அறிக்கைகள்தமிழகம்

திருப்பூர், நாகையில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூர் தொகுதியில் தோழர் கே.சுப்பராயன், நாகை தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுவார்கள் என கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (18.03.2024 திங்கள் கிழமை) சென்னையில் உள்ள மாநில கட்சி அலுவலகத்தில் (பாலன் இல்லம்) தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தகைசால் தமிழர் இரா.நல்லகண்ணு, தேசியச் செயலாளர் டாக்டர்.கே.நாராயணா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், எம்.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ராமச்சந்திரன் (தளி), க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.பழனிசாமி, வை.சிவபுண்ணியம், பி.பத்மாவதி, டி.ராமசாமி உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தேசிய அரசியல் நிகழ்ச்சி போக்குகளை தேசியச் செயலாளர் டாக்டர்.கே.நாராயணா விளக்கிப் பேசினார்.

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநிலக்குழுக் கூட்டங்களில் பரிசீலித்து, உறுப்பினர்கள் கருத்தறிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழுவின் சார்பில் கீழக்கண்ட முறையில் வேட்பாளர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறார்கள்.

  1. நாகப்பட்டினம் – வை.செல்வராஜ், திருவாரூர் மாவட்டச் செயலாளர்
  2. திருப்பூர் – கே.சுப்பராயன், மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர்
    வாழ்க்கைக் குறிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தோழர்.வை.செல்வராஜ் தேர்வு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வாஜ் (வயது 62), மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ., எம்.பில்) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் வரை பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும் பொழுதே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாணவர் இயக்க தலைவராக பணியாற்றினார்.

பின்னர் 1980-ம் ஆண்டு கட்சி உறுப்பினராக சேர்ந்து தன்னை முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் செயலாளராக அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12ஆண்டு காலம் பொறுப்பிலிருந்து சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக, பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார்.
அப்போது விவசாயிகளின் பிரச்சினையில் தீவிர கவனம் மேற்கொண்டார். மூணாறு  தலைப்பு வெண்ணாறு பிரிவிலிருந்து பொன்னிரை வரை சுமார் 50 கீ.மீட்டர்  அனைத்து அரசியல் கட்சியினர், வெகுமக்கள் என 25 ஆயிரம் பேரை ஒரே நாளில் திரட்டி சிரமதான பணியில் ஈடுபடுத்தி  தூர்வாரும் பணியை மேற்கொண்டார்.

டெல்லியில் நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் மாநாட்டில் குடியரசுத்தலைவர், இந்திய பிரதமர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகவும் செயல்பட்டவர். தற்போது இரண்டாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் வெண்பா வழக்கறிஞராகவும், மகன் நண்பா பட்டப்படிப்பும் படித்து வருகிறார். எளிய குடும்பத்தில் பிறந்த இவர், செயலாற்றல் மிக்க எளிய தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர், சாதாரண, ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமைக்காக அனுதினம் களத்தில் நின்று போராடும் களப்போராளி, எளிய மக்களின் நம்பிக்கையை பெற்ற பெருமைமிக்க தொண்டர், தோழர், தலைவர். தற்போது நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் உணர்வுகள் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க மக்கள் ஊழியரை பொது மக்களும், வாக்காளர்களும் ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு: 94432 77300

தோழர்.கே.சுப்பராயன் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு

2024 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோழர்.கே.சுப்பராயன் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு:

பிறந்த தேதி: 10.08.1947
தொழில்: கட்சியின் முழுநேர ஊழியர்.

1976 ஆம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானர். திருப்பூரில் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வரும் இவர், பனியன் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்திலும் ஏஐடியூசி அமைப்பின் பல தொழிற்சங்கங்களுக்கும் பொறுப்பு வகித்தவர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலக்குழு உறுப்பினர், கோவை மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகக்குழு, செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு ஆகியவற்றின் உறுப்பினர், மாநில துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர்.

அதே போல் ஏஐடியூசி தொழிற்சங்க அமைப்பில் தமிழ்நாடு மாநிலத் தலைவர், தேசிய துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர். 1985 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை, மற்றும் 1996 முதல் 2001 வரை ஒன்றுபட்டு திருப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர்.

2004 முதல் 2009 வரை கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். தற்போது 2019 முதல் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். மக்கள் உணர்வுகள் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க மக்கள் ஊழியரை பொது மக்களும், வாக்காளர்களும் ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button