கட்டுரைகள்

கடலையும் விட்டுவைக்காத கார்ப்பரேட்டுகள்; மன்னார் வளைகுடாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்

வ.மணிமாறன்

ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தநிலை உரிமம் வழங்கும் கொள்கையின் பத்தாவது சுற்று ஏலத்தை (OALP-BID) அறிவித்துள்ளது.

11.02.2025 அன்று வெளியான இந்த அறிவிப்பில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் 9,990.96 சதுர கி.மீ. பரப்பு உள்ளிட்ட 25 ஆழ்கடல் தொகுதிகளும் (1,91,986 ச.கி.மீ. கடற்பரப்பு) இடம்பெற்றுள்ளது.

 

ஹைட்ரா கார்பன் எடுக்கப்பட உள்ள இந்த மன்னார் வளைகுடா பகுதியை, யுனெஸ்கோ பரிந்துரை அடிப்படையில் கடல்சார் உயிர்க்கோள காப்பகம் (Marine Biosphere Reserve) என 1989 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முதல் கடல்சார் உயிர்க்கோள காப்பகமாகும்.

மன்னார் வளைகுடா கடற்பகுதி, அரிய வகை பவளப் பாறைகள், கடல் புல் படுகைகள், கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள், காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிர் மண்டலமாகும். இயற்கைப் பேரிடர் காலங்களில் மீனவ கிராமங்களுக்கும் மீனவர்களுக்கும் பாதுகாப்பு அரணாகவும் இருந்து வருகிறது. கடல்சார் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டு, உலக பாரம்பரியத் தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மன்னார் வளைகுடாவில், ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏல அறிவிப்பு வெளியிட்டிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் மட்டுமல்ல, மீனவ மக்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வரையிலும் பரவியுள்ளது. லட்சத்தீவு கடலின் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையின் மேற்கு கரைக்கும் இடையே இந்தியப் பெருங்கடலில் 560 சதுர கி.மீ பரப்பளவில் விரிந்து கிடக்கும் வளைவான கடற்பகுதியாகும். காரை சல்லித் தீவு, விலங்கு சல்லித் தீவு, வான்தீவு உட்பட 21 தீவுகளும், பல்வேறு வகையான கடல் வாழ் உயிரினங்களின் புகலிடமாகவும் உள்ளன. அரிய கடற்பசு இனத்தை பாதுகாப்பதற்கான இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழ்நாடு அரசு செப்டம்பர் 2021ல் அறிவித்துள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் போது, வெளியேற்றப்படும் மண் மற்றும் கழிவுகளால் பல்லுயிர் வளம் பேரழிவுக்கு உள்ளாகும். மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

ஆழ்குழாய் பதிப்பதற்காக தூண்கள், வழித்தடங்கள் அமைப்பதற்காக குழிகள் தோண்டும்போது பெரும் நில அதிர்வு ஏற்படும். இப்பணிகளின் போது வெளியாகும் சக்தி வாய்ந்த ஒலி, ஒளியால் கடலின் இயல்பு நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் போது, அவற்றுடன் ஆழ்கடலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் படிந்துள்ள நச்சு வாயுக்களும் வெளியேறும். இதனால் கடல்நீர் நச்சுத்தன்மை அடைந்து, கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் போது வெளிவரும் கழிவு மணல் முழுவதும் அகற்றப்படாமல், கடலிலேயே மீண்டும் கொட்டப்படும். வேதிப்பொருள்களுடன் கூடிய இந்த மண், அரிய வகை பவளப் பாறைகளை அழித்துவிடும். கடல் நீர் மாசடைவதால் மீன்கள், இறால், நண்டு மற்றும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழியும். மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கிவிடும்.

இப்பகுதியில் உள்ள 180 மீன்பிடி துறைமுகங்களில் 1,900 விசைப்படகுகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், வல்லம் போன்றவற்றின் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் மீன் வர்த்தகம் நடைபெறுகிறது. 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. இவை அனைத்தும் முடக்கப்பட்டுவிடும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோள காப்பகத்துக்கும், அரிய வகை பவளப் பாறைகள், கடற்பசுக்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளிலும் கடற்பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கனவே விடுக்கப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் நிறுத்தப்பட்டன.

அதுபோன்ற நிலைமை மன்னார் வளைகுடா ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் ஏற்படுவதற்கு முன்னரே, அப்பகுதியின் முக்கியத்துவம் கருதி ஒன்றிய அரசே கைவிட வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்பு தமிழ்நாட்டு அரசிடம் ஒன்றிய அரசு கருத்துக் கேட்கவோ ஆலோசனை நடத்தவோ இல்லை என்பதுதான் பெரும் சோகம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button