COP 27 – அணு ஆயுதங்களும், பருவநிலை மாற்ற நெருக்கடியும்
மனிதகுலம் அழிவை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. வாழ்வதற்கு ஏற்ற பூமண்டலத்துக்கான ஒரு போராட்டத்தில், வெற்றி அல்லது தோல்வி என்பது இந்தத் தசாப்தத்தில் முடிவுக்கு வரும் என்று ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-எல்-ஷேக் நகரில் நடைபெற்ற COP 27 எனும் ஐ.நா சபை அமைப்பின் பருவநிலை மாற்ற நெருக்கடி தொடர்பான உச்சி மாநாட்டில் உலக தலைவர்களிடையே உரையாற்றிய ஐ.நா பொதுச் செயலாளர், ” நமது வாழ்க்கைக்கான போராட்டத்தில் நாம் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம். மீண்டும் ஈடு செய்யமுடியாத அளவிற்கு, நமது பூமண்டலம் மிக வேகமாக நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த இரண்டு வாரம் நடைபெறவுள்ள [ நவம்பர் 6 – 18 ] பேச்சுவார்த்தையின் போது, பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் அல்லது பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பேரழிவுகளை ஏற்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.
உலகம் முழுவதிலுமுள்ள அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இம்மாநாட்டில் பங்கேற்றன. 33,449 பங்கேற்பாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பூமியின் தட்ப வெப்ப நிலை அதிகரிப்பு, பனிமலைகள் உருகுவது, கடல்நீர் மட்டம் அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாக, தொடர் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்று வருகிறது. பருவநிலை மாற்ற நெருக்கடிக்கு காரணமாக இருந்து வரும் காரணிகளைக் கட்டுப்படுத்தி, குறைக்க வேண்டும் என்று அரசாங்கங்களை வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு கூட்டங்களின் தொடர்ச்சியாக இம்மாநாடு நடைபெற்றது. பருவநிலை மாற்ற நெருக்கடியைக் கட்டுப்படுத்திட, முழு அளவிலான ஈடுபாடு இன்றி, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பருவநிலை மாற்ற நெருக்கடியை மேலும் தீவிரமாக்கின.
பருவநிலை மாற்ற நெருக்கடிக்கு மிகப்பெரும் காரணியாக இருக்கும் வாயுக்களின் உற்பத்திக்கு, அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகளே முக்கிய காரணமாக உள்ளது. ஆயுதங்களின் உற்பத்தி, பராமரிப்பு, போக்குவரத்து, பயன்பாடு ஆகிய இவை அனைத்திலும் ஆற்றலின்/சக்தியின் பயன்பாடு மிக அதிக அளவில் தேவைப்படுகிறது. தற்போது, நடைபெற்று வரும் ரஷ்ய-உக்ரைன் போரில், ஆயுதங்களின் அதிகப்படியான பிரயோகமும் பருவநிலை மாற்ற நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்தப் போர் முடிவுக்கு வரும் என்பதற்கான எந்தவொரு குறியீடும் தென்படவில்லை. போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. அணுமின் நிலையங்கள் தொடர்ந்து அபாயத்தில் உள்ளன. எனவே, உலகின் பல்வேறு பகுதிகளில், பதற்றமான சூழலைக் குறைத்திட, நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதன் மூலம், ஆயுதங்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
தற்போது, உலகில் உள்ள ஏறத்தாழ 17,000 அணு ஆயுதங்கள் பருவநிலைக்கும், அதன் மூலமாக, பூமண்டலத்தின் அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தை உருவாக்கக் கூடியவை ஆகும் என்று அமெரிக்காவில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் சூழலியல் துறை நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மேலும் ஒரு ஆய்வு தெரிவித்துள்ள தகவலின்படி, ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டைப் போல் நூறு அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டால் 200 கோடி மக்களுக்குப் பேராபத்து ஏற்படும். அது போன்றதொரு தாக்குதல் நடந்தால் 2 கோடி மக்கள் கொல்லப்படுவர்; பெருநகரங்கள் அழிந்துவிடும்; கதிரியக்க பிரச்சனைகள் ஒரு கண்டம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால் ஏற்படவிருக்கும் உலகளாவிய விளைவுகள் மிகவும் அபாயகரமானவை ஆகும். பூமிக்கு வரும் சூரியனின் கதிர்கள் பெருமளவு தடைபட்டு பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை சராசரியாக 1.25 டிகிரி செல்ஸியஸ் குறையும்; இந்த நிலை பல ஆண்டுகள் நீடிக்கும். இதன் காரணமாக, உலக அளவில் மழையின் அளவு 10% குறையும். மழை பொழிவின் அளவு குறையும் பட்சத்தில், வேளாண் பயிர் விளைச்சலும் குறைந்து விடும்; உணவுத் தட்டுப்பாடு உண்டாகும். அதன் நீட்சியாக, உணவுப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயரும். உலகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்குப் போதுமான சத்துணவு கிடைக்காத நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். வேளாண் உற்பத்தியில் ஏற்படக்கூடிய ஒரு சிறு அளவிலான திடீர் சரிவு கூட, பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தி விடும். ஒரு ஆண்டிற்கும் மேல் பஞ்சம் நீடித்தால், உலகின் தென் பகுதியில் பட்டினியால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
பெரும் பஞ்சம் நீடிக்கும் காலத்தில் தொற்று நோய்களின் பரவல் அதிகரிக்கும். சமீப காலத்தில், நாம் பாதிப்புக்கு உள்ளாகாத பிளேக் போன்ற நோய்கள் மீண்டும் அப்போது பெரும் சுகாதார பிரச்சனையாக வெடித்துக் கிளம்பும்.
உணவு தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மோதல்கள் உருவாகும் சூழலில், அத்தகைய மோதல்கள் அணு ஆயுதப் போராகத் தீவிரமடையக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. அணு ஆயுதங்கள் பயன்பாடு ஏற்படுத்தும் கதிரியக்க விளைவுகள் நோய் தொற்றுகளை உண்டாக்கி இறப்பு விகிதத்தைக் கூட்டும். இதனடிப்படையில், எகிப்து நாட்டில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இயக்கங்கள் நடைபெற்றன. உலக நன்மை கருதி அணு ஆயுதங்களை ஒழித்திட வேண்டும் என்ற கருத்து அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உள்ளது.
அணு ஆயுத உற்பத்திக்கான செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணு ஆயுதங்கள் சட்ட விரோதமானவை என்றும், அவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் ஐ.நா சபை பிரகடனப்படுத்தியுள்ளது என்ற போதிலும், அணு ஆயுத உற்பத்தி மற்றும் பரவல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அணு ஆயுதங்களுக்காக மேற்கொள்ளப்படும் செலவினம் மக்கள் நலவாழ்வு திட்டங்களுக்கு பெரும் தடைகளாக உள்ளன. அமைதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் இதற்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டியது முதற்கடமையாகும். போர்கள் காரணமாகத் தீவிரமாகி வரும் பருவநிலை மாற்ற நெருக்கடிக்கு முன்னுரிமை அளித்து இந்தப் பிரச்சனையை COP 27 மாநாடு விரிவாக விவாதித்து இருக்க வேண்டும். அது குறித்த நடவடிக்கைகள் வருங்காலத்திலும் தொடர வேண்டும்.
நன்றி – நியூ ஏஜ், டாக்டர் அருண் மித்ரா
தமிழில் – அருண் அசோகன்