அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18வது மாநாட்டுத் தீர்மானங்கள்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் (AIYF) தமிழ்நாடு மாநில 18வது மாநாடு தருமபுரியில் நடைபெறுகிறது. மாநாட்டின் 2வது நாளான இன்று (27.01.2025) வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கு என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை வருமாறு:
-
வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கு!
இந்திய குடிமக்கள் அனைவரும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ப அரசின் கொள்கைகள், திட்டங்கள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்டவை அடிப்படையானதாகும். இவற்றைப் குடிமக்கள் பெற வேண்டுமென்றால், சமமான கல்வியும், வேலையும் இன்றியமையாததாகும். ஆனால், விடுதலைக்குப் பிறகு, இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு தற்போது வேலையின்மை பன்மடங்கு பெருகியுள்ளது. நிதி மூலதனத்திற்கு ஆதரவாகவும், இந்திய இளைஞர்களின் நலனுக்கு எதிராகவும் அரசின் கொள்கைகள் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 19 ஆனது பேச்சுரிமை, ஆயுதங்களின்றி கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட உரிமைகளை அடிப்படை உரிமைகளாக அங்கீகரித்திருக்கிறது. இதனால், இவ்வுரிமைகள் பாதிக்கப்பட்டால் எந்தவொரு இந்திய குடிமகனும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும்; தீர்வைப் பெற முடியும்; உரிமைகள் நிலைநாட்டப்படும். ஆனால், வேலை உரிமை என்பது அடிப்படை உரிமையாக இல்லாமல், அரசியலமைப்புச் சட்டம் பகுதி IVன் கீழான சாதாரண உரிமையாக உள்ளது. அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டால் மட்டுமே இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். வேலை கிடைக்காத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வேலை பெற முடியும்.
எனவே, வேலை பெறும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் சரத்து 19ன் கீழான அடிப்படை உரிமையாக கொண்டு வர நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டுமென ஒன்றிய அரசை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18வது மாநாடு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
-
வேலையில்லா கால நிவாரணமாக ரூ.7000 வழங்கிடுக!
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலை தேடுவோர் பட்டியலில் சேர்கின்றனர். இதில், சுமார் 83% பேர் இளைஞர்கள். இவர்கள் உழைப்பை செலுத்துவதற்கு தயாராக இருந்தாலும் பெருமளவில் வேலை கிடைக்கப் பெறாமல் இருக்கிறார்கள்.
வேலை என்பது அரசின் பொறுப்பு, வேலையின்மைக்கு காரணம் அரசின் கொள்கைகள்தான் காரணம் என்பதை உணர்ந்துதான் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் ஒருவர் வேலை செய்ய தகுதி இருந்தும், வேலை கிடைக்காதவராக இருந்தால், வேலை கிடைக்கும் வரை அரசே மாதந்தோறும் நிவாரணத்தொகை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில், இந்திய அளவில் பெயரளவில் மட்டுமே வேலை இல்லா கால நிவாரணங்கள் சொற்ப நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலையில்லா கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.7000த்தை ஒன்றிய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
-
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிடுக!
மாநிலங்கள் இணைந்த ஒன்றியமாக அமைந்துள்ள இந்திய நாட்டின் கட்டமைப்பில் இன, மொழி, கலை, கலாச்சார, பண்பு, பழக்கவழக்கங்கள் போன்றவைகளில் வேறுபட்ட, தனித்துவம் வாய்ந்த தன்மைகள் நிலவுகின்றன. இதன் தொன்மை வரலாற்றையும், வழிவழியான நல்லியல்பு மரபுகளையும் பேணும் கல்வி முறையும் மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது. மேலும், வேற்றுமையில் ஒற்றுமை பேணும் கொள்கை வழி நின்று பன்மைத்துவத்துடன் கல்வி முறை வளர்ந்து வருகிறது. ஆனால், ஒன்றியத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பெடுத்ததற்குப் பின்னால், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சி முறைக்கு எதிராகவும், தாராளமய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை முற்றிலுமாக பறித்து வருகிறது.
ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள “நீட்” தேர்வை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அனைத்துப் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கும் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு முறையை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இது போன்ற ஒற்றை அதிகாரக் கொள்கைகள் இந்திய விடுதலைக் குறிக்கோள்கள், இந்திய அரசியலமைப்பின் குறிக்கோள்கள், கூட்டாட்சி முறை ஆகியவற்றிற்கு எதிரானது. கல்வியில் மாநில அரசுகளின் உரிமைப் பறிப்பு என்பது கல்வியில் அந்நியச் சுரண்டலுக்கு வழி வகுக்கும். இந்திய நாட்டை கல்விச் சந்தைக்கான காலனியாக்குவதை அனுமதிக்க முடியாது. எனவே, மொழி வழி மாநில அரசுகளின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அரசியலமைப்பில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
-
அரசு காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிடுக!
