மோடி அரசே, மாநிலங்களின் நிதி தன்னாட்சியை பறிக்காதே! டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வ.மணிமாறன்
மாநிலங்களின் நிதி தன்னாட்சியைப் பறிக்கும் மோடி அரசைக் கண்டித்து, டெல்லி ஜந்தர்மந்தரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, மாநிலங்களின் நிதி தன்னாட்சியையும் மாநில சுயாட்சியையும் பறிக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது.
ஜிஎஸ்டி, வருமான வரி, கார்ப்பரேட் வரி, டீசல், பெட்ரோல் மீதான கலால் வரி, செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் (surcharge) போன்ற வரிகளை மாநிலங்களிடம் இருந்து ஒன்றிய அரசு வசூலித்துக் கொள்கிறது. ஆனால், மாநிலங்களுக்கு வரிப் பங்கீடாக வழங்க வேண்டிய தொகையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைத்து விட்டது. குறிப்பாக கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பல வகைகளிலும் வஞ்சித்துக் கொண்டிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டினர்.
“நிதி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மாநிலங்களின் கழுத்தை நெரிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. நமது குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகத் தன்மையைப் பாதுகாக்கவும், கூட்டாட்சிக்கு எதிரான ஆர்எஸ்எஸ்-பாஜகவை எதிர்ப்பதிலும் தோற்கடிப்பதிலும் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி வாயிலாக உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான், திமுக சார்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திருச்சி சிவா, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கபில்சிபல், பினாய் விஸ்வம், சந்தோஷ்குமார், ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக, கேரள பவனில் இருந்து ஜந்தர் மந்தருக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
கேரளம் நடத்திய இந்தப் போராட்டம், கூட்டுறவு – கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கும் போராட்டமாகும் இதேபோன்று ஏற்கனவே ஜந்தர் மந்தரில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் போராட்டம் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.