இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 99வது அமைப்பு தின விழா
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 99வது அமைப்பு தினம்
இரா.நல்லகண்ணு அவர்களின் 99வது பிறந்தநாள் விழா
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 99-வது அமைப்பு தின விழா, கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்றது.கட்சியின் அமைப்பு தினமான 1925 டிசம்பர் 26 அன்று பிறந்தவரும், தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவருமான மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு அவர்களின் 99-வது பிறந்த நாள் விழாவும் இணைந்து நடைபெற்றது.கட்சிக் கொடியை மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு எழுச்சி முழக்கங்களுடன் ஏற்றி வைத்தார்.
பின்னர், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையுரை ஆற்றினார். அப்போது, “டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல், மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மீள்வதற்குள் டிசம்பர் 18 ஆம் தேதி பெருமழையால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாயின. கனமழையில் தூத்துக்குடி மாவட்டம் மூழ்கியது. திருநெல்வேலி நகரம் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்
இந்த இயற்கை பேரிடரில் இருந்து மீண்டுவர ஒன்றிய அரசும் ஒத்துழைக்க வேண்டும். அதற்குத் தேவையான நிதி உதவிகளை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பேரிடரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மதிப்பிடப்பட்டு, 21,692 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு தேவை என முதலமைச்சர் கோரியிருக்கிறார். டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்த போது இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார். தேவையான உதவிகளைச் செய்வதாக பிரதமர் மோடியும் முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். மத்தியக் குழுவும் விரிவாக பயணம் செய்து, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளது. ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சரும் பார்வையிட்டுள்ளார். அதன் பிறகும், இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ள ஒன்றிய அரசு இதுவரை பேரிடர் நிவாரண நிதி வழங்கவில்லை.
ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க முடியாது என்கிறார். தமிழ்நாடு அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறாகப் பேசி, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் காலநிதியை முழுமையாக வழங்க வலியுறுத்தியும் சனவரி 8 ஆம் தேதி திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்தார். இதனையடுத்து பல்வேறு தலைவர்கள் உரையாற்றினர்.
ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் காலநிதியை முழுமையாக வழங்க வலியுறுத்தியும் சனவரி 8 ஆம் தேதி திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்”
பேரிடராக அறிவிக்க வேண்டும்
நிறைவாக தோழர் இரா.நல்லகண்ணு உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் புயல், மழை பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது வேதனை அளிக்கிறது. ஒரு தனிமனிதனுக்கு 99 வயது என்பது சாதாரண விஷயம். பேரிடர் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் பிறந்தநாள் பெருமை பாராட்டும் விழாவாக இருக்கக் கூடாது என்று கவலைப்பட்டோம்.
முதலமைச்சர் இங்கு நேரில் வருவதாக இருந்தார். பல்வேறு பணிகளால் வர இயலவில்லை என்பதால் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்துத் தெரிவித்தார். வெள்ளம், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒன்றிய பாஜக அரசு பேரிடர் கால நிவாரண நிதி வழங்காமல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவது சரியல்ல. பெருமழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கேட்டுள்ள 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம். இங்கு வந்துள்ள தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் இரா.நல்லகண்ணு தெரிவித்தார்.
தலைவர்கள் வாழ்த்து
முதலமைச்சரும் திமுகழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அலைபேசி வழியாக தோழர் இரா.நல்லகண்ணு அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பொதுச் செயலாளர் வன்னியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் ராஜசேகர், திரைப்படக் கலைஞர் சிவகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், பியூசிஎல் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் சங்கரலிங்கம், உழைக்கும் மகளிர் அமைப்பின் லில்லி மேரி மற்றும் கட்சியின் மாநில துணைச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.பெரியசாமி, மாநில செயற்குழு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், விவசாயிகள் இயக்கத் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என ஏராளமானோர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் விஜய் உள்ளிட்டோர் கைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
கட்சியின் அமைப்பு தினத்தையொட்டி ‘ஜனசக்தி’ வார இதழ் ஆசிரியர் டி.எம்.மூர்த்தி வெளியிட்ட சிறப்பிதழ்களை டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் மு.கண்ணகி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மாத நாட்காட்டியை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட, உழைக்கும் பெண்கள் அமைப்பின் (ஏஐடியூசி) தேசிய ஒருங்கிணைப்பாளர் வகிதா நிஜாம் பெற்றுக் கொண்டார். ஜனசக்தி ஊழியர்களுக்கு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு வழங்க 200 போர்வைகள் வழங்கப்பட்டன. அம்பத்தூர் லோகேஷ், அவரது மகள்கள் யாழினி, மிதுனா ஆகியோர் ரூ.13050 ம், ‘ஜனசக்தி’ வடிவமைப்பாளரின் மகன் சா.மு.தமிழ்மதி உண்டியலில் சேமித்த ரூ.1190 ம், வெள்ள நிவாரண நிதிக்காக தோழர்.இரா.நல்லகண்ணுவிடம் வழங்கினர். பாதுகாப்புத்துறை கிளையின் சார்பில் ரவிக்குமார், ரூ.2000, மாதர் தேசிய சம்மேளன மாநிலச் செயலாளர் மு.கண்ணகி ரூ.2208 கட்சி வளர்ச்சி நிதி வழங்கினர்.இந்த நிகழ்வின் தொடக்கத்தில் செல்வக் குடும்பத்தில் பிறந்தவரும், பாரிஸ்டர் பட்டம் பெற்ற வரும், கட்சியின் புகழ்மிக்க தலைவராக திகழ்ந்தவருமான கே.டி.கே. தங்கமணி அவர்களது 22-வது நினைவு நாளையொட்டி அனைவரும் அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
திருப்பூரில் பேரணி, பொதுக்கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 99ம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி திருப்பூரில் டிசம்பர் 24 அன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. அன்று மாலை அரிசி கடை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவரும் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன் எம்.பி. சிறப்புரை ஆற்றினார். அப்போது, “ஒருபோதும் கம்யூனிஸ்ட் கட்சி அழியாது. அத்தகைய தியாக பாரம்பரியம் கொண்ட கட்சி 99 வயது முடிந்து, 2024 டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 2025 டிசம்பரில் நூற்றாண்டு நிறைவடைகிறது. இந்திய நாடு முழுவதும் மாபெரும் தியாகம் செய்த, தியாகத்திலேயே பிறந்து, தியாகத்திலேயே வளர்ந்த கட்சி தன்னுடைய நூற்றாண்டு விழாவை வருடம் முழுவதும் கொண்டாட இருக்கிறது. அதற்கு ஒரு முன்னோட்டம் தான் இன்றைக்கு 99 வது ஆண்டு நிகழ்ச்சி. எனவே, அந்த மகத்தான நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும்” என்று சுப்பராயன் எம்.பி. குறிப்பிட்டார். (அவரது முழுச் சொற்பொழிவு அடுத்த இதழில் வெளிவருகிறது)
இந்த கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.காளியப்பன், புறநகர் மாவட்ட செயலாளர் கே.எம்.இசாக், மாநகரத் துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
சத்தியமங்கலத்தில் செங்கொடி அணிவகுப்பு
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலத்தில், செங்கொடி அணிவகுப்புடன் கட்சி அமைப்பு தினம் கொண்டாடடப்பட்டது. கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் சு.மோகன்குமார், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி.எல்.சுந்தரம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தொகுப்பு: வ.மணிமாறன்