தமிழகம்

பொதுவாழ்வில் முன்னுதாரணமாகத் திகழ்ந்த தோழர் என்.சங்கரய்யா மறைவு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

தோழர் என்.சங்கரய்யா மறைவு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வணக்கம் செலுத்துகிறது

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா (வயது 102) இன்று (15.11.2023) சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது.

சிறு வியாபாரக் குடும்பத்தில் 1921 ஆம் ஆண்டு பிறந்த தோழர் என்.சங்கரய்யா பள்ளி மாணவப் பருவத்தில் நாட்டின் விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் பயின்ற காலத்தில் மாணவர்களைத் திரட்டி போராடுவதில் பொது வாழ்வைத் தொடங்கினார். மதுரை மாணவர் சங்கம் உருவாக்கியதில் பெரும் பங்களிப்பு செய்தவர். இந்த அமைப்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றமாக உருவாக்கப்பட்ட போது அதன் முதல் மாநிலச் செயலாளராகப் பணியாற்றியவர்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மதுரை மாவட்டத்திலும், சுற்று வட்டாரத்திலும் கட்சி அமைப்புகளையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பு ரீதியாகத் திரட்டி போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்டம் மற்றும்  மக்கள் நலப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைச் சென்றவர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளராக பணியாற்றிய தோழர் என்.சங்கரய்யா, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வு பெற்று, சிறப்பாக செயல்பட்டவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் செயல்பட்டவர்.

பொது வாழ்வுப் பணியில் முன்னோடியாக திகழ்ந்து வந்த தோழர் என்.சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர்’ விருது கொடுத்து பெருமைப்படுத்தியது.

சிறு வயது முதல் இறுதி மூச்சு சுவாசித்த காலம் வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொது வாழ்விற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த தோழர் என்.சங்கரய்யாவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button