“கிரிக்கெட் விளையாட்டில் இந்திய வீரர் சச்சின் நிகழ்த்தியுள்ள சாதனையை யாரும் சமன் செய்ய முடியாது? ஏன் கிட்ட நெருங்கக் கூட முடியாது” என்று பேசப்பட்டது. ஆனால் அந்த சாதனையை தற்போதையை உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியின் போது சமன் செய்து காட்டியிருக்கிறார் மற்றொரு இந்திய வீரர்!
யார் அவர்?
அவர்தான் விராட் கோலி என்னும் ஜாம்பவான்.
விராட் கோலி நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனை, சச்சின் சாதனையை சமன் செய்திருக்கிறது என்று ஒப்பிடப்பட்டாலும், உண்மையில் அதைவிடப் பெரிய சாதனை.
சச்சின் 452 போட்டிகளில் விளையாடி 49 சதங்களை அடித்துள்ளார். ஆனால் விராட் கோலி 277 போட்டிகளில், அதாவது சரி பாதி போட்டிகளில் விளையாடி அதே 49 சதங்களை சமன் செய்திருக்கிறார்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் வியந்து கொண்டாடும் இந்த சாதனையை இந்திய முன்னாள் – இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மனம் திறந்து ரசிக்கவில்லை.
சச்சின் நிகழ்த்திய சாதனையை அவாள்களில் யாராவது ஒருவர் சமன் செய்திருந்தால், அதை மகிழ்ச்சியோடு வரவேற்று இருப்பார்கள். தற்போது சாதனை படைத்திருக்கும் விராட் கோலி ‘அவாள்’ அல்ல.
மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு 2014ல் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 7 ஆண்டு காலம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி, மன அழுத்தத்திற்கு ஆளானார்.
விராட் கோலி கேப்டனாக இருந்த போது..
விவரம் – போட்டி – வெற்றி – தோல்வி – முடிவில்லை – சதவீதம்
டெஸ்ட் 68 40 17 11 59
ஒருநாள் 95 65 29 1 68
டி20 66 50 16 – 65
இவற்றை விராட்கோலி சாதித்துக் காட்டினார். இத்தகைய சாதனைகளை செய்திருந்த போதிலும், விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு விலகுமாறு கிரிக்கெட் வாரியமே வலியுறுத்தியதுடன், புதிய கேப்டனையும் அறிவித்துவிட்டது.
அப்போது மிகுந்த மனம் உடைந்த நிலையில் விராட் கோலி அளித்த பேட்டியின் போது, “நான் கிரிக்கெட் போட்டியில் தலைவனாக இருப்பேன்! தலைவனாக இருப்பதற்கு கேப்டன் பதவியில் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று மிக அழுத்தமாகப் பதில் அளித்தார்.
இதனை நடைமுறையிலும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் விராட் கோலி.
- இந்திய கிரிக்கெட்
- இந்திய கிரிக்கெட் வீரர்கள்
- இந்தியா வெற்றி, தோல்வி.
இப்படி குறிப்பிடுவது சரியான பொருளைத் தராது.
ஏனெனில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் – Board of Control for Criket in India (BCCI) – ஒரு தனியார் அமைப்பு. இந்த அமைப்புதான் கிரிக்கெட் போட்டியை நிர்வகிக்கிறது, நடத்துகிறது. இதற்கும் இந்திய அரசுக்கும், ஒன்றிய அரசின் விளையாட்டுத் துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 1928 டிசம்பரில் தொடங்கப்பட்டது முதல், இன்று வரை பிராமணர் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவதிலும் இந்த ஆதிக்கம் நிலவுகிறது.
எத்தனையோ விளையாட்டுப் போட்டிகள் இருக்க, கிரிக்கெட்டில் மட்டும் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது!
- பந்தை அடி! பந்தைப் பிடி! என்று தனித்து விடப்பட்ட விளையாட்டு.
- கூட்டாக அடிக்க முடியாது! கூட்டாக பிடிக்கவும் முடியாது!
- தேவை இல்லாமல் உடல் உரசத் தேவையில்லை.
- தங்களின் தீண்டாமையை கடைப்பிடிக்க வாய்ப்பாக உள்ளது.
- மற்ற போட்டிகளைப் போன்று தொடங்கியது முதல், முடிவது வரை ஓய்வின்றி போராட வேண்டிய அவசியம் இல்லை.
- இரண்டு வீரர்கள் மட்டை வீசும் போது ஒன்பது வீரர்கள் கேலரியில் இருக்கலாம்.
- தன்னை நோக்கி பந்து வரும் போது என்ற கட்டத்தை தவிர, மற்ற நேரங்களில் உடலை அசைக்கத் தேவையில்லை.
- மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாட்டு பணம் கொழிக்கும் விளையாட்டாக இருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டில் பிராமண ஆதிக்கத்தை விடாப்பிடியாக வைத்திருக்கும் சூட்சுமம் இதுதான்.
95 ஆண்டுகால வரலாறு கொண்ட கிரிக்கெட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 80 சதம் பிராமணர்கள். 15 முதல் 20 சதம் வரை மட்டுமே பிராமணர் அல்லாதார்.
இதோ ஒரு சிறிய சாம்பிள்!
- சுனில் கவாஸ்கர்
- ரவி சாஸ்திரி
- அணில் கும்ப்ளே
- ஜவஹல் ஸ்ரீநாத்
- வெங்கடேஷ் பிரசாத்
- சச்சின் டெண்டுல்கர்
- சௌரவ் கங்குலி
- ராகுல் திராவிட்
- விவிஎஸ் லக்ஷ்மண்
- நயன் மோங்கியா
- மனோஜ் பிரபாகர்
- அஜித் அகார்கர்
- இஷான் சர்மா
- ஸ்ரீசாந்த்
- நிலேஷ் குல்கர்னி
- வெங்சர்க்கார்
- சுனில் ஜோசி
- கே.எல்.ராகுல்
இப்படி பிராமணர்களின் பட்டியல் நீள்கிறது. தமிழ்நாட்டுப் பட்டியலும் இதே கதிதான்.
- கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
- டபிள்யூ.வி.ராமன்
- சிவராமகிருஷ்ணன்
- ஹேமங்பதானி
- பத்ரிநாத்
- லஷ்மிபதி பாலாஜி
- சடகோபன் ரமேஷ்
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- முரளி கார்த்திக்
- தினேஷ் கார்த்திக்
- அபினவ் முகுந்த்
- முரளி விஜய்.
பிராமணர் அல்லாதார் என்பதில் கூட ஜாட், ராஜ்புத் போன்ற முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களே இடம் பெற்றுள்ளனர்.
- கபில் தேவ்
- வீரேந்திர சேவாக்
- கௌதம் கம்பீர்
- அஜய் ஜடேஜா
- யுவராஜ் சிங்
- விராட் கோலி
- நவ்ஜோத் சிங் சித்து.
கிரிக்கெட் வீரர்கள் தேர்வில் கிராமப்புறம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் மட்டுமே கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது மட்டுமல்ல கிரிக்கெட்டில் தீண்டாமையும் கடைபிடிக்கப்படுகிறது.
மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காடு உள்ள தலித்துகளில் இதுவரை 4 பேர் மட்டுமே கிரிக்கெட் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் 2 பேர் மட்டுமே உலகத்தர வரிசை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
- பாலூ பல்வாங்கர்
- வினோத் காம்ளி
இதில் பாலூ பல்வாங்கர் வெள்ளையர்கள் நடத்திய கிரிக்கெட் கவுண்டி கிளப்புகளில் வெளியே அடிக்கப்படும் பந்துகளை எடுத்துப் போடுபவராக இருந்தார்.
கிரிக்கெட் மீதான பாலூ பல்வாங்கரின் ஆர்வம், ஒரு சிறந்த சுழல் பந்து வீச்சாளராக மாற்றியது.
இவர் இங்கிலாந்துக்கு விளையாடச் சென்றபோது, இங்கிலாந்து அணியில் சேருமாறு அழைப்பு விடப்பட்டது.
அதை ஏற்க மறுத்ததுடன், “எனது நாட்டு அணிக்காகவே விளையாடுவேன்” என்று பெருமிதத்தோடு சொன்னார் பாலூ பல்வாங்கர்.
அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட போது, அவர் சாப்பிடுவதற்கு என தனி இடம் ஒதுக்கினர்.
அடுத்து வினோத் காம்ப்ளி. இவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பதும் அணியில் இடம் பெற காரணமாக அமைந்தது.
தற்போதைய 2023 உலக கிரிக்கெட் கோப்பை இந்திய அணி வருமாறு:
- ரோகித் சர்மா
- சும்மன் கில்
- விராட் கோலி
- ஸ்ரேஷ் ஐயர்
- கே.எல்.ராகுல்
- ஹர்திக் பாண்டியா
- ரவீந்திர ஜடேஜா
- மும்ரா
- குல்தீப் யாதவ்
- முகமது ரத்தீஷ்
- சர்குல் தாகூர்
- சூரியகுமார் யாதவ்
- முகமது சமி
- இஷான் கிஷான்
- அக்சர் பட்டேல்
- ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்தப் பட்டியலில் பெரும்பான்மையோர் பிராமணர்களே.
இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை. என்பதோடு ஒரு தலித் வீரர் கூட இல்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின் பிராமணராக இருந்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் களமிறங்கிய 11 பேரில் அவர் இடம்பெறவில்லை.
கிரிக்கெட் போட்டியில்தான் பிராமணர் ஆதிக்கம் என்றால், தொலைக்காட்சியில் வர்ணனை செய்வதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கிரிக்கெட் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் தமிழ் ஒளிபரப்பில், வர்ணையாளர்கள் பட்டியலை பார்த்தாலே இது புரிய வரும்.
- கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
- சடகோபன் ரமேஷ்
- ஆர்.ஜே.பாலாஜி
- முத்து
- ஞானி
- ஹேமங் பதானி
- பத்ரிநாத்
- லட்சுமிபதி பாலாஜி
- முரளி விஜய்
- ஸ்ரீசாந்த்
- யோ.மகேஷ்
இவர்களில் பெரும்பாலும் பிராமணர்களே! இவர்களின் வர்ணனையில் விளையாட்டோடு மட்டும் சம்பந்தப்படுத்தி வர்ணிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர்.
மேற்கண்ட பட்டியலில் இருக்கும் ஸ்ரீசாந்த் என்பவர் மலையாளி. இவருக்கு தமிழில் சரியாகப் பேச வராது. ஆனால் பிராமணர் என்பதால் இடம்பெற்றுவிட்டார்.
வர்ணனை என்பது சார்பு நிலை இன்றி, நடுநிலையுடன் இரு பக்கத்திலும் உள்ள சிறப்பானவற்றை சித்தரித்து, குறைகளை சுட்டிக்காட்டுவதாக இருக்க வேண்டும்.
இந்த அடிப்படைகளை எல்லாம் மேற்கண்ட வர்ணனைக் கும்பல் அடித்து நொறுக்கி விட்டது. இந்திய அணி விளையாடும் போட்டிகளில் அப்பட்டமாக ஒரு சார்பாக வர்ணனை செய்கின்றனர். பெயருக்குகூட நடுநிலை இருக்காது.
இந்திய அணி பங்கேற்காத போட்டிகளில் தங்களுக்கு விருப்பப்பட்ட அணிக்கு ஆதரவாக வர்ணனை செய்வது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணி விளையாடும் போது, அதற்கு எதிரான விருப்பங்களையே பேசுவது.
“போடரச்சே.. அடிக்கிரச்சே.. பிடிக்கிரச்சே..” இதுபோன்ற பிராமணர்களின் வார்த்தைகளால் வர்ணனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்ற வர்ணனையாளர்களை சக வீரர்கள் என்று கூட பார்க்காமல், போடா வாடா என்று பேசுவதுடன், சில நேரங்களில் மச்சான், மச்சி என்று கூடப் பேசுகிறார்.
இது அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை காட்டுவதாக நினைத்து விடக்கூடாது.
வர்ணனை களத்தில் சூத்திரர், தலித் என வேறு யாரும் இல்லை என்பதால் இப்படிப் பேசுகிறார். உடன் இருப்போர் சூத்திரராக, தலித்தாக இருந்திருந்தால் ஸ்ரீகாந்த் இப்படி பேசுவாரா?
கண்டிப்பாக பேசமாட்டார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது மதச்சார்பின்மையை காட்டிக்கொள்வதற்காக ஓரிரண்டு முஸ்லிம் வீரர்கள் அணியின் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
2014க்குப் பிறகு நரேந்திர மோடி ஆட்சியில், உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசிஐ தலைவர் பொறுப்புக்கு வந்துவிட்டார்.
பிராமணர் ஆதிக்கம் என்பதோடு இந்துத்துவ தேசிய வெறி மற்றும் முஸ்லிம் விரோதம் என்ற அரசியல் போக்குகள் திணிக்கப்பட்டன.
குஜராத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்திய – பாகிஸ்தான் லீக ஆட்டத்திற்காக திட்டமிட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரட்டப்பட்டனர்.
எதிர்பார்த்தது போன்று பாகிஸ்தான் வீரர்கள் அவுட்டாகி வெளியேறும் போது, காதை கிழிக்கும் அளவுக்கு “ஜெய் ஸ்ரீராம்” என்று முழங்கினர்.
முஸ்லிம் எதிர்ப்பு – இந்துத்துவ தேசிய வெறி என்ற சங்கிகளின் சூழ்ச்சி வெளிப்பாடு இது.
இதேபோன்று இந்த உலகப் போட்டியில் முகமது சமிக்கு பந்து வீசும் வாய்ப்பு வழங்கக்கூடாது என மறைமுகமாக திட்டமிடப்பட்டது.
- 2021 ல் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோற்றதற்கு சமிதான் காரணமாம்.
