
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் காட்டுத் தீயினால் சாம்பல் மேடாகி வருகிறது. அந்தக் காட்சித் தொகுப்புகளைப் பார்க்கும்போது, அவையெல்லாம் ஏதோவொரு ஹாலிவுட் சினிமாவில் வரும் அபத்தமான காட்சியென்றே நினைத்திருந்தேன். பின்னர் பிபிசி நியூஸ் தொலைக்காட்சியில் அதே காட்சிகளைத் திரும்பப் பார்த்துத்தான் என் மனத்தைத் திருத்திக்கொண்டேன்.
போன தேர்தலில் ட்ரம்ப்பை நிராகரித்து பைடனின் வெற்றியைக் காண உலகம் ஆர்வப்பட்டதில் முக்கியமான ஒரு விசயம் உண்டு. அவர் துணை அதிபராக இருந்த காலத்தில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வழிமுறைகளை அதற்கான சர்வதேச மாநாட்டில் பேசியிருந்தார்; அதுவும் போதாதென்று அவர் எழுதிய சுற்றுச்சூழல் குறித்த நூல் மிகவும் கவனம்பெற்றது. ஆகவே அவர் அதிபரானால் உலக சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாய் இருப்பாரென்று அமெரிக்கர்களும் நம்பி வாக்களித்தார்கள். என்ன செய்வது? அமெரிக்க அரச பீடம் தன் நாற்காலியில் அமரும் எல்லோரையும் சர்வதேசப் பயங்கரவாதியாக மாற்றிவிடும் தன்மைகொண்டதல்லவா? அதன் விதிக்கேற்ப பைடனாலும் நற்பயன்கள் எவையும் நிகழவில்லை.
மாறாக, உக்ரைன்மீது படையெடுக்கும் நிர்ப்பந்தத்தை ரஷ்யாவுக்கு அளித்தார்; அப்பாவி பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேலை நிதியுதவியாலும் ஆயுத உதவியாலும் தூண்டிவிட்டார் ஐ.நா.அவையில் தான்தோன்றித் தனமான ஆதரவும் கொடுத்து மானுடப் பேரழிவுக்குத் துணையிருந்தார். அதன்பொருட்டாக உலக சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேட்டை உருவாக்கியவராக பைடன் தன் கடைசி நாட்களில் நிற்கிறார். பலஸ்தீனத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாயிருந்தால் இரண்டு தலைமுறைக் காலம் நமக்குத் தேவைப்படுகிறது. பைடனால்தான் இரண்டு போர்க்களங்களும் நிகழ்வதாக ட்ரம்ப்பே குற்றம்சாட்டும் அளவுக்குக் கேலிப்பொருளானார் பைடன்.
லாஸ்ஏஞ்செல்ஸ் சேதாரமாகப் பதினைந்தாயிரம் கோடி டாலரை நிர்ணயம்செய்துள்ளார்கள் நிபுணர்கள். பலஸ்தீன இனப்படுகொலைக்கு பைடன் வழங்கியிருக்கும் தொகை இதைவிட அதிகம். அதனால் அதிபர் பைடன் இப்போது செலவழிக்க நிதியில்லாமல் தத்தளிக்கிறார். இதனால் பைடனைச் சுண்டக் காய்ச்சுகிறார்கள் அமெரிக்கர்கள், “பலஸ்தீன இனப் படுகொலைக்குத் துணையாயிருந்து எம்மை அழியவிட்டீரே,” என்று!
நிலைமை இப்படியிருக்கையில் பலஸ்தீனப் போராளிகள் பிணைக்கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் மொத்த அரபுலகையும் நரகமாக்கிவிடுவேன் என்று கொக்கரிக்கிறார் ட்ரம்ப். அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நரகமாகிவரும் அவலமே தெரியவில்லை. இதனாலும் ட்ரம்ப் மீதும் பாய்கிறார்கள் குடிமக்கள். “ஐயா உம்முடைய கொக்கரிப்பெல்லாம் போதும்; லாஸ் ஏஞ்செல்ஸ் வாரும்,” என்று சாட்டையை விளாசியதும் அந்த அடி தாளாத ட்ரம்ப் லாஸ்ஏஞ்சல்ஸின் நரக மேட்டை நோக்கிப் பயந்தோடியிருக்கிறார். மத்திய கிழக்கு நரகமானால் அது எப்படியிருக்கும் என்ற காட்சியைத் தன் சொந்தமண்ணிலே கண்டு களிமண் பொம்மையாக நிற்கிறார்.
ஆக அமெரிக்காவின் பி(ரமா)ண்டம் இப்படி நடுத்தெருப் பிணமாகக் கிடக்கிறது. ஆனால் நமக்கு அமெரிக்காவின் ஹாலிவுட் படங்கள் போதித்ததென்ன? சூரியனில் ஓட்டை விழுந்தாலும் இரண்டு அமெரிக்க ஜாம்பவான்கள் அங்கே பறந்துபோய் சூரியனின் ஓட்டையை செல்லோ டேப்பினால் ஒட்டி, ஓட்டையை அடைத்துவிட்டதாகச் சொல்வார்கள்; அப்படிச் சொல்லியதும் போதாதென்று, இந்தப் பூவுலகையே அமெரிக்கா காப்பாற்றிவிட்டதாக ஜம்பம் வேறு அடிப்பார்கள்.