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை தமிழ்நாடளவில் 67.8 லட்சமாகவும், இந்திய அளவில் 4.57 கோடியாகவும் உள்ளது. மேலும், வேலை கேட்டு பதிவு செய்யாதவர்களும் பல கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். மறுபுறம், ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
வேலையில்லா திண்டாட்டம் பல்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய, மாநில அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
-
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக!
2014ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்னால் தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசின் காலிப் பணியிடங்களில் வட மாநிலத்தவர்களை பெருமளவில் பணியமர்த்தி வருகிறது. தகுதி இருந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டிலுள்ள உள்ள ஒன்றிய அரசின் காலிப் பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க சட்டமியற்ற வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
-
கிக் தொழில்களுக்கு அரசே செயலிகளை துவங்க வேண்டும்!
இந்தியாவில் உணவு மற்றும் பொருள் வினியோகம், டாக்ஸி போன்ற கிக் தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சம் பேர் உள்ளிட்டு இந்திய அளவில் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உபெர், ஓலா, ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற நிறுவனங்கள் தங்களது இணையவழியிலான தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் கிக் தொழில்களை நடத்தி வருகின்றன.
கிக் தொழிலாளர்களை இந்நிறுவனங்கள், தொழிலாளர்களாக அல்லாமல் பங்குதாரர்களாக வகைப்படுத்துகின்றனர். இதனால், இவர்கள் தொழிலாளர் நலச் சட்டங்களின்படி எந்த உரிமையும் பெற முடியாதவர்களாகின்றனர். பணிப்பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் ஆகியவை இல்லை. மேலும், பதவி உயர்வு, ஊதிய உயர்வும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வேலைக்கான ஐடி முடக்கப்படும் அபாயத்திலேயே பணியாற்றி வருகின்றனர். அரசே இத்தொழில்களுக்கான செயலிகளை உருவாக்கினால், இத்தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும்; அரசிற்கும் வருமானம் கிடைக்கும்.
எனவே, உணவு மற்றும் பொருள் வினியோகம், டாக்ஸி போன்ற கிக் தொழில்களுக்கான செயலிகளை அரசே துவங்கி நடத்த வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
-
பணியாளர்கள், மாணவர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ளும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக!
“தனியார் கல்வி நிறுவனங்களில், ஒரு மாணவரை சேர்க்கும்போதோ, ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போதே, அவரது சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபின் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவரின் கல்விச் சான்றிதழ்கள் என்பது அவரின் சொத்து ஆகும். இந்நிறுவனங்கள் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்வது அவரது சொத்தைப் பிடுங்கி வைத்துக் கொள்வதற்குச் சமம். சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ளும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஒன்றிய, மாநில அரசுகளும், நீதிமன்றங்களும், யு.ஜி.சி.யும், பல்கலைக்கழகங்களும் பலமுறை தெரிவித்துள்ளன.
ஆனால், இவற்றை மீறி தொழில் நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்கள், பணியாளர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்கின்றன. படிப்பை பாதியில்விட்டு வெளியேறும் மாணவனுக்கோ, ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் இளைஞனுக்கோ சான்றிதழ்களை திருப்பிக் கேட்கும்போது அவை மறுக்கப்படுகின்றன. அரசின் உத்தரவுகளை, சட்டங்களை இந்நிறுவனங்கள் மதிப்பதே இல்லை. இதனால் பல பேர் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்; தற்கொலையும் செய்துகொள்கின்றனர்.
எனவே, அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
-
வனத்துறையில் பல்லாண்டுகாலம் பணியாற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்களை ‘வெளிமுகமையில்’ பணியமர்த்துவதை கைவிடுக!
தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் காப்புக்காடுகள், வன விலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள் ஆகியவற்றில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்டைத்தடுப்புக் காவலர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள். இதே போல் வனத்துறை அலுவலகங்களில் வாகன ஓட்டுநர்கள், கணிணி இயக்குநர்கள், ஆய்வக உதவியாளர்கள் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் பட்டியல் பழங்குடியினத்தவர் ஆவர்; மற்றவர்கள் பட்டியலினம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் ஆவர்.
வேட்டையை தடுத்தல் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு, வனத்தில் புகைப் படக்கருவிகளை பொருத்துதல் மற்றும் பராமரித்தல், வனத்தை விட்டு வெளியேறும் வன விலங்குகளை வனத்திற்குள் திருப்பியனுப்பி, மனித – விலங்கு மோதலை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,500 மட்டுமே வழங்கப்படுகிறது. விடுப்போ இதர பணிப்பாதுகாப்போ ஏதும் இல்லை. வன விலங்கு தாக்குதலில் காயமுற்றால் சிகிச்சைக்கும் எந்த வழியும் இல்லை; நிவாரணமும் சொல்லும்படியாக இல்லை. இவர்களில் பத்தாண்டுகள் பணி முடித்தவர்களை காலமுறை ஊதியத்தி்ல் பணியமர்த்த அரசு முடிவு செய்து, படிப்படியாக செய்தும் வருகிறது.
