
போர்க்குணமிக்க தோழர்களே!
ஜனநாயகப் போர்வையை மிகக் கெட்டியாகப் போர்த்திக் கொண்டு, ஜனநாயகம் என்கிற பெயரிலேயே, அராஜகம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதே ஒன்றிய அரசு. அவ்வரசு நிதிநிலை அறிக்கையினை ஆண்டுதோறும் முன்வைக்கிறது.
நாடு விடுதலை பெற்ற பின்பு, நேருவின் தலைமையிலான ஆட்சி, நாட்டை மேம்படுத்த ஐந்தாண்டுத் திட்டங்களையும், அதனைச் செயலாக்கத் திட்டக்குழுவையும் உருவாக்கி, அக்குழுவின் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் சீரான வளர்ச்சியைப் பெற வேண்டும் என்கிற முறையில் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வந்தது.
மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் பணியாக ஐந்தாண்டுத் திட்டக் குழு கலைக்கப்பட்டது.
நாடு முழுவதும் வசூல் செய்கின்ற வரியை ஒன்றியத்தில் குவித்து வைத்துக் கொண்டு, தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
நமது அரசியலமைப்புச் சட்டம் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கி உள்ளது.
அரசியல் கட்சிகள், அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என உருவாக்கவும், செயல்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டுகின்றது.
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தான் விரும்புகிற கட்சியில் சேரவும், செயல்படவும் வழிவகை செய்யப்படுவது மட்டுமல்ல, தான் விரும்பும் கட்சிக்கு அல்லது போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களிக்க உரிமை வழங்குகின்றது.
அத்தகைய உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகளாகும். அத்தகைய உரிமையைப் பறிப்பதற்கு, எவருக்கும் உரிமை கிடையாது.
ஆனால் அத்தகைய மகத்தான உரிமையை மோடி அரசாங்கம் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றிப் பறிக்கின்றது.
தனது கட்சிக்கு அல்லது தான் ஆதரிக்கும் கட்சிக்கு மக்கள் ஆதரவளித்திடல் வேண்டும். தான் ஆதரிக்கின்ற கட்சிக்கு, வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றார் மோடி.
தனது கட்சியோ அல்லது தான் அங்கம் வகிக்கும் கூட்டணியோ மாநிலத்தில் ஆட்சியில் இல்லை என்றால், அத்தகைய மாநில மக்களைப் பழி வாங்குவேன் என்று அச்சுறுத்தி வருகின்றார் திருவாளர் மோடி.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் உள்ளன.
இம்மாநிலங்களைப் பழிவாங்கியே தீருவேன் என்று சபதமிட்டுச் செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசு.
குறிப்பாக தமிழ்நாடு தொடர்ந்து ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்கிற பெயர்கூட இடம் பெறவில்லை.
தமிழ்நாடு தொடர்ச்சியாக இயற்கைச் சீற்றத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
விவசாயம் அழிந்து, விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகின்றது. பாடுபட்டு உருவாக்கிய நெல், கரும்பு, சோளம் என அனைத்துப் பயிர்களும் அழிகின்றன.
சாகுபடி செலவிற்கு பெற்ற கடனைத் திரும்பச் செலுத்திட முடியவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30,000 வரை பெரும் நட்டம் ஏற்படுகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து நிர்க்கதிக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பை யார் ஈடு செய்வது?
விவசாயம் மட்டுமல்ல, ஏழை எளிய மக்களின் குடிசை வீடுகள் பெரும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு, மக்கள் நட்ட நடுவீதியில் நிற்க வேண்டிய கொடிய அவலத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கான வாழ்வாதாரத்தை யார் அளிப்பது?
விவசாயம், வீடுகள் மட்டுமல்ல, சாலைகள், மின்சாரம், அரசு கட்டிடங்கள் என அனைத்தும் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. அவை அனைத்தையும் புதுப்பித்து, பழைய நிலைக்குத் திரும்ப பல ஆயிரம் கோடி ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இதனை எவ்வாறு ஈடு செய்வது?
