கட்டுரைகள்வரலாறு

சிட்டகாங் எழுச்சி வீராங்கனை கல்பனா

ஜி.மஞ்சுளா

இந்திய சுதந்திரப் போராட்டம் பெருவாரியான பெண்களை அரசியல் களத்திற்கு கொண்டு வந்தது.  குறிப்பாக சட்ட மறுப்பு உள்ளிட்ட வெகுமக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட 1930க்குப் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடவும் சிறைக்குச் செல்லவும் துணிந்தனர். இதே காலக்கட்டத்தில் தான் ஆயுத போராட்டங்களின் மூலம் இந்திய சுதந்திரத்தை பெறும் முயற்சியில் தீவிர புரட்சிக்குழுக்கள் இறங்கின. 

அத்தகைய குழுக்களில் ஒன்று தான் இந்திய குடியரசு ராணுவம். அதன் தலைவர் சூர்யா சென். அவரது குழுவில் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடிய புரட்சிப்பெண் தான் கல்பனா தத். பல குடும்பங்கள் தங்கள் செல்ல மகளுக்கு கல்பனா என பெயர் சூட்டி மகிழும் அளவிற்கு புகழ் வாய்ந்தவர். 

1913 ம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி சிட்டகாங் மாவட்டத்தில் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தவர் கல்பனா. பள்ளிக் கல்வியை முடித்த கல்பனா 1929ல் அறிவியல் படிப்பிற்காக கல்கத்தா சென்று கல்லூரியில் சேர்கிறார். அங்கு தான் சாத்ரி சங் என்ற புரட்சிகர இளம் பெண்கள் அமைப்பின் பிரித்திலட்டா வடேட்கர், பினாதாஸ் ஆகியோரோடு அவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. 

1930 ஏப்ரல் 18 ஆம் தேதி  இந்திய குடியரசு ராணுவம் என்ற அமைப்பு சிட்டகாங் ஆயுதக் கிடங்கை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றுகிறது. ஆயுதக் கிடங்கு தாக்குதல், தந்தி அலுவலக தாக்குதல், இரு இடங்களில் இரயில் பாதை சிதைப்பு, நகரம் முழுவதும் துண்டறிக்கை வினியோகம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் செய்து முடிக்கின்றனர். அதன்பின் ஜலாலாபாத் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த போது பிரிட்டிஷ் ராணுவம் தாக்குகிறது. இருபக்கமும் உயிர்ச் சேதம், அதன்பின் கொரில்லா முறைகளைப் பயன்படுத்துதல், தலைமறைவு, அதிகாரிகளைக்  கொலை செய்தல், வெடிகுண்டு தயாரித்தல் என அந்த இயக்கம் தொடர்ந்து செயல்படுகிறது. 

அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு மரண தண்டனை, நாடு கடத்தல், பல ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆகியவை வழங்கப்படுகின்றன. 1932 செப்டம்பர் 24ல் பிரித்திலட்டா தலைமையில் 8 இளைஞர்கள் ஈரோப்பியன் ரயில்வே ஆபிசர் அலுவலகத்தை தாக்குகின்றனர். அதில் காவலரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக பிரித்திலட்டா சயனைட் சாப்பிட்டு மரணிக்கிறார். 

புரட்சிகர ஆயுத போராட்டக் களத்தில் எத்தனையோ ஆண்கள் தங்கள் இன்னுயிரை தந்துள்ளனர். ஆனால் இந்த போராட்டக் களத்தில் தன்னுயிரை ஈந்த முதல் பெண் பிரித்திலட்டாவாகத் தான் இருப்பார் என சிட்டகாங் ஆயுதப் போராட்டம் குறித்து எழுதிய நினைவுக் குறிப்புகள் நூலில் கல்பனா தத் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல. ஆயுதப் போராட்டக் களத்தில் மாபெரும் ஆளுமைகளாகவும் தலைவர்களாகவும் திகழ்ந்தவர்கள் கூட பெண்கள் போராட்டக் களத்திற்கு வரத் தயக்கம் காட்டியதையும் பின்னாளில் தங்கள் கருத்துகளை மாற்றிக் கொண்டதையும் பதிவு செய்துள்ளனர்.