இவர்களை ‘வெளிமுகமைக்கு’ பணி மாற்றம் செய்ய வனத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. ‘வெளிமுகமைக்கு’ இவர்கள் மாற்றம் செய்யப்படும் போது, பணிப் பாதுகாப்பை இவர்களும், வனப் பாதுகாப்பை வனமும் முற்றிலும் இழக்க நேரிடும்.
வனத்துறையில் பணியாற்றும் ‘வேட்டைத் தடுப்பு காவலர்கள்’ மற்றும் இதர தொகுப்பூதிய பணியாளர்களை ‘வெளி முகமை’ க்கு மாற்றும் வனத்துறையின் முடிவினை கைவிட்டு-உத்தரவினை திரும்பப் பெற்று, இவர்களை தற்போது இருக்கும் நிலையிலேயே வனத் துறையின் கீழ் நேரடியாகப் பணிபுரிய வாய்ப்பளித்து, உரிய காலத்தில் கால முறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
-
தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக திரும்பப் பெறுக!
ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை 2020 பொதுக்கல்வி கட்டமைப்பை முழுமையாக சிதைக்கிறது. பாடத்திட்டம் உருவாக்குவது, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ் எடுத்துக் கொள்கிறது. மும்மொழி கொள்கையின் மூலம் இந்தி திணிப்பு, திறன் மேம்பாடு என்கிற பெயரில் குலக் கல்வியை திணிக்கிறது.
கல்வியை வணிகமாக பாவித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியக் கல்விச் சந்தையை திறந்துவிடுகிறது. சமூகத்தில் அனைத்து பிரிவினருக்கும் கல்வி கிடைக்கும் பொருட்டு பரவலாக்கலுக்கு பதிலாக மூடு திரையிடுகிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதியை புறந்தள்ளுகிறது. அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துக்களையும், பன்மை நிறைந்த இந்திய பண்பாட்டையும், உண்மை வரலாற்றையும் பாடத்திட்டங்களில் மாற்றி வருகிறது.
மேடுபள்ளமாக, ஏற்றத்தாழ்வுகள் நிரம்பி வழியும் சமூகத்தில் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, மனித மாண்புகளை வளர்த்தெடுக்கும் பண்பாட்டு கூறான கல்வியை தனது சனாதன கொள்கையை நிறுவுவதற்கான கருவியாக பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது.
காவிமயம், வணிகமயம், ஒற்றைமயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், அக்கொள்கையை மாநில அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும் என்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
-
போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக!
இந்தியாவின் மிகப் பெரும் சக்தியாக விளங்கும் இளைஞர் சமுதாயம் இன்று போதைப் பொருள் கலாச்சாரத்தால் மிக வேகமாக சீரழிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா, மது, ஹெராயின், குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட ஏதாவது ஒரு போதைப் பொருளுக்கு இந்தியாவில் அடிமையானவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 100க்கு 23ஆக உயர்ந்துள்ளது. போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து வியாபாரம் நடைபெற்று வருகிறது.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பெரும் மாபியா தலைவர்களை விட்டுவிட்டு கீழ்மட்டத்தில் இயங்கும் சிறு விற்பனையாளர்களை மட்டுமே காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
ஒருமுறை போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள், அதிலிருந்து மீண்டு வர முடியாமல், சிக்கித் தவித்து, அவர்களின் சிந்தனை சீரழிக்கப்பட்டு, மனிதத்தன்மையற்றவர்களாக மாறிவிடுகின்றனர். நாளைடைவில், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் மாறிவிடுகின்றனர்.
எனவே, போதைப் பொருள் விற்பவர்கள் மீதும், விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.
-
நீட் விலக்கு மசோதாவிற்கு உடனே ஒப்புதல் வழங்கிடுக!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வானது பணம் படைத்தவர்களும், உயர்சாதியினர் மட்டுமே மருத்துவம் பயில முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டது. கல்வியில் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிறது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய கூறுகளான கூட்டாட்சி முறையையும், சமூக நீதியையும் மறுதலிக்கிறது.
நீட் பயிற்சி மையங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் புழங்கும் தொழில் நிறுவனங்களாக மாறிவிட்டது. இந்திய மக்களுக்காக, இந்திய வளர்ச்சிக்காக என்ற சிந்தனையை மாற்றி, அன்னிய நாட்டவர் விரும்புவதுபோல், இப்பயிற்சி மையங்கள் நமது குழந்தைகள் வளர்த்தெடுக்கிறார்கள். “சொல்வதைக் கேள்” என்ற அடிப்படையிலான பயிற்சி ஜனநாயக மாண்புகளை அழித்துவிடும்.
நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டுமுறை கொண்டு வரப்பட்டும், ஒன்றிய அரசும், தமிழ்நாடு ஆளுநரும் ஒப்புதல் வழங்க மறுக்கின்றனர். எனவே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு மசோதாவிற்கு உடனே ஒன்றிய அரசு விலக்களிக்க வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18வது மாநாடு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
-
புதிய விளையாட்டு மைதானங்களை உருவாக்கிடுக!
விளையாட்டு மைதானங்களை விளையாட்டிற்காக பயன்படுத்திடுக!
மனிதனின் உடல் ஆரோக்கியம், ஆளுமை, தன்னம்பிக்கை, தைரியம், ஒழுக்கம், கூட்டுச் சிந்தனை ஆகிய வளர்ச்சிக்கு விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியலும், வணிக நோக்கமும், விளையாட்டின் மீதான அரசின் அக்கறையின்மையும் இந்திய விளையாட்டுத் துறையை சீரழித்து வருகின்றன. மேலும், இணைய வழியிலான விளையாட்டுகளின் வளர்ச்சி இளம் தலைமுறையினரை கைபேசி அடிமைகளாகவும், மன ஆரோக்கியமற்றவர்களாகவும் மாற்றி வருகின்றன.
கல்வி தீவிர வணிகமயமாக்கப்பட்டு வருவதன் ஏற்படும் சந்தைப் போட்டியால், கல்வி வளாகங்களில் விளையாட்டு வகுப்புகளுக்கான நேரம் மறுக்கப்படுகின்றது; மைதானமும், நிதி ஒதுக்கீடும் சுருக்கப்படுகின்றன. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் வணிக நோக்கத்திற்காக மாற்றப்பட்டு வருகின்றன. விளையாட்டில் சாதிக்க முயலும் இளைஞர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றனர். பதக்க கனவுகள் வெறும் கனவுகளாகவே நீடிக்கின்றன.
எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் விளையாட்டுத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, உள்ளாட்சி அமைப்புகள் தோறும் தேவைக்கேற்ப புதிய விளையாட்டு மைதானங்களை உருவாக்கவும், வணிக நோக்கத்திற்காகவும், இதர பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.
-
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்காதே!
நீர் மற்றும் காற்று மாசுபாடைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் குறைப்பது தொடர்பான காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகிய இரண்டு முக்கியமான சட்டங்களில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கின்ற வகையில் ஒன்றிய பாஜக அரசு வரைவு சட்டத்திருத்தங்களை வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு இனி மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறத் தேவையில்லை ஒன்றிய அரசே ஒப்புதல் அளிக்கலாம்; மாநில மாசு கட்டுப்பாட்டின் தலைவரை ஒன்றிய அரசே தேர்வு செய்யும் போன்ற அபாயகரமான விதிகள் இடம்பெற்றுள்ளன. மாநிலங்களின் அனுமதி இல்லாமலேயே ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற எந்தவொரு நாசகர நிறுவனங்களும் எங்கு வேண்டுமானாலும் தங்களது ஆலைகளை துவங்கவும், காடுகளை அழித்து கனிம வளங்களை சுரண்டி எடுக்கவும் இவ்விதிகள் வழிவகை செய்கின்றன.
சுற்றுச்சூழை நாசமாக்கி, இந்தியாவின் வளங்களை கார்ப்பரேட்டுகள் தங்குதடையின்றி சுரண்டி எடுப்பதற்கு ஏதுவான முறையில் அமைந்துள்ள இச்சட்டத்திருத்தங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18வது மாநாடு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
-
அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையை தடுத்து நிறுத்துக
இந்தியாவில் 1990களில் முதற்கொண்டு நவ தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், தொழிலாளர்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு மிகவும் பாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமைப்பு சார்ந்த தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர்கள் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவது அநேகமாக இப்போது கைவிடப்படுகிறது. அதற்குப் பதிலாக, புறப்பணி (Out – Sourcing) என்கிற முறையில் உற்பத்தி மற்றும் சேவைப் பணிகளானது அமைப்புச் சார்பற்ற நடவடிக்கைகளாக மாற்றப்படுகின்றன.
1970ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்பு) சட்டம் (The Contract Labour (Regulation and Abolition) Act 1970) நிரந்தரத் தன்மையுடைய பணிகளில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் பணி நீயமனம் செய்யப்படுவதைத் தடுக்கிறது. இதன் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்புகளும் உள்ளன. ஆனால், தனியார் துறையில் மட்டுமல்லாது பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசு நிர்வாகத்திலும் நிரந்தரமான தன்மையுடைய பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் தற்போது ஒப்பந்தத் தொழிலாளர் முறையே அமலாக்கப்படுகிறது. சட்டம் இயற்றிய அரசுகளே சட்டமீறல் செய்கின்றன; சட்ட உரிமைகள் மறுத்து சுரண்டலுக்கு ஆதரவாக நிற்கின்றன.
