அறிக்கைகள்தமிழகம்

வெள்ள நிவாரணம் பற்றி தவறான தகவல் பரப்புவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்தல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

வெள்ள நிவாரணம் பற்றி தவறான தகவல் பரப்புவதை
பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்

மிக்ஜம் புயல் தாக்குதலில் சென்னை பெருநகரும் அதன் சுற்றுவட்டார புறநகர் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்து போனது. வரலாறு காணாத இயற்கை பேரிடரில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களது மறுவாழ்வுக்கு உதவிடும் நிவாரண பணிகளில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர்,  மாநகர ஆணையர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை அணிதிரண்டு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, ஒன்றிய அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருப்பதாக பாஜகவினரும் அதன்  ஆதரவாளர்களும் தவறான செய்தியை பரப்பும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசு இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இதன்படி நடப்பு  நிதி ஆண்டுக்கான முதல் தவணையாக ரூ.450 கோடியை கடந்த ஜூலை மாதம் வழங்கியது. இரண்டாவது மற்றும் இறுதித் தவணையாக இந்த நிதியாண்டின் இறுதியில் வழங்க வேண்டிய தொகையை ரூ.491 கோடியை தற்போது வழங்கியுள்ளது. இந்த உண்மை நிலையை கருத்தில் கொண்டால் ஒன்றிய பாஜக அரசு மிக்ஜம் புயல் பேரிடர் கால நிவாரணத்திற்காக சல்லிக்காசு கூட கொடுக்காமல் வாய் சவடால் பேசி வருவதை தமிழ்நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

மேலும், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பை தொடர்ந்து “வெள்ளத் தடுப்பு மேலாண்மை திட்டம்” வகுக்கப்பட்டது. ஒன்றிய அரசின் சார்பில் ரூ.500 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு தற்போது தான் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக நிதி ஏதும் ஒதுக்கவில்லை.

இந்த நிலையில் அடிப்படையற்ற ஆதாரமில்லாத செய்திகளை பரப்பி வருவதை பாஜகவினரும், சங் பரிவார் ஆதரவாளர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.5060 கோடியை முழுமையாக வழங்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button