மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலும் முதலமைச்சர் பதவியேற்பு விவகாரமும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்ல அதிகாரத்தைப் பெறுவதற்கும் அதனை தக்கவைப்பதற்கும் பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் நவம்பர் 23ஆம் தேதி வெளியாயின. பாஜக, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 229 தொகுதிகளை மகாயுதி கூட்டணி கைப்பற்றியது.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி 59 தொகுதிகளிலேயே வெற்றி பெற முடிந்தது. (இதற்கான காரணங்கள் கடந்த இதழில் வெளியாகியுள்ளன)
ஆளும் மகாயுதி கூட்டணியில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட இம்முறை பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகத் துடித்தார். ஏற்கனவே முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதில் உறுதி காட்டினார். அஜித் பவாரும் முதலமைச்சராகிவிட கனவு கண்டார்.
முதலமைச்சர் பதவியைப் பிடிப்பதில் மூவரும் பிடிவாதம் காட்டினர். இதனால் 10 நாட்களுக்கும் மேலாக பல சுற்றுப் பேச்சு நடத்தியும், முடிவெடுக்க முடியாத பரிதாப நிலையே நீடித்தது. தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகிய மூன்று பேரையும் டெல்லிக்கு அழைத்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் பதவியைப் பெறுவதில் பாஜக உறுதியுடன் இருப்பதை உணர்ந்து கொண்ட ஏக்நாத் ஷிண்டே, பேச்சுவார்த்தை நடக்கும் போதே பாஜகவின் முடிவை ஏற்பதாகச் சொல்லிவிட்டு சொந்த ஊருக்குப் போய்விட்டார். இதனால் மகாயுதி கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், பாஜக சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளைக் கடைபிடித்து ஏக்நாத் ஷிண்டேயை வழிக்கு கொண்டுவந்தது. துணை முதலமைச்சராக ஒப்புக்கொண்டார்.
தேசியவாத காங்கிரசை உடைத்து, தனிக்கட்சி தொடங்கவைக்கப்பட்ட அஜித் பவாரும் முதலமைச்சருக்கான போட்டியில் இருந்தார். அமலாக்கத்துறையால் முடக்கிவைக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் விடுவிக்கப்பட்டன. ‘அடக்கத்துடன்’ துணை முதலமைச்சராக அவரும் ஒப்புக்கொண்டார்.
அதேநாளில், பாஜக எம்எல்ஏக்கள் கூடி சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் முதலமைச்சராகவும் பட்னாவிசைத் தேர்வு செய்தனர். இதனையடுத்து, டிசம்பர் 5 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பட்னாவிஸ், துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
இந்தக் கட்டுரை தயாராகும் வரை (டிசம்பர் 11 ஆம் தேதி), முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள் தவிர, ஒருவர் கூட அமைச்சராகப் பதவியேற்கவில்லை. பட்னாவிஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன துறைகள்? யார் யாருக்கு அமைச்சர் பதவி குறித்து முடிவெடுக்க முடியாமல் இழுபறியில் திணறிக் கொண்டு இருக்கின்றனர். மகாயுதி கூட்டணி, பதவிக்காக மோதிக் கொண்டிருக்கும் மகாமோதல் கூட்டணியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதிகாரத்திற்காக, பதவிக்காக எதையும் செய்யலாம்? அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவற்றைப் பயன்படுத்தி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை உடைக்கலாம். அவற்றின் பெயர், சின்னங்களை தங்களுடன் இணைந்த பிரிவுக்கு கொடுக்கலாம். அவர்கள் ஊழல் பெருச்சாளிகளாகவும் பதவிப் பித்தர்களாகவும் இருப்பதால், கூச்சநாச்சமின்றி, எந்தக் கவலையுமின்றி பதவிகளைப் பெற போட்டியிடுகின்றனர். இவர்கள் தான் பாசிசம் வளருவதற்கான விளைநிலம். இவர்களைக் கொண்டுதான் பாஜக, ஆர்எஸ்எஸ் அரசியல் விளையாட்டுகளை மாநிலங்கள் தோறும் நடத்திக்கொண்டிருக்கிறது.
ஆட்சியைப் பிடிக்க கட்சிகள் உடைப்பு
2019 தேர்தலில் பாஜகவும் அதன் நீண்ட கால கூட்டணி கட்சியான சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. முதலமைச்சர் பதவியைப் பிடிப்பதில் இரண்டு கட்சிகளிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் கூட்டணியை முறித்துக் கொண்டு உத்தவ் தாக்கரே வெளியேறினார். பின்னர் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப் போட்டது. ஊழல் செய்து குவித்த சொத்துக்கள் என பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் உடைத்தார். அந்த கட்சியை உருவாக்கிய சரத்பவார் தனிமரம் ஆனார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த அஜித் பவாரின் ஆதரவுடன், பாஜக தலைவர் பட்னாவிஸ் முதலமைச்சரானார். அஜித் பவாரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையோ என்னவோ.. ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவு ஐந்து நாட்களில் திரும்பப்பெற்றார். பட்னாவிஸ் ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு, பிளவுபடாத சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சி அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்தது. அந்த ஆட்சியும் இரண்டே ஆண்டுகளில் கவிழ்ந்தது.
2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே உடைத்தார். தாங்கள்தான் உண்மையான சிவசேனா என அறிவித்த ஷிண்டே, பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். பட்னாவிஸ் துணை முதலமைச்சரானார்.
2023 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அஜித்பவார் தனிக் கட்சியாகி அரவணைக்கப்பட்டார். பாஜக, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுடன், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டு சேர்ந்து மகாயுதி கூட்டணியாக உருவாக்கப்பட்டது.
ரூ.ஆயிரம் கோடி சொத்து விடுவிப்பு
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021 அக்டோபரில் அஜித் பவார், அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான ஆலைகள், வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது, பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை வருமானவரித்துறை தற்போது விடுவித்துள்ளது.
மகளிருக்கு ரூ.1500 உதவித்தொகை
பாஜக கூட்டணி அரசு பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 2.36 கோடிக்கு மேற்பட்ட பெண்கள் பயனாளிகள். நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடப்பதால், அந்த மாதத்திற்கான தொகையை முன்கூட்டியே பாஜக கூட்டணி அரசு வழங்கியது. வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் டிசம்பர் மாத தவணை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இவை பாஜக கூட்டணியின் வெற்றிக்கு பெரும் துணை செய்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் பாஜகவினர், இதே திட்டத்தை மகாராஷ்டிராவில் செயல்படுத்தி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டனர்.