செழுமையும் வளமையும் பொருந்திய மனித வாழ்க்கை, பூரண இன்பத்தை லட்சியமாக்கி, தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கிறது. சக்தி நிறைந்த மனிதர்கள், முழுமையை நாடி, கலகமும் குழப்பமும் புரிந்து முட்டுக்கட்டைகளையும் கட்டுப்பாடுகளைத் தாண்டியும் தகர்த்தும் தயங்காமல் முன்னேறுகிறார்கள். அத்தகைய வீரர்களின் வாழ்வு பின்வருவோர்க்குத் தீபஸ்தம்பம் போன்றும், அரும்பயன் அளிக்கிறதென்பது ஒருதலை. “ஒளியின் மேல் ஒளி வேண்டும்” (light more light) என்றார். ஜெர்மானியப் பேராசிரியர் காத்தே. ஜீவ ஒளியை நத்தி நிற்பது, வாழ்வின் இயல்பு.
சராசரித் தமிழன், குருடன், செவிடன், ஊமை, புலவர் கேலி செய்யுமாறு “வேடிக்கை மனிதனாய்” வாழ்கிறான். கவியரசோடு கூடி “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று தெருத்தெருவாகப் பாடி அழுதாலும் தமிழன் வாழ்வு உயரும் என்று எனக்குப் புலப்படவில்லை. அழுதும் தொழுதும் அல்லலை அகற்றுவது அசாத்தியம். அடிமையும் கொடுமையும் கெஞ்சிக் கூத்தாடுவதால் மாயமாட்டா. தரித்திர தரிசனத்தை நீக்க, மண்டியிட்டுச் சலாம் செய்வது வீண் வேலை. கும்பிட்டால் கூண்டோடு கைலாசம்தான் கிட்டும். பசு போன்ற பரம சாதுத் தன்மையைச் சுட்டெரித்துச் சாம்பலாக்கி, பம்பரம் போல் உழைத்தால்தான் விமோசனம் உண்டு.
சோவியத் வாழ்வால் மனித சமாஜத்தை நிர்மாணித்த தோழர் லெனினுடைய வாழ்க்கை வரலாறு, உலகத் தொழிலாளிகட்கு – சர்வதேச சமதர்மிகட்கு – சிறப்பாக இளந்தமிழர்கட்கு அறிவிலே உண்மையை ஏற்றி, நரம்பிலே அன்பைத் தாக்கி, குருதியிலே வீரத்தைக் கலந்து, எலும்பிலே ரோஷத்தைப் பாய்ச்சி, புத்துயிரையும் புது உணர்ச்சியையும் கூட்டும் என்பது எனது துணிவு. உலகப் பிரசித்திபெற்ற பேராசிரியர் “ரோமெயின் ரோலண்டு தற்காலத்தில் கர்மயோகியும் மகா தியாகியும் லெனின் ஒருவர் தான்” என்று லெனினுக்குப் புகழ்மாலை சூட்டியிருப்பதை நோக்குங்கள்.
