அறிக்கைகள்மாநில செயலாளர்

அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை

அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னர் தாம்பரம் வட்டத்திலும் பிறகு, தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு எனப் பிரித்து இரண்டு மாவட்டங்களாக அமைத்ததால் ஆலந்தூர் வட்டம் என்று மாற்றப்பட்டு, தற்போது பல்லாவரம் வட்டத்தில் அனகாபுத்தூர் உள்ளது. இங்கு புல எண்கள் 136, 171, 181 உட்பட பல்வேறு புல எண்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல பத்தாண்டுகளாக வழிவழியாக கூரை வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றன. இந்த நிலப்பரப்பு 1906 மற்றும் 1938 ஆண்டுகளின் நில அளவைத் துறையின் ஆவணங்களிலும், அதற்குப் பின்வந்த காலங்களில் நிலஅளவைத் துறை வெளியிட்டுள்ள ஆவணங்களிலும் இப்பகுதி, குடியிருப்புப் பகுதிகள் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே தமிழ்நாடு அரசும், தொடர்புடைய துறைகளும் இப்பகுதியில் வசித்து வரும் குடும்பங்களுக்கு மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கியுள்ளன. மேலும் இப்பகுதிகளில் 3 சென்ட் மற்றும் அதற்கும் கூடுதலான நிலப்பரப்பில் குடியிருப்பவர்களுக்கு சொத்துவரி விதித்து, ஆண்டுதோறும் உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அனகாபுத்தூர் பகுதியில் அமைதியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் எப்படி ஆக்கிரமிப்பு குடும்பங்கள் என வகைப்படுத்தப்பட்டன? இந்தப் பகுதி நில ஆவணங்களின் உண்மைத் தன்மை உரிய முறையில் மாண்பமை நீதிமன்றங்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதா? இது தொடர்பான வழக்குகளில் நில வியாபார நிறுவனங்களின் செல்வாக்கும், அழுத்தமும் இருக்கிறதா? அவ்வப்போது அரசின் நகராட்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆவணங்களை முறையாக கையாண்டும், பராமரித்தும் வந்துள்ளனரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதுடன், அனகாபுத்தூர் பகுதி மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்கும் வகையில் கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

  • அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் குடும்பங்கள் அனைத்துக்கும் மனைப் பட்டா வழங்க வேண்டும்.
  • அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக அரசின் செலவில் கட்டித் தரப்பட வேண்டும்.
  • நீதிமன்ற தீர்ப்புகள் நிர்பந்திக்கும் எனில் உரிய முறையில் மேல் முறையீடு செய்து, பல பத்தாண்டுகளாக வாழ்ந்து வரும் குடும்பங்களின் வாழ்வுரிமை, வசிப்பிட உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.
  • நில ஆவணங்கள் பதிவு மற்றும் வகை மாற்றம் போன்றவற்றை மறு ஆய்வு செய்து, தவறுகள் கண்டறியப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசின் நகர்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் தக்க உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button