COP 27: ஏமாற்றம் அளிக்கும் மாநாடு
COP 27 எனும் ஐ.நா அமைப்பின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு இந்த ஆண்டு நவம்பர் 6 முதல் 18 ஆம் தேதி வரை எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-எல்-ஷேக் நகரில் நடைபெற்றது. ஏறத்தாழ 190 க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இப்பூமண்டலத்தை அச்சுறுத்தி வரும் புவிவெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் மற்றும் இவற்றின் விளைவுகளில் இருந்து உலக மாந்தரைப் பாதுகாத்திட இம்மாநாட்டில் தீர்மானகரமான நல்ல முடிவுகள் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. ஆனால், எவ்வித தீர்மானகரமான முடிவுகளும் எட்டப்படாமல் இம்மாநாடு நிறைவுற்றிருப்பது வேதனைக்குரியதாகும்.
இம்மாநாடு குறித்து ஐ.நா அமைப்பின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரஸ் வெளிப்படுத்தியுள்ள பெருத்த ஏமாற்றம் வெகு விரைவில் உலகம் முழுவதும் எதிரொளிக்கும் என்பது நிச்சயம் ஆகும். இப்பூமண்டலம் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. நச்சு வாயு வெளியேற்றத்தை உடனடியாக பெருமளவிற்கு குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இம்மாநாடு விவாதிக்கவில்லை.” என்று அவர் வேதனைபட கருத்து வெளியிட்டுள்ளார்.
இம்மாநாடு குறித்து சர்வதேச அளவில் பல செய்தி ஊடகங்களும் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. சி.என்.என் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் பெரும்பாலானவை வெளிப்படுத்திய கடும் எதிர்ப்பு காரணமாக, படிம எரிபொருட்கள் (Fossil Fuels) பயன்பாட்டைப் படிப்படியாக அகற்றுவது குறித்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இம்மாநாடு தோல்வி அடைந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் பேரிடர்களை ஏழை நாடுகள் எதிர்கொண்டு சமாளித்திட, இழப்பு மற்றும் சேதங்களுக்கான பிரத்யேக நிதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு முடிவு செய்துள்ளது. 2030 ஆம் ஆண்டின் போது, பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றம் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கம், இம்மாநாட்டில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும், புவிவெப்பமயமாதலுக்கும், பருவநிலை மாற்ற நெருக்கடிக்கும் முக்கிய காரணமாக இருக்கும் அனைத்து படிம எரிபொருட்களையும் படிப்படியாக குறைப்பதற்கான முன்மொழிவை, எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல நாடுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியாமல் போனது.”
வெகுகாலத்திற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கைகள் தற்போதும் மேற்கொள்ளப்படாதது மிகுந்த வேதனை அளிப்பதாக ஜெர்மனியின் அயலுறவுத்துறை அமைச்சர் பேயர்பாக் கூறியுள்ளார்.
ப்ளூம்பர்க் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐ.நா அமைப்பின் பருவநிலை மாற்றம் குறித்த இம்மாநாடு தோல்வியுறுவது தவிர்க்கப்பட்டு உள்ளது. இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சமரசங்கள் காரணமாக, நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான புதிய முயற்சிகள் குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.
பருவநிலை மாற்றம் உருவாக்கிடும் பேரிடர்களை வளரும் மற்றும் ஏழை நாடுகள் எதிர்கொண்டு சமாளித்திட ஒரு பிரத்யேக நிதி உருவாக்கப்பட வேண்டும் என்று கடந்த மூன்று தசாப்தங்களாக கோரப்பட்டு வந்தது. அதற்கான ஒப்பந்தம் இம்மாநாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி ஏற்பாடு எவ்வாறு இயங்கும் என்பது குறித்த தகவல்கள் மற்றும் இந்த நிதிக்கான பணக்கார நாடுகளின் பங்களிப்பு குறித்து அடுத்த சில மாதங்களில் தான் தெரியவரும். அடுத்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள COP 28 மாநாட்டில் இந்த நிதி ஏற்பாடு குறித்த விவரங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் புதிய நிதி ஏற்பாட்டின்படி, நிதிப் பங்களிப்பு செய்யவிருக்கும் பணக்கார நாடுகளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் சீனா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் பலவும் இடம்பெறவுள்ளன. எனினும், இந்த நிதி ஏற்பாடு குறித்து ஐயம் நிலவுகிறது. பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகள், அவை அளித்த வாக்குறுதிப்படி செயல்படுவதில்லை என்பதுதான் நடைமுறை அனுபவமாக இருந்து வருகிறது.
பருவநிலை மாற்றத்திற்குக் காரணமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்குப் (Adaptation) பதிலாக, இழப்பு மற்றும் சேதத்தை (Loss and Damage) நாம் ஏன் கொண்டாடுகிறோம்? என்று மாலத்தீவு அயலுறவுத் துறை அமைச்சர் அமினத் சவ்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
COP 27 மாநாட்டு பேச்சுவார்த்தைகளில் எகிப்து நாட்டின் அயலுறவுத் துறை அமைச்சர் சமேஹ் சவுக்கரே தலைமை வகித்தார். மாநாட்டு நடவடிக்கைகளில் நாசூக்கான அணுகுமுறையையே அவர் கடைபிடித்தார். மாநாடு தோல்வியுறுவதைத் தவிர்த்திடவே பேச்சுவார்த்தைகள் நீட்டிக்கப்பட்டன; இறுதிகட்ட சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கவ் நகரில் நடைபெற்ற COP 26 மாநாட்டின் போது விவாதிக்கப்பட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த மாநாட்டின் போது இடம்பெறவில்லை அல்லது நீர்ந்து போயிருப்பதாக COP 26 மாநாட்டிற்கு தலைமை வகித்த அலோக் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
COP 27 மாநாட்டின் நிகழ்வுகளில் படிம எரிபொருள் துறையின் பிரதிநிதிகள் ஆதிக்கம் செலுத்தியதாக ஒரு பரவலான விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் உறுப்பு நாடாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் COP 28 நடைபெற இருப்பதால், படிம எரிபொருட்களுக்கு எதிரான தற்போதைய நிலைப்பாட்டின் தீவிரத்தன்மை நீர்ந்து போகக்கூடிய அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
தி கார்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் பேரிடர்களை எதிர்கொள்ளவும், அவை காரணமாக உண்டாகும் இழப்பு மற்றும் சேதங்களைச் சமாளிக்கவும், கடந்த மூன்று தசாப்தங்களாகவே வளரும் நாடுகள் நிதி உதவி கோரி வந்துள்ளன. அதற்கான ஒப்பந்தம் இந்த மாநாட்டில் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி எவ்வாறு உருவாக்கப்படவுள்ளது? எவ்வாறு வழங்கப்பட உள்ளது? என்பது குறித்து இதுவரையில் தெளிவான தகவல்கள் இல்லை.
கடந்த ஆண்டு கிளாஸ்கவ் நகரில் நடைபெற்ற COP 26 மாநாட்டில், நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. படிம எரிபொருட்கள் மீதான தீர்மானம் முதல்முறையாக இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டது. COP 27 மாநாட்டில், அனைத்து படிம எரிபொருட்கள் பயன்பாடும் குறைக்கப்பட வேண்டும் என்ற அம்சம் சேர்க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியுற்றது. கிளாஸ்கவ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமே தற்போதும் தொடர்கிறது.
இவ்வாறு, செய்தி ஊடகங்களின் அறிக்கைகள் COP 27 மாநாடு குறித்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதாரம்: CounterCurrents இணைய இதழ்
தமிழில்: அருண் அசோகன்