ஆகவே, தனியார் துறை தொழிற்சாலைகள், வங்கி, காப்பீடு போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசு நிர்வாகத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அநீதியான அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையை தடை செய்ய வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
-
ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றிடுக!
சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் வயது வந்த ஆணும் பெண்ணும் தங்களின் இல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சுதந்திரம் ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். தொன்மையான சங்க இலக்கியம் கூட அப்படி இருமனம் கலந்து இளையோர் களவொழுக்கம் காண்பதைப் பேசுகிறது.
ஆனால், இடையில் வந்த சாதியம் என்ற செயற்கையான கட்டமைப்பில் சிக்கிய நமது சமூகம், பெண்களை சந்தைப் பொருளாக விற்கும் அவலத்திற்கு வித்திட்டுவிட்டது. அதிலிருந்து, நாகரீக சமுதாயம் மீண்டு காதல் மணங்களை அங்கீகரிக்க வேண்டி முற்போக்கு இயக்கங்கள் போராடி வருகின்றன. ஆனாலும், சுயசாதி பெருமை பேசும் இடைச் சாதியினர், மனமொத்து கூடி வாழ முடிவெடுக்கும் இளம் இணையர்களை ஒதுக்குவதோடு ஆணவப் படுகொலையும் செய்து வருகின்றனர். வழக்கு விசாரணைகளில் காவல்துறை மெத்தனமாக நடந்துகொள்கிறது.
வழக்கமான சட்டப்பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட நீண்டதொரு சட்டப் போராட்டத்தை நடத்தி நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்; குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் காவல்துறை பாரபட்சமில்லாமல் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என மாநில அரசையும், காவல்துறையையும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு கேட்டுக்கொள்கிறது.
-
மாநிலங்களின் கல்வி உரிமையப் பறிக்கும் யு.ஜி.சி வரைவு விதிகளைத் திரும்பப்பெறு!
பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உதவிப் பேராசிரியர் நியமனங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு புதிதாக அறிவித்திருக்கும் வரைவு விதிமுறைகள் மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக் கழகங்களின் பிரதிநிதி ஆகியோர் இடம் பெற வேண்டும் என புதிய விதிமுறைகளை வகுத்திருப்பது, மாநில அரசின் உரிமைகளை பறித்து, அதனை முற்றிலுமாக விலக்கி வைப்பதுடன், பல்கலைக் கழககங்களின் “தன்னாட்சி” நிலையை தகர்த்து, ஒன்றிய அரசின் ஏதேச்சதிகார கொள்கைகளை திணிக்கும் பேரபாயம் கொண்டதாகும். மேலும், ஒன்றிய அரசே உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்யவும் வழிவகை செய்துள்ளது.
மாநில பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்டவை. வரலாறு, மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமூக, பொருளாதார சூழல் உள்ளிட்டவை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. மாநில அரசால் மட்டுமே அந்த மாநிலத்தின் கல்வித் தேவைகளை உணர்ந்து செயலாற்ற முடியும். இது இந்தியாவை இருண்ட காலத்திற்கு இழுத்துச் செல்லும் தேசிய கல்விக் கொள்கையின் அங்கமாகும்.
எனவே, இவ்வரைவு விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
-
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்திடுக!
சமூக வலைதளங்களில் பல்வேறு செயலிகளின் ஆப்ஸ் மூலமாக ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகி வருகின்றன. போதையூட்டும் இந்த விளையாட்டுகளில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணமிழப்பு, கடன் வலையில் சிக்குதல், அதிலிருந்து மீள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என துயரமான சம்பவங்கள் நிகழ்கின்றன.
ஆன்லைன் சூதாட்டங்கள் மக்களின் உடல், மனநிலைகளை பாதிக்கிறது எனவும், அவைகளில் விளையாட்டுத் தன்மைகள் ஏதும் இல்லை எனவும், உயிர், உடமைகளுக்கு இழப்புகள் ஏற்படுத்துகிறது எனவும், ஆதலினால் ஆன்லைன் சூதாட்டங்களில் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் எனவும், இது குறித்த ஆய்வு செய்வதற்காக தமிழக அரசினால் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.சந்துரு அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை நீதிமன்ற உத்தரவு நீர்த்துபோகச் செய்து, ரம்மி நிறுவனங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. ஒன்றிய அரசு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
-
விளையாட்டு வீராங்கனைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திடக்கோரி
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தவதாக குற்றம் சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்ய கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாம்பியன்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கடந்த ஜனவரி 2023 ம் ஆண்டில் இருந்து தலைநகர் டெல்லியில் போராடி வந்தனர். அவர்களின் பெரும் போராட்டங்கள் காரணமாக உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது POSCO மற்றும் POSH சட்டங்களின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது. ஒரு பெண் குழுந்தை உட்பட ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். POSCO சட்டப்படி, புகாரை பெற்றவுடன் குற்றவாளியை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். ஆனால் இதுவரை பூஷன் கைது செய்யப்படவில்லை. பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் அவர். கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பல்வேறு வழக்குகளுக்கு ஆளான அவரை பாஜக அரசு பாதுகாத்து வருகிறது.
