செவிலியர்கள் கோரிக்கைகளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அளிக்கை
செவிலியர்கள் கோரிக்கைகளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கோவிட்-19 காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் மீண்டும் தங்களை பணியில் அமர்த்தவும் பணியை நிரந்தரப்படுத்தவும் வலியுறுத்தி தொடர்ச்சியாக கால வரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் 26.09.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு உயர்மட்ட குழு அமைத்து கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. போராடிய செவிலியர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளனர். போராடிய செவிலியர்களின் உணர்வை புரிந்து கொண்டு பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்வந்த தமிழ்நாடு அரசிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.