்,மாட்டு கொட்டகைகளில் வேலை பார்க்க அனுப்ப வேண்டும்; பாலியல் வல்லுறவு செய்தாலும் வாய் திறந்து பேசக்கூடாது.
ஆண் குழந்தைகள் மாடு மேய்க்கப் போக அனுப்ப வேண்டும்; பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே கூடாது; மேல் சாதியினர் தெருவில் வந்தால் காற்று வீசும் பக்கத்துக்கு எதிர்ப்பக்கம் சென்றுவிட வேண்டும், இவர்கள் மீது பட்ட காற்று மேல் சாதியினர் மீது உரசக்கூடாது; நில பிரபுக்கள் மடாதிபதிகள் வண்டியில் வந்தால் துண்டை தரையில் விரித்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட வேண்டும்; கடும் பாடுபட்டு உழைக்கும் பிற்பட்ட வகுப்புகளைச் சார்ந்த குத்தகை விவசாயிகளுக்கு, அவர்கள் விளைவித்த நெல்லில் கால்பங்கு மட்டுமே கொடுக்கப்படும்; கூடுதலாக கேட்டால் குத்தகை ரத்து செய்யப்படும்ஞ் இந்தக் கொடுமைகளை எழுதுவதற்கு தனிப் புத்தகம் வேண்டும்!!
கன்னடத்தில் பிறந்த பார்ப்பனரான பி சீனிவாசராவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை காவிரி படுகைக்கு அனுப்பியது. குத்தகைதாரரான பிற்படுத்தப்பட்டவர்களையும் விவசாயக் கூலிகளான பட்டிலினத்தவரையும் இணைத்து தான் அவர் விவசாய சங்கத்தை ஆரம்பித்தார். தலைமுறைகளாக அடிமைத்தனத்திலேயே உழன்று அஞ்சி நின்றவர்களை திரட்டுவது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்! நில உடமையாளர்களும் மேல் சாதிக்காரர்களும் மடாதிபதிகளும் இந்தச் செயலை எவ்வளவு கொடூரமாக எதிர் கொண்டிருப்பார்கள்! நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் நடுங்குகிறது! எத்தனை தோழர்கள் கொல்லப்பட்டார்கள்! உயிரோடு எரிக்கப்பட்டார்கள்!
கப்பற்படை புரட்சி
யாரையெல்லாம் எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடினார்களோ, அவர்களில் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்கள். சுதந்திரத்துக்கு பிறகு ஆட்சியில் பங்கேற்று பெரும் பிரமுகர்களாக மந்திரிகளாக வலம் வந்தார்கள்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னும், பிரிட்டிஷ் அரசு வாக்களித்தபடி இந்தியாவுக்கு சுதந்திரம் தரவில்லை. அந்த ஆணவத்தை கேள்வி கேட்டது 1946ல் கப்பற்படை புரட்சி.
தனது ராணுவத்திலும் காவல்துறையிலும் உள்ள இந்தியர்கள் தமக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பதை பிரிட்டிஷ்காரர்களுக்கு முகத்தில் அடித்து உணர்த்தியது
“இனியும் நாங்கள் வெள்ளையர்களின் வேலைக்காரர்கள் அல்ல, சுதந்திர இந்தியாவின் போர் வீரர்கள்” என்று பிரகடனம் செய்து, அந்தப் புரட்சியாளர்கள் போர்க்கப்பல்களில் இருந்த பிரிட்டிஷ் கொடியை இறக்கிவிட்டு காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சி கொடிகளை உயர்த்தினார்கள். ஆனால் அவர்களை ஆதரித்து இயக்கம் நடத்தியதும் அவர்களோடு சேர்ந்து சுடப்பட்டு செத்ததும் கம்யூனிஸ்டுகள் மட்டுமே தான். காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் அவர்களைக் கை கழுவின. அப்போது வேலை நீக்கம் செய்யப்பட்ட 523 கப்பல் படை வீரர்களில் ஒருவருக்கு கூட சுதந்திர இந்தியாவோ சுதந்திர பாகிஸ்தானோ மீண்டும் வேலையோ, இழப்பீடு, ஓய்வூதியமோ கூட கொடுக்கவில்லை.