இவை மட்டுமல்ல. பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கும் பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பயிற்சியாளர்கள் மீது அதிகமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தங்கள் பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி பெண்களை வன்முறைக்கு ஆளாக்கி பெண்களின் வாழ்க்கையையும் கனவையும் சிதைக்கும் கயவர்களுக்கு உரிய தண்டனை தந்து பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.
எனவே, உடனடியாக விளையாட்டு துறையின் அனைத்து பிரிவுகளிலும் முறையான பாலியல் புகார் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். பெண்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் POSCO மற்றும் POSH சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.
-
காவல்துறையில் சீர்திருத்தம் செய்திடுக!
ஆங்கிலேயர் காலத்து அரசின் அடியாளாக பழக்கப்பட்ட காவல்துறை இன்றும் அதன் தன்மை மாறாது செயல்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி குற்றச் செயல்களை தடுப்பதும், நாட்டில் சட்டம் – ஒழுங்கை முறையாக பேணுவதும் காவல்துறையின் முக்கிய கடமையாகும். ஆனால், காவல்துறையே இன்றைக்கு சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் ஓர் கருவியாக உருமாறி இருப்பது வெட்கக்கேடானது. இன்று ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் காவல்துறையிடம் புகார் கொடுக்கவே அஞ்சும் சூழ்நிலை என்பது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ஆகும்.
நீதியை நிலைநாட்டாமல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அதிகார அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு காவல்துறை அநீதி இழைத்து வருகிறது. மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை, அரசு சொத்துக்களை சூறை ஆடுபவர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்க அஞ்சும் காவல்துறை சமூகத்திற்காக அனுதினமும் தன் ரத்தம் மற்றும் வேர்வை சிந்திப் போராடும் சமூக போராளிகள் மீது, அதிகார துஷ்பிரயோகம் செய்து அவர்களை மிரட்டுவதும், அவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதும் என்பது கண்டிக்கத்தக்கது.
சாதி, மதம், இனம், மொழி, அதிகாரம், வர்க்கம் என எவ்வித சாய்வுமின்றி காவல்துறையினர் செயல்படும் வகையிலும், காவல்துறை மக்களுக்காகத்தான் இயங்குகிறது என்பதை இந்த அரசு உறுதி செய்யும் வகையிலும், காவல்துறையில் விதிகள் மற்றும் சட்டங்களை மறு ஆய்வு செய்ய குழு அமைத்து, சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.
-
பாலியல் வன்முறைகளைத் தடுத்திட “பாலின சமத்துவக் கல்வியை” கட்டாயப் பாடமாக அமல்படுத்திடுக!
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆணாதிக்கம் நிறைந்த இச்சமூகம், பெண்களை ஒரு பாலியல் பண்டமாக பார்க்கப்படும் நிலையில் அவர்களின் உடல் மீது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எடுத்துக் கொள்கிறது.
ஆண் குழந்தைகள் ஒருவிதமாகவும் பெண் குழந்தைகள் வேறு விதமாகவும் சமூகம் மற்றும் குடும்பத்தால் வளர்த்தெடுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறார்கள். ஆண், பெண் குழந்தைகள் நட்பாக பழகுவது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம் சமூகத்தில் தடுக்கப்படுகிறது. அதே சமயத்தில் பாலியல் குறித்து பல தவறான தகவல்களை இணையதளங்களில் இருந்து இத்தலைமுறை குழந்தைகள் பெறுகிறார்கள். வளர்ப்புமுறை, குழந்தைகள் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளும் வாய்ப்புகள் தடுக்கப்படுதல், பாலியல் குறித்த தவறான தகவல்கள், பெண்களை பண்டமாக சித்தரிக்கும் சினிமா, வியாபார நோக்கிலான விளம்பரங்கள் என அனைத்துமே பெண்களை ஆண்களின் பாலியல் பண்டமாக்கும் கருத்தியலையே முன்நிறுத்துகின்றன. இச்சூழலில் பெண்களின் உடல் மற்றும் உணர்வு சார்ந்தவற்றை அறிவியல்பூர்வமாக விளக்கும் பாலியல் கல்வியை இளம் தலைமுறைக்கு அளிப்பது அவசியமான ஒன்றாக உள்ளது.
