டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து – மக்கள் எழுச்சியின் வெற்றி
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து மக்கள் எழுச்சியின் வெற்றி என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் காவட்டைப்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வெள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரைப்பட்டி, நரசிங்கம்பட்டி, நாய்க்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேதாந்தா குழும நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் ஜிங் லிமிட்டெட் கம்பெனிக்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டது. சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் அமையும் டங்ஸ்டன் சுரங்கத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இந்தப் பகுதி மக்கள், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
குடைவரைக் கோயில்கள், சமண சிற்பங்கள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், பஞ்ச பாண்டவர்கள் படுகைகள் போன்ற தொன்மை தொல்லியல் சான்றுகள், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உணர்த்தப்பட்டது.
இது தொடர்பாக மேலூர் சுற்றுவட்டார ஊராட்சி அமைப்புகள் பெருமளவு மக்கள் பங்கேற்புடன் கிராம சபா கூட்டங்களில், டங்ஸ்டன் சுரங்கம் அமைய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சுரங்கம் அமைக்க அனுமதி தராது என்பதை தெளிவுபடுத்தி, அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதுடன், கடந்த 2024 டிசம்பர் 9 ஆம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் எழுச்சி தமிழ்நாடு முழுவதும் பரவி, வலிமை பெற்று முன்னேறியது.
இந்த நிலையில் ஒன்றிய அரசு மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வெளியிட்டிருந்த ஏல அறிவிப்பை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது மக்களின் ஒன்றுபட்ட எழுச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். வெற்றி பெறும் வரை ஒன்றுபட்டுப் போராடிய பொதுமக்களுக்கும், மக்கள் உணர்வுகளை பிரதிபலித்த தமிழ்நாடு அரசுக்கும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.