அமெரிக்க அதிபராக இரண்டாம் புஷ் இருந்தபோது, அமெரிக்காவைத் தாக்கிய பெரும்புயலால் நாட்டின் ஒரு பகுதி சின்னாபின்னமாகிக் கிடந்தது. அந்தப் பகுதிக்குச் சென்று தம் மக்களை ஆற்றுப்படுத்த வக்கில்லாமல் புஷ் நிர்வாகம் கைபிசைந்து நின்றது. அமெரிக்க மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சையளிக்கவும் தயாராயில்லை. அன்று அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவதற்காக அந்த நாட்டுக்கு நானூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களை அனுப்பி அவர்களைக் காப்பாற்றியவர் யாரென்றால், அமெரிக்காவின் முழு எதிரியான கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோதான். அப்படியாக ஒரு பெரும் அவமானத்தை அமெரிக்காவுக்குப் பரிசளித்தார் காஸ்ட்ரோ.
ஏன் அமெரிக்கா தன் மக்களைக் காப்பாற்ற முடியாமல் பரிதவிக்கிறது? பெரிய நிர்வாகக் கட்டுக்கோப்பும் சாலை வசதிகளோடு போக்குவரத்துச் சாதனங்களும் நிரம்பியுள்ள நாடு பரிதவிப்பதன் காரணமென்ன? யோசித்தால் மூன்று காரணங்களைச் சொல்ல முடியும்.
1) அமெரிக்காவுக்கு எல்லாமே வணிகம்தான் – உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை. அதாவது அமெரிக்கக் கல்விமுறை சேவை மனப்பான்மையில் உருவாக்கப்பட்டதன்று.
2) அமெரிக்காவுக்குப் பாரம்பரிய விழுமியங்கள் கிடையாது. நம்நாட்டைப் போலவோ ஏனைய நாடுகளைப் போலவோ அவற்றின் குடிமக்கள் இணைந்தும் பிணைந்தும் வாழ்ந்திட வகையற்றுப் போனவர்கள். அதன் வரலாறு நானூறு ஆண்டுகளுக்குள் அடங்கிநிற்பது. அமெரிக்கக் கண்டத்தின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை முழுமையாக அழித்தொழித்துவிட்டுக் குடியேறிய ஐரோப்பிய வம்சாவளியினரே இன்றைய அமெரிக்கர்கள். எனவே பண்பாட்டு வேர் கிடையாது. அதன் ஆதித் தோற்றத்திலேயே வன்முறையும் பேராசையும் ஒருசேர இணைந்துவிட்டன. இப் பண்புதான் அமெரிக்கர்களாக அவர்களை வடிவமைத்தது. மேலும் அமெரிக்க நிலப்பரப்பு இந்தியாவைப்போல நான்கு மடங்கு விரிவுகொண்டது. அதனால் விரிந்துபரவிய ஐரோப்பியர்கள் ஒன்றிணைந்து வாழும் வாய்ப்பைப் பெறாமல் போய்விட்டார்கள்.
3) தாம் வளர்ச்சியடையும் நோக்கில் பிற நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்க பலப்பல நாடுகளில் புகுந்து போர் நடத்தியவர்கள் அவர்கள். அதனால் ஏற்பட்ட வேகமானது அந்நாடுகளையும் அந்நாட்டு மக்களையும் முழுமையாகக் கொன்றொழிக்கவும் தயங்காத மனப்பான்மையை அவர்களிடம் உருவாக்கியிருக்கிறது.
இத்துடன் அவ்வளவு பெரிய தீசூழ் நகரில் 24பேர்தான் பலியானார்கள் என்ற செய்தியை அந்நாடு வெளியிட்டுள்ளது. இந்தப் பலி எண்ணிக்கை நம்பும்படியாகவா இருக்கிறது?
அமெரிக்காவின் இந்தச் சீரழிவுகளையும் பலிகளின் எண்ணிக்கையையும் அங்குள்ள ஊடகவுலகம் அவ்வளவு துல்லியமாகச் சொல்ல முயற்சி செய்வதில்லை. உலக ஆதிபத்திய சக்தியாக அமெரிக்காவை நிறுவியவை இந்த ஊடகவுலகம்தான். பின் தாம் செய்த வேலையை அவை தாமே சீர்குலைக்க முயற்சி செய்யாதல்லவா? அமெரிக்கப் பி(ரமா)ண்டத்தைத் தாமே சிதையவிட்டால், இன்னொரு பெரிய நஷ்டமும் உண்டாகும்.
அது முதலாளித்துவப் பொருளாதாரம் பற்றி உலகுக்குப் போதித்துவைத்த பாடங்கள். அவை பொய்யானவை என்ற கருத்தும் பரவிட, அதனால் தம் சுயநலமான வாழ்க்கையுடன் வந்துசேர்ந்த அனைத்தும் தகர்ந்துபோய்விடும் அபாயம் இருக்கிறது.
இப்படியாக நாம் ஏமாந்தோம்; உலகமும் ஏமாந்தது. ஆனால் லாஸ்எஞ்செல்ஸ் மக்கள் தம் படோடாபங்கள் கருகிப்போக பலஸ்தீன மக்களைப் போல கஞ்சித் தொட்டிக்குக் காத்துக்கிடக்கிறார்கள். இந்தக் காட்சி அதன் வரலாற்றுச் சித்திரமாக மாறப்போவதை எந்தவொரு சக்தியாலும் தகர்க்க முடியாது.
வரலாற்றில் அமெரிக்காவும் மண்டியிட்டுக் கிடக்கும் ஒரு சிற்றெறும்புதான்.