வணிக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பாஜக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள் வணிக வகை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 209 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1898/- ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலையில் ரூ.200 குறைக்கப்பட்டதாக ஆரவார முழக்கம் செய்தனர். ஆனால், தற்போது வணிக நிறுவனங்கள் ஆகஸ்டு மாதம் கொடுத்த விலையைவிட சிலிண்டருக்கு ரூ.46 அதிகம் தரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு தேநீர் கடைகள், உணவகங்கள், தெருவோர வணிகம் என பல பிரிவினரையும் கடுமைப் பாதிப்பதுடன், இதன் வழி சேவை பெறும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். விலை குறைப்பு செய்தது போல் நாடகமாடி, முன்னிலும் அதிகமான விலை ஏற்றி மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.