கோவை கே.ஜி.ஜெகநாதன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
தொழிற்சங்க இயக்கத்தின் முன்னணி தலைவர் கோவை கே.ஜி.ஜெகநாதன் (72) 06.03.2025 ஆம் தேதி இரவு உடுமலைப்பேட்டை அருகில் உள்ள இலுப்பை என்ற ஊரில் காலமானார்.
கே.ஜி.ஜெகநாதன் கோவையின் முன்னணி தொழில் நிறுவனமான டெக்ஸ்டூல் நிறுவனத்தில் பொருள் காப்பாளர் பணியில் சேர்ந்தவர். இதன் மூலம் கோவை மாவட்ட பொறியியல் பொதுத் தொழிலாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தொழிற்சங்கப் பணியிலும் ஈடுபட்டவர். சங்கத்தின் பொதுக் குழு உறுப்பினர் தொடங்கி, பொதுச் செயலாளர் பொறுப்புக்கு உயர்ந்து, அதில் நீண்ட காலம் பணியாற்றியவர்.
தொடர்ந்து கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பொறுப்பிலும் பணியாற்றியவர். கோவை மாவட்ட ஏஐடியூசி கவுன்சில் பொதுச் செயலாளர், மாநிலச் செயலாளர் எனப் பல பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தொழிலாளர் நம்பிக்கையைப் பெற்றுத் திகழ்ந்தவர்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்டக் குழு உறுப்பினர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர் எனப் பல நிலைகளில் பணியாற்றியவர்.
கே.ஜி.ஜெகநாதனின் வாழ்விணையர் ஜெயலட்சுமி, மகள் நித்யபாரதி, மகன் உதயகுமார் ஆகியோர் இருக்கின்றனர்.
பல்வேறு வழக்குகளில் தொழிலாளர் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி வெற்றி கண்டவர். போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். கொள்கை வழி நின்று இறுதி வரை வாழ்ந்து காட்டியவர்.
இடையில் ரத்த அழுத்தம் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர். தொழிலாளி வர்க்கம் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் போது அவரது இழப்பு பெரும் துயரமாகும்.
தோழர் கே.ஜி.ஜெகநாதன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.