முன்னணி எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

முன்னணி எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னோடியும், முன்னணி எழுத்தாளருமான இரா.நாறும்பூநாதன்(64) இன்று (16.03.2025) காலை காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில் 1960 ஆண்டு பிறந்த நாறும்பூநாதன், தமிழாசிரியாக பணிபுரிந்த தந்தை இராமகிருஷ்ணன் வழியாக இலக்கிய நூல்கள் வாசிப்பை தொடங்கினார். திகசி, வல்லிக்கண்ணன், மேலாண்மை பொன்னுசாமி போன்ற மூத்த தலைமுறை படைப்பாளர்கள் வழியாக ஊக்கம் பெற்று எழுத தொடங்கியவர். வீடு, குடும்பம் அதற்குள் நிலவும் உறவுகள், பிரச்சினைகள் என்பதையே பெரும்பாலும் களமாகக் கொண்டு படைப்புகளை வழங்கியுள்ளவர்.
வழக்கமான நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட மாரடைப்பு தாக்குதல், அவரை பறித்துக் கொண்டது. இன்னும் இருபதாண்டுகள் வாழ்ந்து சமூகத்திற்கு நற்சிந்தனைகளை வழங்க வேண்டியவரை இழந்து நிற்பது பெரும் துயரமாகும்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் சிவகாமி சுந்தரி, மகன் தீபக் ஆகியோருக்கும், படைப்புலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.