உலகத்தின் நாலா பக்கத்திலுமுள்ள பரோபகாரிகளும் லோகோபகாரிகளும் லெனினுக்கு வண்டி வண்டியாகக் காணிக்கை செலுத்தியிருக்கிறார்கள். இரண்டொன்றைக் கீழே தருகிறேன்.”மனித சமத்துவத்தை, முக்கியமாக ஐரோப்பியர் – ஆசியாக்காரர் சமத்துவத்தை அனுபவம் வாயிலாக நிலைநிறுத்திக் காட்டியுள்ள ருஷ்யக் குடிஅரசு வீரர் லெனின்” என்று ஆப்கான் அமீராயிருந்த அமானுல்லா, லெனின் பிரேதத்தைக் கண்ட பொழுது கூறினார். தோழர் ஜவஹர்லாலும் லெனினுடைய சவத்தைப் பார்த்துவிட்டு “சாவிலும் லெனின் சர்வாதிகாரிதான்” என்று உள்ளத்தைப் பறிகொடுத்து, ஓங்கு புகழ் பாடுகிறார். இன்னும் “லெனினும் காந்தியும்” என்னும் பெயரோடு ரெனிபுல்லாப் மில்லர் எழுதிய பெயர் பெற்ற புத்தகத்திற்கு வியன்னாந் பத்திரிகையொன்றில் மதிப்புரை எழுதிய எர்னஸ்ட்லோதர் என்பவர். “(லெனின்) ஓர் இரவில் நூற்றாண்டு வளர்ச்சியை ருஷ்யாவிற்கு அளந்துவிட்டார்.” என்று லெனினை ஏற்றிப் போற்றுகின்றார். லெனினைப் பற்றிக் கூறுமிடத்து “லெனினிடம் சந்தேகமும் உறுதியும், தெளிவும், மயக்கமும், காரிய வாதமும், மனோராஜ்யமும் கலந்துறவாடின. அவர் குளிர்ந்த தீமலை; பனிக்கட்டி நெருப்பு” என்று வர்ணிக்கிறார் நிற்க.
தமிழ் பாஷையில், “லெனின் சரிதம்” குறிப்பிடத் தகுந்த மாதிரி ஒன்றுகூட வெளி வராதது பெருங்குறைதான். அப்பெருங்குறையை நிவர்த்திக்க வேண்டியது விஷயமுடையோரின் முதல் பெருங்கடமை. லெனினை ருஷ்யத் தலைவராகக்கொண்டு, இந்நூலை எழுதுவது என் நோக்கமல்ல. நெருக்கடியான சந்தர்ப்பத்தில் மனித வர்க்கத்தின் சரித்திரத்தையே மாற்றியமைத்த உலகத் தலைவர் என்று காட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம். லெனின் ஒப்புயர்வற்ற வீரராயினும், அவரைத் “தனிப்பெரும் வீரராய் (காந்திஜியை தேசபக்தர்கள் காட்டுவது போல்)” காட்டவேண்டும் என்பது எனது முக்கிய லட்சியமன்று; தற்காலத்தில் வாழும் நம்மை நேரடியாக, பாதிக்கும் ஒரு உலக இயக்கத்தின் (world movement) பொறுப்பு வாய்ந்த பிரதிநிதியும் தலைவரும் என்கின்ற தோரணையில் சித்திரித்துக் காட்டவே முயற்சித்துள்ளேன்.
உயிருள்ள கழுதை செத்துப்போன சிங்கத்தை உதைப்பதோடு நில்லாமல், இன்னும் மகாமோசமாக தனது கழுதை குணத்திற்குத் தகுந்தாற்போல் சிங்கத்தின் குணாதிசயங்களை அங்கீகரித்து, ஆதரித்து ஸ்தோத்திரம் பாடவும் செய்யும். அதுபோல் லெனின் உயிரோடிருக்கும் போது, துவேஷ தூக்ஷணை விஷயத்தைக் கக்கிய, பூர்ஷ்வாக்களின் (முதலாளிகளின்) தாஸானு தாஸர்களும், நடைமுறைச் சமூகத்தில் குலாமிகளும், தங்களுக்கு ஆபத்தில்லாதவாறு அவர் இறந்தபின் இன்று ஒன்றுகூடி தோத்திரம் கீர்த்தனம் பாடுகிறார்கள். மறைந்துபோன புரட்சிக்காரர்களை, இவ்விதம் ‘மகாத்மா வாக்கும் தன்மை’ யைப் பற்றி, கடுமையான சொற்களால் பின்வருமாறு லெனின் எழுதுகிறார்:-