எனவே, ஆரம்பக் கல்வியிலேயே அறிவியல்பூர்வமான “பாலின சமத்துவக் கல்வியை” கட்டாயப் பாடமாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.
-
சாதிக்கு எதிராக கல்வியியல் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்திடுக!
சாதி என்பது பாகுபாடு கொண்ட சமூக நடவடிக்கை என்பதை மாணவர்கள் உணரும் வகையில் சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை பாடத்திட்டதின் வாயிலாக வகுப்பறை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கடவுள் நம்பிக்கை உடையவராய் இருந்தால், சாதி என்பது கடவுளுக்கே எதிரானது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், அறிவியலுக்கும் எதிரானது என்பதை வயதிற்கு ஏற்ற வகையில் பாடத் திட்டத்தின் வாயிலாக கல்வியியல் செயல்பாடு மூலம் மாணவர்களை உணரச் செய்ய வேண்டும்.
சாதிய அடையாளத்தை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வெளிப்படுத்தும் வகையில் எதையும் செய்ய அணு மதிக்கக் கூடாது. சாதிய அணி சேர்க்கை, சாதி சங்கங்களின் செயல்பாடு எந்த வகையிலும் கல்வி வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது. சாதிய ரீதியான மாணவர்களை அணிதிரட்ட முயற்சி நடந்தால் உரிய முறையில் உரிய துறைகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அத்தகைய நடவடிக்கை தடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.
-
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 58ஆக குறைத்திடுக!
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 58லிருந்து 60ஆக தமிழ்நாடு அரசால் உயர்த்தப்பட்டு தற்போது வரையிலும் நடைமுறையில் இருந்து வருகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 67.8 லட்சமாக இருக்கிறது. நிரந்தரத்தன்மை உடைய வேலைவாய்ப்புகள் அவுட்சோர்சிங் – ஒப்பந்த முறை அடிப்படையிலான வேலைகளாக மாற்றப்பட்டுள்ளன. சுமார் 4.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஓய்வு பெற்றவர்களையே ஒப்பந்த முறையில் குறைந்த சம்பளத்திற்கு மீண்டும் பணியில் அமர்த்தும் முயற்சிகளும் அரங்கேறுகின்றன. இச்சூழலில், பணி ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தியது, பணியில் இருப்பவர்களும் ஓய்வு பெறுவதும், அப்பணிகளுக்கு புதியவர்கள் சேர்வதும் என்ற சுழற்சி முறை கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இளைஞர்களும், அரசு ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை மீண்டும் 58ஆக மாற்ற வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு மாநில அரசை வலியுறுத்துகிறது.
-
தமிழக மலை கிராமங்களில் படித்து வேலையற்ற மலைவாழ் இளைஞர்களுக்கு மலை கிராமங்களிலேயே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துக!
மலை கிராமங்களில் வாழ்வாதாரம் என்பது வனப்பொருள் சேகரம், வேளாண்மையை சார்ந்தே உள்ளது. வனப் பொருட்கள் மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் பயிற்சிகளையும், தொழில் முனைவோர் பயிற்சிகளையும் வழங்க வேண்டும். மலை கிராமங்களிலேயே ஐ.டி.ஐ பயிற்சி நிறுவனங்களை நிறுவி, இருசக்கர வாகனம் பழுது பார்த்தல், எலக்ட்ரீசியன், பிளம்பிங், பிட்டர் மற்றும் மலைப்பகுதி சார்ந்த தேவை அடிப்படையில் பயிற்சிகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.
மலை கிராமங்களில் பயின்ற இளைஞர்களுக்கு TNPSC போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை மலை கிராமங்களிலேயே நிறுவ வேண்டும். மலை கிராமங்களில் உயர் கல்வி செல்பவர்களுக்கும், தொழில் தொடங்க விரும்புவருக்கும் ஆலோசனைகளை வழங்கிட வழிகாட்டிட, வழிகாட்டி மையங்களை மலை கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும்.
மலை கிராமங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மலைக் கிராமங்களில் பணியாற்றிட முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு மாநில அரசை வலியுறுத்துகிறது.
-
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்கிடு!
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான லட்சக்கணக்கான பாலியல் வன்முறை வழக்குகள் விசாரணை முடியாமல் நீதிமன்றங்களில் தேங்கி உள்ளன. ஊடகங்களின் கவனத்தை பெருகின்ற வழக்குகளில் கூட, ஒரு சில வழக்குகள் மட்டுமே விரைந்து முடிக்கப்படும் நிலை உள்ளது. பாலியல் வழக்குகளில் காவல்துறை கட்டாயமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை 24 மணி நேரத்திற்குள் தேர்ந்த அரசு மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். 2 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பினும், இவை எவையும் முறையாக பின்பற்றப்படுவதில்லை.
