அறிக்கைகள்தமிழகம்

தமிழகத்தில் கலகத்தை உருவாக்க பாஜக முயற்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை

தமிழ்நாட்டில் தாங்கள் கால் ஊன்ற முடியாத நிலையில், கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் மிக மலிவான முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜகவின் வன்முறை அரசியலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

தங்களின் கொள்கை பலத்தால் அல்லது தங்களது ஒன்றிய ஆட்சியின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், நிறைவேற்றியது என எதனையும் வெளிப்படுத்த இயலாத நிலையில் கலகம் செய்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் அற்பத்தனமான செயலில் பாஜக ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

பொது இடங்களில் கொடி ஏற்றுவது குறித்து உரிய அனுமதியை உரியவர்களிடத்தில் பெறாமல், வேண்டுமென்றே கொடி நடுவது, அதனைத் தடுக்க முயற்சிக்கும் காவல் துறையினரை தாக்குவது, தரம் தாழ்ந்த முறையில் நடந்து கொள்வது, இதன் மூலம் கலவரத்தை உருவாக்கி சட்டம், ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று கூக்குரல் எழுப்புவது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜகவின் வன்முறை செயல்பாடுகளை கண்டிக்க வேண்டிய அக்கட்சியின், அகில இந்திய தலைமை நால்வர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து, விசாரணைக்கு அனுப்புகின்றது.

அக்குழு ஒரே நாளில் விசாரணையை முடித்து தமிழ்நாடு அரசின் மீது பழி சுமத்தி பேட்டி கொடுத்ததுடன், அரசின் மீது புகார் தெரிவித்து ஆளுநரிடம் புகார் மனு கொடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இப்புகார் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுப்பார் என்று மிரட்டும் தொணியில் கூறுகின்றார். இவை யாவும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை சிதைப்பதாகும்.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் திட்டமிட்டே சட்டம், ஒழுங்குப் பிரச்சனைகளை உருவாக்கிட பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button