“பெயர் பெற்ற புரட்சிக்காரர்கள் உயிரோடிருந்த காலத்தில் ஆதிக்கவெறி பிடித்த ஆளும் வகுப்பாரின் கொடிய அடக்குமுறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் பலகாலும் இரையாகிவிடுகிறார்கள். அன்னாருடைய (புரட்சிக்காரர்களின்) உபதேசங்கள், மகாஅநாகரிமான எதிர்ப்புகளாலும், கோபாக்னியை உமிழும் தூஷணைகளாலும் இரக்கமற்ற இடையறாத பொய்யும் புளுகும் சிந்தனையும் நிறைந்த விஷமப் பிரச்சாரங்களாலும் மரியாதை செய்யப்பட்டன. அவர்கள் இறந்தபின், வழக்கம்போல் அவர்களை அபாயமற்ற பரம சாதுக்களாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அவர்கள் மகாத்மாக்களாகவும் பரிசுத்தவான்களாகவும், ஆக்கப்படுகிறார்கள். அடிமைப்படுத்தப்பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் முறையில் ஒரு தினுசாக, அவர்களுடைய (புரட்சிக்காரர்) பெயர்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதே சமயத்தில் அவர்களுடைய சக்தி நிறைந்த புரட்சித் தத்துவங்கள் சாரமற்ற சக்கையாக்கப்பட்டு அவைகள் அசைப்பியமும் ஆபாசமும் கொண்டதாகக் கருதப்பட்டு, அவர்களுடைய புரட்சியின் கூரிய முனை மழுங்கப்படுகிறது.” (அரசும் புரட்சியும் – லெனின்)
“மகாத்மாவாக்குதல்”, லெனின் விஷயத்தில் சம்பூரணமாகிவிட்டது என்றே சொல்லலாம். புரட்சியின் பரம விரோதிகளும், பல்டியடித்த சீர்திருத்தவாதிகளும், பிற்போக்காளர்களும், வைதீகத் தலைவர்கள் (conservative leaders) கூட பரவிவரும் புரட்சி உணர்ச்சியைத் தளர்த்திவிட வேண்டி லெனின் “யதார்த்தவாதி” (realist) என்றும், சிறந்த ராஜதந்திரி (statesman) என்றும் புகழத் தலைப்படுகிறார்கள்.
மேல் நாட்டில் லெனினைப் பற்றிப் பல நூல்கள் எழுதப்பட்டுவிட்ட போதிலும், மிகச்சொற்பமே அவருடைய வாழ்க்கை, வேலை உபதேசங்களின் புரட்சிமுனை மழுங்காமல் படம் பிடித்திருக்கின்றன. லெனின் வாழ்க்கையின் சாரமே, கொள்கையும் செயலும் இரண்டறக் கலந்து, அபேதமாக இயங்க வேண்டும் என்பதுதான். புராணத்தையும் பாகவதங்களையும் பாராயணம் செய்யும் பக்த கோடிகள் போன்ற சோம்பேறிகளுக்கும், தர்க்கலா சபையில் மணிக்கணக்காக உட்கார்ந்து பிய்த்துப் பிய்த்து, அலசி அலசி மண்டையை உடைத்துக் கொள்ளும் வறட்டு அறிஞர்கட்கும், “லெனின் சரிதம்” பெரிதும் பயன்படாது. சரித்திர பூர்வமான உலக இயக்கத்தைத் தேர்ந்து தெளிய விரும்புவோருக்கும், நமது கண்முன் நிற்கும் உலகப் பிரச்சினைகளையும் உணர்ந்துகொள்ள அவாவோர்க்கும், லெனினுடைய வாழ்வும் வரலாறும் திட்டமாக ஒத்தாசை செய்யும்.
முடிவாக இளந்தமிழரில் பிற்போக்காளராயுள்ள ஒரு சிலருடைய “காந்தி பக்தி” யையாவது இந்நூல் காலை வாரிவிடுமானால் அதுவே இதற்குப் போதிய பயனாகும் என்று யான் மகிழ்வேன்.
குறிப்பு: லெனின் சரிதம் என்ற நூலுக்கு எழுதிய அறிமுகவுரை
(சமதர்மம் 12-9-1934 இதழில் வெளியானது)