1920 தொடங்கி விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர்களை திரட்டிக் களம் இறக்கிய ஏஐடியுசியை, விடுதலை கிடைப்பதற்கு முன்னாலேயே 1947 மே 3ல் பிர்லாவின் மாளிகையில் வைத்து உருவாக்கியது காங்கிரஸ். வரப்போகும் தமது ஆட்சியில் தொழிலாளர்கள் ஒரு கொடியின் கீழ் நிற்பதை அது விரும்பவில்லை.
விடுதலைக்குப் பின்பும் அடக்குமுறை
1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் எனப் பிரித்து இரண்டாகப் பிரித்து விடுதலை வழங்கப்பட்டது. தேசப்பிரிவினையை கம்யூனிஸ்டுகள் ஏற்கவில்லை. அரசியல் விடுதலை கிடைத்ததே அன்றி, சமூக, பொருளாதார விடுதலைக்கு காங்கிரஸ் முயலவில்லை. இந்திய முதலாளிகள் நிலப்பிரபுகளின் கைகளுக்கு அதிகாரம் மாறி இருக்கிறது என்றே கம்யூனிஸ்டுகள் கருதினார்கள்.
1948ல் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு, ஒரு ஜனநாயகப் புரட்சிக்கான அறைகூவலை விடுத்தது. சாதிக் கொடுமைகள், சமூக அநீதிக்கு எதிராகப் போராடவும் அது தீர்மானித்தது. கப்பற்படை புரட்சி, தெலுங்கானா போராட்ட பாணியில் ஆயுதம் ஏந்தவும் தயாரானது.
லட்டு போல வாய்ப்பு கிடைத்தது காங்கிரசுக்கு! இடதுசாரிகள் மீது மென்மையான அணுகுமுறை கொண்டவர் என்று கருதப்பட்ட பிரதமர் நேரு ஓரம் கட்டப்பட்டார். வலதுசாரிகளின் பிரதிநிதியாக இருந்த உள்துறை அமைச்சர் வல்லபபாய் பட்டேல் கைகளுக்கு கடிவாளம் வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுபடியும் சட்டவிரோதமானது என்று தடை செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் நரவேட்டையாடப்பப்பட்டார்கள்.
தன்னலமற்று, மக்கள் நலனை மையமாகக் கொண்டு உழைத்து, களப்பணியில் ஈடுபட்டு, மக்களின் மன உணர்வுகளை எல்லாம் புரிந்து, ஆதிக்க வர்க்கத்தின் கைகளிலும் வெள்ளையர் ஆட்சியிலும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகி புடம் போட்டு எடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.
கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன. தொழிற்சங்க அலுவலகங்கள், விவசாய சங்க அலுவலகங்கள் வேட்டையாடப்பட்டன. எல்லா ஆவணங்களும் அழித்து ஒழிக்கப்பட்டன. அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில், பிரிட்டிஷ்காரன் காலத்தில் கூட அனுபவித்திராத கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளானார்கள்.
1952ல் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. சிறையில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள், மக்கள் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டார்கள்.
போராட்டமே வாழ்க்கை
தெலுங்கானா போராட்டத் தளபதியான ரவி நாராயண ரெட்டி, தேர்தலில் ஜவஹர்லால் நேரு பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
பிரிட்டிஷ்காரர்களுடைய ஆளுமைக்கு கீழ் இருந்த பகுதிகளில் தான் விடுதலை வந்தது. போர்ச்சுகீசியர்களின் கையில் இருந்த டையூ டாமன் விடுதலை பெறுவதற்காக போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். 1954ல் விடுதலை கிடைத்தது.
பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியை விடுவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் போராடியது. மக்கள் தலைவரான வ.சுப்பையா தலைமையில் நடத்தப்பட்ட பிரெஞ்சு இந்திய போராட்டம் வெற்றி பெற்று 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை கிடைத்தது.
கோவாவை விட்டு போர்ச்சுக்கீசியர்கள் போகவில்லை. இந்தியா முழுமையும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை திரட்டி கோவாவுக்குள் நுழைந்து அங்குள்ள கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து விடுதலைக் கிளர்ச்சியை நடத்தியது. 1956ல் தான் அங்கு விடுதலை பெற முடிந்தது. விடுவிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் இந்தியாவோடுதான் இணைந்தனர்.
மேலே சொன்ன வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒரு காவியம் ஆகும். இதுபோல இதற்கு முன்பு படித்ததில்லையே என்று கூட சிலர் நினைக்கலாம். ஆம்! இவற்றையெல்லாம் வரலாற்றுப் பாட புத்தகத்தில் சேர்க்காமல் ஒன்றிய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் வேறு யாருக்கும் பங்கு இல்லை, தனக்கு மட்டுமே அது சொந்தம் என்று அது நினைத்தது தான் அதற்குக் காரணம்.
தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் ஆட்சி
1957ல் இரண்டாவது பொதுத் தேர்தல். கம்யூனிஸ்டுகள் தான் இரண்டாவது பெரிய கட்சி; எதிர்க்கட்சி. ஏற்கனவே மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட பிரிக்கப்படாத தமிழ்நாட்டில், 1952லேயே கம்யூனிஸ்டுகள் அமைத்திருந்த கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் தேர்தலிலேயே போட்டியிடாத ராஜாஜியை முதலமைச்சராக கொல்லைப் புற வழியாக காங்கிரஸ் நுழைத்தது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கம்யூனிஸ்டுகளிடம் சேர்ந்து நின்ற சில கட்சிகளுக்கு, அமைச்சர் பதவியும், இன்ன பிறவற்றையும் தந்து, தன் வசப்படுத்தியது.
1957-ல் கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆளுங்கட்சியானது. பின் நாட்களில், ஒன்றிய அரசும் வேறு மாநில அரசுகளும் இயற்றிய சட்டங்களை அது தனது ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றியது. அதேபோல காங்கிரஸின் ஒன்றிய அரசால் முதலில் கலைக்கப்பட்ட மாநில அரசும் கம்யூனிஸ்டுகளின் கேரள மாநில அரசுதான்.
நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆற்றிய பணி மெச்சத்தக்கது. எஸ் எ டாங்கே, ஹிரேன் முகர்ஜி, பூபேஷ் குப்தா, இந்திரஜித் குப்தா தொடங்கி எண்ணற்ற கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்தில் நடத்திய விவாதங்கள், நாடாளுமன்ற விவாதத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான பாடப்புத்தகங்களாக புதிய எம்பிக்களுக்கு வைக்கப்படுகின்றன.
1960களில் உலக அளவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இரண்டு பிரிவுகள் உருவாகின. அது உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை இரண்டாக பிளவுபடுத்தியது. 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உடைத்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சி பிறந்தது. அது ஒரு துன்பகரமான நிகழ்வு. ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை இந்த பிளவு பின் தள்ளியது.
லெனினிய கோட்பாடுகளின் படி, கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பான்மையோரின் கருத்துக்கு சிறுபான்மையினர் கட்டுப்பட வேண்டும். இந்தியாவில் இருக்கும் எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பு விதிகளிலும் இந்த விதி இருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு மாநாடும், அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் செயல்பட்ட விதத்தை பரிசீலித்து, அதன் அனுபவங்களில் இருந்து கற்ற பாடத்தின் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அரசியல் பாதையை நிர்ணயம் செய்கின்றன. ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளில் தவறு இருந்தால் கம்யூனிஸ்டுகள் சுய விமர்சனம் செய்து கொள்வதற்கும், திருத்திக் கொள்வதற்கும் தயங்கியதே இல்லை. ,”எதையுமே செய்யாதவன் தான், ஒருபோதும் தவறுகளைச் செய்ய முடியாது” என்று லெனின் கூறியிருக்கிறார்.
