அறிக்கைகள்உள்ளூர் செய்திகள்

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறி தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை

நெல்லை மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் நடத்தியுள்ள வெறித்தனமான தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

நெல்லை மாநகரில் உள்ள மணிமூர்த்திபுரம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியை சேர்ந்த 6 பேர் வழி மறித்து மிரட்டி, அவர்களின் உடமைகளை பறித்துக் கொண்டு, நிர்வாணமாக்கி, அவர்களின் மீது சிறுநீர் கழித்து, கொடூரமான முறையில் அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறலாகும்.

இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்து வருவது, பெரும் வருத்தம் அளிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் நடக்க விடாமல் தடுப்பதற்காக அரசியல் உறுதியோடும், சமூக அக்கறையோடும், உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்கபடியான தண்டனை வழங்கிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button