பிரித்திலட்டாவின் மரணத்திற்கு பின் காவல்துறையின் கடும் கண்காணிப்புக்கு ஆளானதால் கல்பனா, சூர்யா சென்னுடன் தலைமறைவாகிறார். 1933 பிப்ரவரியில் சூர்யா சென் காவல்துறையால் பிடிக்கப்படுகிறார். 1934 ம் ஆண்டு ஜனவரி 12 அன்று சூர்யா சென் தூக்கிலிடப்படுகிறார். 

இதனிடையே, 1933 மே 19 அன்று கல்பனாவும் கைது செய்யப்படுகிறார். 1933 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கல்பனாவிற்கு நாடு கடத்தல் தண்டனை விதிக்கப்படுகிறது. அவரோடு கைதான புகுடுடாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இளம் பெண் என்பதால் தனக்கு தண்டனை குறைவாக வழங்கப்பட்டதாக கல்பனா தனது நினைவுக் குறிப்புகளில் கூறுகிறார்.

சிறையில் வைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் தனது மனதையும் உடலையும் உறுதியாக்க மத நூல்களைப் படித்ததாகவும் அதன்பின்  3 அல்லது 4 ஆண்டுகள் கழித்து பெண் சிறைவாசிகள் அனைவரும் ஒருங்கே வைக்கப்பட்ட போது கம்யூனிசம் கற்பதற்கான வாய்ப்பு கிடைத்தாகவும் குறிப்பிடும் கல்பனா அதன்பின் பெருமளவிலான மார்க்சிய நூல்களை கற்கிறார்.

1937ல் கல்கத்தா சிறையில் காந்தியடிகள் கல்பனாவை நேரடியாக சந்தித்து “நிஜாமுதின், சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல் போராளிகள் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும், அதில் சம்பந்தபட்ட யாரையும் விடுவிக்க இயலாது என்று கூறியதாகவும், ஆனால் கல்பனாவிற்காகத் தான் முயற்சிப்பதாகவும்” கூறுகிறார். 

 சிறைக் கைதிகளை விடுவிக்க எழுச்சிமிக்க மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதனால், சிறையில் இருந்த பெண்கள் ஒவ்வொருவராக விடுதலை பெற்று வருவதால் தானும் விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாகவும் தன்னை விடுவிக்குமாறு மக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக 1939 ம் ஆண்டு தான் விடுதலை பெற்றதாகவும் கல்பனா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் உறுதியாக கம்யூனிசப் பாதையில் பயணித்ததோடு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றுகிறார் கல்பனா. 1943 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோசியை மணக்கிறார். 1946ல் சிட்டகாங் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. பின்னர் கட்சியுடன் முரண்பட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் இந்திய புள்ளியல் துறை நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் அறிகிறோம். 

1945ல் வெளியான அவரது நினைவுக் குறிப்புகளில் அன்றைய காலகட்ட இந்தியாவை பற்றியும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்து சுதந்திரப் போராட்டத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்கள் குறித்தும், மக்களிடம் அந்த இளைஞர்களுக்கு இருந்த செல்வாக்கு, அவர்களின் நற்பண்புகள், குறிப்பாக பெண்களின் அர்ப்பணிப்பு போன்றவை குறித்தும் நாம் அறிய முடிகிறது. 

1897ல் இருந்தே இளைஞர்கள் சிலர் வன்முறை செயல்களின் மூலம் பிரிட்டிஷாரை வீழ்த்த முடியும் என நம்பினார்கள். வெடிகுண்டு வீசவும், துப்பாக்கியை பயன்படுத்தவும், தனிப்பட்ட முறையில் வன்முறை செயல்களில் ஈடுபடவும் துணிந்தனர்.