எமர்ஜென்சி
காங்கிரசில் இருந்த தீவிர வலதுசாரி சக்திகளுக்கும், மற்றவர்களுக்கும் இடையே மோதல் உச்சத்துக்கு வந்தது. இந்திரா காந்தி 1975 ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சி அறிவித்தார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசவுடமை உள்ளிட்ட முற்போக்கு நடவடிக்கைகளையும் எடுத்தார். ஆனால் அங்கும் காற்று திசை மாறியது. சாதாரண ஏழை எளிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1977 பொது தேர்தலில், காங்கிரஸ் மட்டுமல்ல, இந்திரா காந்தியே தோற்றார். எமர்ஜென்சி ஆதரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பின்னர் அது தவறு என்று தன்னைத்தானே சுய விமர்சனம் செய்தது. இடதுசாரி அணிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற முடிவு செய்தது. காங்கிரஸ் ஆதரவோடு கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. முதலமைச்சராக இருந்த பி கே வாசுதேவன் நாயர், உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இடதுசாரி ஜனநாயக முன்னணியில் ஒரு அங்கமாகி, மார்க்சிஸ்ட் கட்சி முதலமைச்சராக வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்தது.
1990-ல் ஐக்கிய முன்னணி ஆட்சி வி.பி.சிங் தலைமையில் அமைந்தது. இடதுசாரிகளும் பாரதிய ஜனதாவும் அந்த ஆட்சியை ஆதரித்தனர். கல்வியிலும் வேலையிலும் பிற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடுதரும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் அமுலாக்கினார். பாரதிய ஜனதாவுக்கு விருப்பமில்லை.
தலைதூக்கிய பாசிச சக்திகள்
அன்றைய பாரதிய ஜனதா தலைவர் அத்வானி ரத யாத்திரை தொடங்கினார். பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதுதான் அதன் கோரிக்கை. முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மையினரை திரட்டி, நாமெல்லாம் இந்துக்கள் என்று மதவெறியூட்டி, அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கு அதுதான் தருணம் என்று ஆர்.எஸ்.எஸ் செய்த முடிவின் அடிப்படையில் ரத யாத்திரை நிகழ்ந்தது. அத்வானி கைது செய்யப்பட்டார், வி.பி.சிங் அரசு கவிழ்க்கப்பட்டது.
1991-ல், ராஜீவ் காந்தி கொலையுண்டபோது. நரசிம்மராவ் பிரதமர் ஆனார். மன்மோகன் சிங் நிதி அமைச்சர். இந்திய விடுதலை இயக்கம் முன்வைத்த அரசியல் நிலைபாடுகள் அனைத்தையும் கைகழுவி, தாராளமயம் தனியார் மயம் உலக மயக் கொள்கைகளை ராவ் அரசு இந்தியாவுக்குள் புகுத்தியது. கார்ப்பரேட் முதலாளிகள் அரசை ஆட்டி வைத்தனர். அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் இந்தியாவின் சட்டங்கள் அன்னியர் ஆணைக்கேற்ப திருத்தப்பட்டன.
காங்கிரஸ் அரசின் மீது மக்களுக்கு தோன்றிய அதிருப்தி, ஒரு மற்றாட்சிக்கு வழி வகுத்தது. 1996-ல் பிஜேபியின் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தார். முதலில் 13 நாட்கள், அடுத்த 13 மாதங்கள், அதற்கடுத்த 5 ஆண்டுகள் என மூன்று முறை பிரதமர் பதவி வகித்தார். இந்திய அரசியலில் வகுப்புவாதிகள் கை ஓங்கியது.