காவல்துறை மற்றும் நீதிதுறையினர் காட்டும் அலட்சியம், ஊழல், போதுமான ஊழியர்கள் இல்லாதது, அரசியல் தலையீடு என பல காரணங்களால், பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது அல்லது குற்றவாளிகள் தப்பித்துவிடும் நிலை ஏற்படுகிறது.
தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை 2019ம் ஆண்டை விட 2020 ல் 28.8சதம் உயர்ந்திருக்கிறது. ஆனால், பொதுவாகவே பாலியல் வழக்குகளில் 30 சதத்திற்கும் குறைவானவர்களே தண்டணை பெறுகிறார்கள். இது குற்றவாளிகளுக்கு மீண்டும் குற்றமிழைப்பதற்கான தைரியத்தை தருகிறது. பாலியல் வழக்குகளை விரைந்து விசாரணை முடித்து குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைத்திடும் நிலையில்தான் பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வழிபிறக்கும். எனவே விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது, முதல் தகவல் அறிக்கை பதியாத காவல்துறையினருக்கு சட்டபடியான தண்டனை, போதிய பணியாளர்களை நியமித்தல் ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி பாலியல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
-
கல்வி வளாகங்கள், பணிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டங்களை முறையாக அமல்படுத்திடு!
பணியிடங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் மீது பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு,குறைதீர்ப்பு) 2013 சட்டம் நிறைவேற்றப்பட்டு 9 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அச்சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இச்சட்டத்தின்படி, அனைத்து பணிடங்களிலும் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது தமிழக அரசு அதற்கான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இருப்பினும் அவை முறையாக பின்பற்றபடுகிறதா என கண்காணித்து அனைத்து பணியிடங்களிலும் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் அமைத்துள்ள பாலியல் புகார் குழுக்கள் மற்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் ஆகியவற்றை பற்றிய விவரங்களை தொழிலாளர்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். அதை முதலாளிகளின் கடமையாக சட்டம் வரையறுத்துள்ளது. அதை செய்யாத நிறுவன முதலாளிகளுக்கு தண்டனையாக அபராத தொகையும் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழிற்சாலைகளில் இவை எதுவும் முறையாக பின்பற்றபடுவதில்லை. அரசு இதை கண்காணித்து சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 10க்கும் குறைவாக பணிசெய்பவர்கள் மற்றும் அமைப்புசார தொழிலாள பெண்கள் முறையிடுவதற்கு மாவட்ட அளவிலான புகார் குழுக்கள் எங்குமே அமைக்கப்படவில்லை. தமிழக அரசு அதற்கான நடவடிக்கையையும் எடுத்து பணிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
மேலும், புகார்குழுக்கள் தங்களிடம் வரும் புகார்களை முறையாக விசாரித்து விரைவில் அறிக்கை தருவதில்லை. சில நிறுவனங்களில் புகார் குழு உறுப்பினர்களே ஆணாதிக்கத்தோடு பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சாட்டுகின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வுகளில் அரசு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நின்று அவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
-
வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கான கட்டணமில்லா தங்கும் விடுதிகளை அரசு ஏற்படுத்திடுக!
வேலையில்லா திண்டாட்டம் பன்மடங்கு அதிகரித்து வரும் இந்த சூழலில், பெண்கள், குறிப்பாக இளம்பெண்கள் தங்கள் மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆகவே, அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் வெளிமாவட்ட பெண்களுக்காக கட்டணமில்லா தங்கும் விடுதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டுமென என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
-
பெண்களை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தடைசெய்!
இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாக கூறப்படும் மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தியும், உழைக்கும் மக்களை இழிவுபடுத்தியும் கருத்துகள் ஏராளமாக உள்ளன. அதோடு அவர்கள் மீது வன்முறை செலுத்தப்படுவதையும், அவர்களை கொலை செய்வதை நியாயப்படுத்தும் விதமான கருத்துக்களே அதில் நிறைந்துள்ளன. சட்டம் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சாசன உரிமைகள் பெற்றுள்ள இன்றைய சூழலிலும் மனுதர்மத்தையே இன்றளவிலும் தன் சட்ட புத்தமாக பாஜக கருதுகிறது.
பாஜக அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் மனுதர்ம கொள்கைகளையே உள்ளடக்கமாக இருக்கின்றன. நீட், தேசியக் கல்வி கொள்கை, மாட்டுக்கறி உண்ண தடை, சாதி ஆணவப் படுகொலைகள் என அதன் ஒவ்வொரு செயல்பாட்டிலும் மனுதர்ம கருத்துகளை நடைமுறைபடுத்தி வருகிறது.
எனவே, பெண்களை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் மனுதர்மத்தை தடைசெய்ய வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.