1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியான ஜகந்தா பத்திரிகையின் தலையங்கம் வன்முறை புரட்சிக் கொள்கையை வெளிப்படையாகவே பிரகடனம் செய்தது. “இந்த நிலைமைக்கு விமோசனம் மக்கள் கையில் தான் உள்ளது. இந்த அடக்குமுறை சாபக்கேட்டை ஒழிக்க இந்தியாவில் வாழும் 30கோடி மக்களும் தங்கள் 60 கோடி கைகளை உயர்த்த வேண்டும். வன்முறையை வன்முறையால் தான் நிறுத்த முடியும்” என தன் கொள்கையை எடுத்துரைத்தது.

ஆயினும் மக்கள் அனைவரும் பங்கேற்பதற்கான திட்டமிடல்  எதையும் இந்த இளைஞர்கள் மேற்கொள்ளவில்லை. பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருந்த தனிப்பட்ட அதிகாரிகளை  கொலை செய்யும் போக்கே காணப்பட்டது. இதன் மூலம் ஆட்சியாளர்கள் மனதில் அச்சத்தை உருவாக்கி, மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை உருவாக்கச் செய்து இறுதியில் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷரை விரட்டுவதை நோக்கமாக கொண்டு இவர்கள் செயல்பட்டனர். 

இதற்காக திட்டமிடுவது, ஆட்கள் சேர்ப்பது, பயிற்சி அளிப்பது என இரகசியமாக செயல்பட்டனர். சாவைப் பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாத இவர்களின் துணிகரச் செயல்களும் திட்டங்களும் வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்ற போதிலும் அம்முயற்சிகள் தோல்வி அடைந்தன. பொதுமக்களின் ஆதரவை திரட்டாததால் சதிவழக்குகள் பல தொடுத்து கடுமையான தண்டனைகள் மூலம் வன்முறை புரட்சி இயக்கத்தை பிரிட்டிஷ் அரசு முறியடித்தது.

இந்தியாவில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் செயல்பட்டன. அவர்களின் நோக்கம் ஒன்றாக இருந்தது. ஆனால் செயல்பாடுகளில் மாற்றங்களும் இருந்தன. 1930களில் மீண்டும் புரட்சிகரக்குழுக்கள் தீவிரமாக  செயல்பட துவங்கினர். அதில் இந்திய குடியரசு ராணுவமும் ஒன்று.

ஆனால் அந்த அமைப்பு தனிநபர் கொலைகள் மட்டும் செய்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை வெளியேற்ற முடியாது என அறிவித்து, அரசாங்கத்தோடு வெளிப்படையான ஆயுத மோதல்கள், அரசின் ஆயுதக் கிடங்கை கைப்பற்றுதல், இதற்காக இளைஞர்கள், மாணவர்களை அணிதிரட்டல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டது. அதில் தான் கல்பனா தத்தும் இணைந்து பணியாற்றினார். ஆனால் பின்னாளில் அவர் மட்டுமல்ல அந்த அமைப்பில் இருந்தும் சிலர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். 

“இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் அனைத்து அநீதிகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அச்சமின்றி இரக்கமின்றி பிரகடனம் செய்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆவணங்கள் மூலம் மக்களின் உண்மையான எதிரிகள் மற்றும் மக்கள் யாரை எதிர்த்து நிற்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறது. நமது தேசபக்தி பாரம்பரியத்தையும் சூரியாசென்னின் பாரம்பரியத்தையும் எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும், நம் மக்கள் மீது முழு நம்பிக்கை வைப்பதன் மூலமே  நாம் அசைக்க முடியாத நம்பிக்கை பெற முடியும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே நமக்கு கற்பிக்கிறது” என கம்யூனிசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியே அனைத்துக்குமான தீர்வு என்பதை தனது எழுத்துகளில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார் கல்பனா தத்.

கட்டுரையாளர்: ஜி.மஞ்சுளா
மாநிலத் தலைவர்
இந்திய மாதர் தேசிய சம்மேளனம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button