காங்கிரஸ் பிஜேபிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கட்ட வேண்டிய அவசியத்தை காங்கிரஸ் தலைமையிடம் கம்யூனிஸ்டுகள் வலியுறுத்தினார். விளைவாக குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு வென்று, பிஜேபி ஆட்சியை அகற்றியது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கட்சி இரண்டும் சேர்த்து, 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். இடதுசாரிகள் தந்த அழுத்தத்தால்தான் 100 நாள் வேலைத்திட்டம் என்று சொல்லப்படக்கூடிய மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், பயிர் காப்பீடு போன்ற நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆனால் அதே நேரத்தில், உலகமய கார்ப்பரேட் ஆதரவு பாதையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்னும் வேகமாக ஓடத் துவங்கியது. கம்யூனிஸ்டுகள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
கம்யூனிஸ்டுகள் விலகியதால், தான் ‘சுதந்திரமாக உணர்வதாக’ மன்மோகன் சிங் பேசினார். இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல், 2019-ல் இரண்டாவது முறை மன்மோகன் சிங் அரசு அமைந்தது. ஆனால் இடதுசாரிகள் சுட்டுக்காட்டிய தவறான ஆட்சிக் கொள்கைகளை காங்கிரஸ் தொடர்ந்து அமலாக்கியதால் மக்கள் செல்வாக்கை இழந்தது.
ஊதிப் பெருக்கப்பட்ட மோடி
செல்வாக்கு இழக்கும் காங்கிரஸ் மீது இனியும் பந்தயப் பணம் கட்ட முடியாது என்று முடிவு செய்த கார்ப்பரேட்டுகளும் பெரு முதலாளிகளும், தமக்கு ஆதரவான ஒரு தலைவரைத் தேடினர். குஜராத் முதல்வராக இருந்து கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் மூலம் இந்துத்துவாவின் ஹீரோவான மோடியை கண்டெடுத்தனர். குஜராத் பெரும் வளர்ச்சி அடைந்து விட்டதாக பொய் விளம்பரங்களைச் செய்து காற்றடித்த பலூன் போல மோடியைப் பேருருவமாகக் காட்டி 2014 தேர்தலில் பிஜேபி தனிப் பெரும்பான்மையிலேயே ஆட்சிக்கு வந்தது.
“மதச்சார்பற்ற, ஜனநாயக, சோஷலிச, இறையாண்மை குடியரசு” என்று அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் தன்னைத் தானே நிறுவிக் கொண்ட இந்திய ஆட்சி முறைமையை திட்டமிட்டு சீரழித்து வருகிறது. முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பகிரங்கமாக பிரதமரே பொது மேடைகளில் குறிவைத்து தாக்குவது வழக்கமாகிவிட்டது. வர்ணாசிரமத்தை நிறுவும் மனுநீதியை ஆட்சி நியமமாக கொண்டு வர வேண்டும் என்று பகிரங்கமாகவே பேசுகிறார்கள்.
இந்திய ஆட்சியாளர்களை கண்காணிக்க, தவறு ஏற்பட்டால் சரி செய்ய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கி வைத்திருக்கிற, நீதித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, கணக்குத் தணிக்கை, தேர்தல் ஆணையம் அனைத்தையும் வளைத்து தனது கைப் பிடிக்குள் கொண்டு வந்து விட்டது.
நாடாளுமன்றத்தில் கூச்சல்களை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆத்திரமூட்டி, விவாதமே இல்லாமல் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறது. ஆட்சி அதிகார அமைப்புகளில், நாடி நரம்புகளில் எல்லாம் இந்துத்துவவாதிகள் திணிக்கப்பட்டு அரசு இயந்திரம், ஆளுங்கட்சிக்கு அடிபணிய வைக்கப்பட்டிருக்கிறது.
