
சமீபத்தில் கோயம்புத்தூரில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தென்னிந்திய மாநிலங்கள் உள்பட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்துள்ளார். திமுக முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தெரிவித்து மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறார் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும்போது Pro-rata எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகிதாச்சார உயர்வு இப்போதுள்ள தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது இப்போதுள்ள மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டதா? என்பதற்கு எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த அறிவிப்பு மிகுந்த குழப்பமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்காமல், வட மாநிலங்களுக்கு அதிகமாகக் கொடுத்தாலும் அது தமிழ்நாட்டிற்கு அநீதிதான்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தச் சொன்னது மத்திய அரசு. அதனால் கட்டுப்படுத்தியது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள். கட்டுப்படுத்த தவறிய வட மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்றவற்றிற்குப் பரிசும் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குத் தண்டனையும் அளிப்பதா? துரோகம் செய்வது யார்? இது எந்த வகையான நீதி? மனுநீதியின் மறு அரசியல் வடிவம் தானே இது!
ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 வலியுறுத்துகிறது. இப்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதிச் சீரமைப்பு ஆணையம் அல்லது எல்லை நிர்ணய ஆணையச் சட்டத்தின் விதிகளின் (Delimitaion Commission) மூலமே, தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை நடந்துள்ள தொகுதி மறு வரையறை
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது 489 தொகுதிகள்தான் இருந்தன. 1952இல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 494 ஆக உயர்ந்தது. அப்போது மக்கள் தொகை 36.1 கோடியாக இருந்தது.
இதற்குப் பிறகு, இரண்டாவது முறையாக 1963 இல் தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு, தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக உயர்த்தப்பட்டது. அந்தத் தருணத்தில் மக்கள் தொகை 43.9 கோடியாக உயர்ந்திருந்தது. பிறகு 1973 இல் மூன்றாவது முறையாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது மக்கள் தொகை எண்ணிக்கை, 54.8 கோடி.
ஒத்திவைக்கப்பட்ட தொகுதி மறு சீரமைப்பு
இதேபோல், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாநிலத்திலும் திருத்தப்பட்டது. இந்நிலையில், 1975 இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டதால், அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 42 வது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது.
ஏனென்றால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலங்கள் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
கடந்த 2001 இல் இந்த 25 ஆண்டு கால வரையறை முடிவுக்கு வந்தது. இதனால் 2002 இல் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது தொகுதி மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், 84வது திருத்தத்தின் மூலம் இது அதே காரணங்களுக்காக மேலும் 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடப்பட்டது. மோடி ஆட்சியிலும் இப்போது தள்ளி வைத்து விட வேண்டியது தானே? ஏன் அதைச் செய்ய மறுக்கிறார்கள்?
கடந்த 2000 வது ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கொள்கையின்படி, 2026 க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் எனக் கூறப்பட்டது. ஆகவேதான், அந்த ஆண்டுக்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2026 க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். ஆனால், மக்கள் தொகை நிலைபெற்று விட்டதா என்றால் இல்லை? பின்பு எப்படி மறுசீரமைப்புச் செய்வது?
மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம்போல நடந்திருந்தால், 2026 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031ஆம் ஆண்டில்தான் நடந்திருக்கும். ஆனால், 2021ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், அந்தக் கணக்கெடுப்பை 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தி, அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளிலேயே தொகுதிகளை மறுவரையறை செய்து அடுத்த பொதுத் தேர்தலையும் எதிர்கொள்ளலாம் என்ற சிந்தனை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு உள்ளது. இதனால்தான் இந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
ஐந்து மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி!
இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பான 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டும் சேர்ந்து இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேரை, அதாவது 48.6 சதவீதம் பேரைக் கொண்டிருக்கின்றன.
ஆகவே, மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை அதிகரித்தால், இந்த ஐந்து மாநிலங்களிலேயே இந்தியாவின் பாதி மக்களவை இடங்கள் இடம்பெறும்.
இந்நிலையில்தான் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரித்தாலோ, குறைத்தாலோ தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன. அந்த மொழிவாரி மாநிலங்கள் சரியான வகையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு பண்பாட்டுச் சிறப்புக் கூறுகள் இருக்கின்றன.
அவர்களுக்கு உரிய சமமான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்க மாகாணங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சமமான அளவு வாக்கு மதிப்பு இந்தியாவிற்கும் பொருத்தமானதுதான். அதன் மூலம்தான் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது பன்மைத்துவப் பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாக்க முடியும்.
அரசமைப்புப் பிரிவு 81ல் 2வது விதியில் மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கை இடையிலான விகிதம் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், அதில் விதிவிலக்காக வடகிழக்கில் பழங்குடி இன மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் 60 லட்சத்திற்குக் குறைவான மக்கள் தொகை கொண்டவைகளுக்கு இது பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. இது மிகச் சரியானதே. இதனை அனைத்து மொழி வழி மாநிலங்களுக்கும் அளித்து விடுவது தான் இப்போது பொருத்தமானது.
இந்திப் பெரும்பான்மை வாத ஆபத்து!
ஒரே ஒரு மொழி மட்டும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நாடாளுமன்றம் உருவானால், இந்தியா பல்வேறு மொழி, கலாசாரங்களை உள்ளடக்கிய ஒரு துணைக் கண்டமாக இருக்காது. உடைந்து சின்னா பின்னமாகிவிடும் இதைத்தான் ஒன்றிய பாசிச ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களா?
எனவே, எல்லா மாநிலங்களிலும் மக்கள் தொகை நிலைபெறும் வரை, தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கும் அதே விகிதாச்சாரத்தில் பெண்களுக்கு என 33 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்துத் தொகுதிகளையும் உயர்த்தலாம். ஆனால், அதைச் சாக்கிட்டு மக்கள் தொகை அடிப்படையில் என்று முடிவெடுத்தால் நாட்டின் ஒற்றுமை உருகுலைந்து போகும்!
வெள்ளைக்காரர்களின் விருப்பத்தை அதாவது நாடு பிரிவினைவாத நோயில் தள்ளப்பட்டு அழிய வேண்டும் என்பதை இவர்கள் நிறைவேற்றி முடிப்பார்கள்!