காவிரி பாசனப் பகுதி விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு உதவுக
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அண்மையில் பெய்த மழையினாலும், பலத்த காற்றினாலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விளைந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த பயிர்கள் காற்றில் சாய்ந்து, சரிந்து, தரையில் விழுந்து கிடக்கின்றன. தொடர் மழையால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில் அறுவடை செய்ய முடியாதபடி நெருக்கடியில் விவசாயிகள் சிக்கி தவித்து வருகின்றனர். தவிர்க்க முடியாத சேதாரங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இது குறித்து வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டு கணக்கெடுத்து, பாதிப்புக்கு தக்கபடி இழப்பீடு வழங்க வேண்டும்.
மற்ற மாவட்டங்களில் உள்ள அறுவடை எந்திரங்களை காவிரி பாசனப் பகுதிக்கு கொண்டு சென்று, விரைந்து அறுவடை செய்ய உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்வதுடன், கொள்முதல் நிலையங்களின் ஈரப்பதத்தை 22 சதவீத தளர்த்தி, மாநில அரசு முன் அனுமதி வழங்கி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.