அனேகமாக ஊடகங்கள் அனைத்தையும் விரட்டியோ விலைக்கு வாங்கியோ தன் வழிக்கு கொண்டு வந்து விட்டது. ஆர்எஸ்எஸ் -பிஜேபியின் பொய்கள் அனைத்தும், அச்சு ஊடகம் காட்சி ஊடகங்கள் வழியே மக்களது தலைக்குள் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உரிமை பறிப்பு
விவசாயிகளுக்கு எதிராக கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை, 700 உயிர்களைப் பலி கொடுத்து ஒரு வருடம் போராடி விவசாயிகள் கிழித்து எறிந்திருக்கிறார்கள்.
இந்திய தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் 44 சட்டங்கள் சாறு பிழிந்து அகற்றிவிட்டு வெறும் சக்கைகளை நான்கு சட்டத்தொகுப்புகளாக மோடி அரசு கொடுத்திருக்கிறது. ஆனாலும் கடந்த நான்கு ஆண்டுகளில் அதை அமலாக்க முடியவில்லை. அதே நேரத்தில் அதன் சரத்துக்களை எல்லாம் நடைமுறையில் ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களின் தொழிலாளர் துறைகளும், தமிழ்நாடு உட்பட, செயலுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.
மூன்றாம் முறையாகவும், தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், கூட்டணியின் துணையோடு ஆர்எஸ்எஸ் -பிஜேபி அரசு மீண்டும் அமைந்திருக்கிறது. நிதானத்தோடும் ஆனால் அதி வேகத்தோடும் தனது அஜெண்டாக்களை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்துகிறது. இனி ஒரு பொதுத் தேர்தல் ஜனநாயக வழியில் நடைபெறுமா? என்பது கூட கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, பாசிசத் தன்மை கொண்ட மதவெறி சக்தியான ஆர்எஸ்எஸ்- ஐ ஆட்சியில் இருந்து அகற்றுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகிறது. இதற்காக தன்னை வலிமைப்படுத்திக் கொள்வதோடு, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளிடையே இறுக்கமான ஒற்றுமையை கொண்டு வரவும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை, அதற்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருப்பினும், ஒன்று திரட்டி வலுவான எதிரணியை அமைக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வழிகாட்டி இருக்கிறது. இதனை விட்டு அங்குலம் கூட விலகாமல் கம்யூனிஸ்ட் கட்சி தனது அரசியல் நிலைபாடுகளை மேற்கொண்டு வருகிறது.
எத்தனை எம்எல்ஏக்கள். எம்பிக்கள் இருக்கிறார்கள்? என்ற கேள்வி எழலாம்.
வரும்! வந்தே தீரும்
வெறும் மூன்று சதவீத வாக்குகளை பெற்றுக் கொண்டிருந்த இலங்கை இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதி தேர்தலின் போது 50 சதத்துக்கு அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கைக்கு ஒரு இடதுசாரி அதிபர்! அதன் பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி வாங்கிய வாக்குகளை விடவும் கூடுதலாகப் பெற்றுள்ளது.
புரட்சி என்பது மக்களின் எழுச்சி! அந்த எழுச்சியை, பிறையை, சூரியனைப் பார்த்து நாள் நிச்சயிக்க முடியாது. மக்கள் எழுச்சி பெரும் நேரத்தில் அதற்குரிய தலைமையை தருவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி நிலை பெற்று இருக்கிறதா? என்பதுதான் பிரச்சனை.
லெனின் சொன்னார்: “எதுவுமே நடக்காமல் பல பத்தாண்டுகள் ஓடிவிடும். ஆனால் ஒரே வாரத்தில் பல பத்தாண்டுகளுக்கான நிகழ்வுகள் நடந்தேறும்.”
டி.எம்.மூர்த்தி,
ஆசிரியர், ஜனசக்தி
நன்றி: காக்கைச் சிறகினிலே