தேசியப் பேரிடர் நிதி என்று ஒன்றிய அரசின் வசம் குவிந்து கிடக்கின்றது. அந்நிதி என்பது பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, மக்களுக்கு வழங்குவதற்குத்தான். ஆனால் அவற்றைத் தர முடியாது என்று ஒன்றிய அரசு கூறினால், தர மறுத்தால் அதற்குப் பெயர் என்ன?
இயற்கைச் சீற்றத்தால் விவசாயம், வீடுகள், சாலைகள், கட்டிடங்கள், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படுவதுடன், விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகின்றன. அத்தகைய குடும்பங்களைக் காப்பது யார்? கால்நடை இழப்புகளை ஈடு செய்வது யார்?
ஒன்றிய அரசுக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லையா? தமிழ்நாடு என்றால் பேரிடர் நிதி வழங்க மாட்டேன். உ.பி என்றால் மட்டும் அள்ளித் தருவேன் என்பது எத்தகைய ஜனநாயகம்?
வேளாண் தொழில் எந்திரமயமாகிவிட்ட நிலையில், இதனைச் சார்ந்து நம்பியுள்ள நாடு முழுவதும் உள்ள 8 கோடி கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு, ஒரு வேளை கஞ்சிக்காவது வழிவகை செய்வதுதான் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன.
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், இத் திட்டத்திற்கான நிதி ஆண்டுதோறும் குறைக்கப்படுவது மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டே வருகின்றது.
ஏழைகளின் வலியை உணர்ந்த பிரதமர் மோடியின் சாதனை இது?
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான நிதி ஏறத்தாழ 1200 கோடிக்கு மேல் வழங்காமல் உள்ளன.
இதேபோன்று கல்விக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 2152 கோடியை ஒன்றிய அரசு வழங்க மறுத்து வருகின்றது. மறுப்பது மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதியை குஜராத்துக்குக் கொடுக்கிறது.
நாட்டில் ஜிஎஸ்டி மூலம் அதிக நிதி வழங்கி வருவது தமிழ்நாடு என்பது எல்லோரும் அறிந்ததே!
அத்தகைய மாநிலம் பல்வேறு வகையாலும் வஞ்சிக்கப்படுகின்றது. நிதி கேட்டால் ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகின்றார் “வரி கொடுக்குறோம், எங்களுக்கு நிதி கொடுங்கள் என்று கேட்பது, அற்பத்தனமானது” என்று கூறுகின்றார்.
நிதி கேட்பது அற்பத்தனம் என்றால் மறுப்பது அயோக்கியத்தனம் அல்லவா?
ஒன்றிய அரசின் நடவடிக்கை என்பது, என்னை ஆதரிக்க வேண்டும். எனக்கு ஓட்டுப் போட வேண்டும், என் கட்சியின் ஆட்சியை தமிழ்நாட்டில், தமிழக மக்கள் அமைக்க வேண்டும். இதனை மறுத்தால், பழிவாங்குவேன் என்று சொல்லாமல் சொல்லுகின்றார்!
அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையைத் தனது ஆட்சியின் மூலம் அப்பட்டமாகப் பறிக்கின்றார்!
ஜனநாயகப் போர்வையில், இத்தகைய அராஜகத்தை மோடி மேற்கொள்கிறார்!
இவர்களுக்கு இத்தகைய அதிகாரத்தை யார் வழங்கியது?
யாரும் வழங்கவில்லை. இவராகவே எடுத்துக் கொள்கிறார்?
இதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம்! பாசிசம்!
இத்தகைய சர்வாதிகாரத்தை முறியடிக்க, முளையிலேயே கிள்ளி எறிந்திட ஆயத்தமாவீர்! அணிவகுப்பீர்!
மீண்டும் சந்திப்போம்,