- அவர் வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள் கொடுத்துவிட்டாராம். பாகிஸ்தானுக்காக விட்டுக் கொடுத்து விட்டாராம்.
இது சப்பைக்கட்டு காரணங்கள் என்பது தெரியவில்லையா!
டி20 கிரிக்கெட் போட்டியில் அதுவும் கடைசி ஓவரில் 12 ரன்கள் கொடுப்பது சாதாரணமாக நடக்கக் கூடியதுதான்.
இந்தியா தோல்விக்கு இது காரணம் அல்ல.
இந்த போட்டியில் இந்தியா எடுத்த ரன்கள் 151 மட்டுமே. இதை பாகிஸ்தான் அணி 14 வது ஓவரிலேயே விக்கெட் இழப்பு ஏதும் இன்றி போட்டியை வென்றது.
இதில் சமியின் பங்கு எங்கே இருக்கிறது?
ஒட்டு மொத்த பலியை சமி மீது மட்டும் போடுவதின் நோக்கம் என்ன?
இதுதான் சங்கித்தனம்!
இக்கட்டான இந்த நேரத்தில் முகமது சமிக்கு ஆறுதல் குரல் கொடுத்தவர் யார்?
அவர்தான் விராட் கோலி!
“ஒருவரை மத ரீதியாக மோசமாகப் பேசுவது கேவலமான செயலாகும். நேரில் நின்று பேச முதுகெலும்பு இல்லாதவர்கள். வெட்கமின்றி சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முகமது சமி இந்திய அணிக்காக பலமுறை வெற்றி தேடிக் கொடுத்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அவரின் தாக்கம் அதிகம். முகமது சமிக்கு அணி வீரர்கள் அனைவரும் துணை நிற்போம். எங்களின் சகோதரத்துவத்தை யாரும் அசைத்து பார்க்க முடியாது” – இப்படி நெத்தியடியாகப் பதில் கூறினார் விராட் கோலி.
தற்போதைய உலகக் கோப்பை போட்டியில், முதல் நான்கு லீக் ஆட்டங்களில் முகமது சமி கேலரியில் அமர வைக்கப்பட்டிருந்தார். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “என்னை பெஞசில் உட்கார வைத்தது பற்றி கவலை இல்லை. எனது பங்களிப்பு எப்போது தேவையோ? அப்போது அணிக்காக சிறப்பாக செயல்படுவேன்.” என்று பெருமிதத்தோடு பதில் சொன்னார்.
அடுத்து வந்த போட்டிகளில் முகமது சமி பந்து வீச அழைக்கப்பட்டார். நழுவ விடுவாரா சமி! சந்தர்ப்பத்தை பயன்படுத்தினார் சாதனையை நிலைநாட்டினார்.
தற்போது நடக்கும் 13வது கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுடன் நடந்த லீக் போட்டியில் 14 விக்க்கெட்டுகளை சாய்த்தார் சமி.
இதற்கு முன்பு நடந்த உலக கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச்சில் ஜவகல் ஸ்ரீநாத் 33 ஆட்டங்களில் 44 விக்கெட்டுகளையும் ஜாகீர்கான் 23 ஆட்டங்களில் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆனால் முகமது சமியோ உலகக்கோப்பை போட்டியில் குறைவான ஆட்டங்களில் அதாவது 14 ஆட்டங்களில் 45 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்திய பேட்டிங் வீரர்களைப் பற்றி பேசிய போது, பந்து வீச்சாளர்கள் பற்றியும் பேச வைத்தவர் முகமது சமி.
இதுவரை உலக கிரிக்கெட் கோப்பை போட்டி 12 முறை நடந்ததுள்ளது. இதில் இரண்டு முறை மட்டுமே, 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2021 ஆம் ஆண்டு மகேந்திர சிங் டோனி தலைமையிலும் உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது.
இந்த இரண்டு கேப்டன்களும் பிராமணர் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும்?
- தென்ஆப்பிரிக்காவில் இருப்பதைப் போன்று இந்திய கிரிக்கெட்டிலும் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட வேண்டும்.
- கிராமப்புறங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
- போட்டிக் காலங்களில் மாமிச உணவு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட மாறுதல்கள் செய்யப்பட்டால் கிரிக்கெட் போட்டி இன்னும் விறுவிறுப்பாக அமையும். வீர்ர்கள் தேர்வு நேர்மையாக இருக்கும், திறமை உண்மையாக இருக்கும், வெற்றிகள் குவியும்.
கட்டுரையாளர்:
இளசை கணேசன்
மிகச்சிறப்பான ஆய்வு..
கிரிக்கெட் ஆக்கிரமிப்பாளர்களை அலசி இருக்கிறார் இளசையார்.. நன்றி..!!