கோரல் மில் வேலைநிறுத்தத்தை கூலி உயர்வுக்கானதாகக் கருதாமல் அரசியல் போராட்டமாக மாற்றினர். வ.உ.சிதம்பரனாரின் சொல்லுக்கு இணங்கி, படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறிய பெரிய வணிகர்கள், குதிரை வண்டிக்காரர்கள், ஓட்டல்காரர்கள், துணி துவைப்பவர்கள், நாவிதர்கள், வெள்ளையர்களின் வீட்டுப் பணிப்பெண்கள் உட்பட எல்லோரும் ஒன்று திரண்டனர்.
வெள்ளையர் பயந்து போயினர். இரவு நேரத்தில் கடலில் மிதக்கும் வெள்ளைக் கப்பலுக்குச் சென்று தங்கினர். அவர்களுக்கான மளிகைப் பொருட்கள் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டன.
வெள்ளையருக்கு மட்டுமல்ல; அவர்களை ஆதரித்த இந்தியருக்கும் இதே கதிதான். ரங்கசாமி அய்யங்கார் என்றொரு வக்கீல். பாதி சவரம் செய்து கொண்டிருக்கும் போது, கலெக்டர் செய்வதுதான் சரி எனச் சொல்லியிருக்கிறார். சவரத் தொழிலாளி அப்படியே விட்டுவிட்டுப் போய் விட்டார். மற்ற தொழிலாளர்களும் அவருக்கு சவரம் செய்ய மறுத்துவிட்டனர். (அந்தக் காலத்தில் செல்ஃப் ஷேவிங் கிடையாது).
உதவி கலெக்டர் ஆஷ் ‘துரை’, என்ன நேருமெனத் தெரியுமா? என்று வ.உ.சியை மிரட்டினான்.
“மனிதன் சாவதற்கே பிறக்கிறான். எவ்வாறு சாவோம் என்று ஒருவன் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியர்கள் சாகப் பயப்படுவதில்லை” என்று பதிலுரைத்தார் வ.உ.சிதம்பரனார்.
கோரல் மில் வேலைநிறுத்தம் ஏழு நாட்கள் நீடித்தது. மில் முதலாளிகளான வெள்ளையர்கள் பணிந்தனர். 50 சதவீதம் சம்பள உயர்வு, ஞாயிறன்று மில்லுக்கு வார விடுமுறை, மதிய உணவு இடைவேளை, அவசரமானால் சம்பளமில்லாத விடுப்பு ஆகியவற்றை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
1908 மார்ச் 7 ஆம் தேதி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக முடித்து வேலைக்குத் திரும்பினர்.
“நாம் வெள்ளையர்களை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளோம். இந்த நாள் உங்களுக்கும் எனக்கும் பெருமைக்குரிய நாள்” என்று தொழிலாளர்களை வாழ்த்திப் பேசி வேலைக்கு அனுப்பி வைத்தார் வ.உ.சிதம்பரனார்.
(இன்னும் வரும்)
கட்டுரையாளர்:
டி.எம்.மூர்த்தி
தேசிய செயலாளர், ஏஐடியுசி
ஆசிரியர், ஜனசக்தி