இளைஞர்கள் அணிவகுப்பைக் காண கண் கோடி வேண்டும்
கட்சிக் கடிதம் - மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

போர்க்குணமிக்க தோழர்களே!
வகுப்புவாத வெறிபிடித்தலையும் பா.ஜ.கவின் தலைமையிலான ஆட்சி, தனது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிட மெல்ல, மெல்ல காய் நகர்த்தி வருகிறது.
தேசபக்த வேடம் புரிந்து கொண்டு நாட்டிற்கு நல்லது செய்வது போன்று பொய்த் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, நாட்டு மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும், அற்பத்தனமான காரியங்களை, கூச்சநாச்சிமின்றி, தனக்குக் கிடைத்திட்ட அதிகாரத்தைக் கொண்டு, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
சிறுபான்மை மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி, அவர்களிடத்தில் அவநம்பிக்கையை உருவாக்கி, அவர்களை அல்லல்பட வைக்கின்றது. வக்ஃப் மசோதா என்ற ஒன்றை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதனை எதிர்க்கட்சிகள், குறிப்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. எதிர்ப்பைச் சமாளிக்கவும், தாங்கள் ஜனநாயக முறையில் செயல்பட்டு வருகின்றோம் என்றதொரு போலியான தோற்றத்தை நாட்டு மக்களை நம்ப வைக்கவும், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி அதன் பரிசீலனைக்கு விடுவதாகத் தெரிவித்தனர்.
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு பாஜகவைச் சேர்ந்தவர் தலைவர் என்பது மட்டுமல்ல, பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ளவர்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆவர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறைந்த எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு அவசர அவசரமாகப் பலமுறை கூடியது. ஒவ்வொரு கூட்டத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறும் கருத்துகளுக்கு மற்றும் திருத்தங்களுக்கு மதிப்பளிப்பது இல்லை என்பது மட்டுமல்ல, கூட்டுக்குழுவின் தலைவரின் அணுகுமுறை ஜனநாயக முறையில் அமையவில்லை என்பது மட்டுமல்ல, ஆத்திரமூட்டும் நடவடிக்கையைத்தான் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் என்பது தொடர்ந்து ஊடகங்களின் மூலம் அறிந்தோம்.
இறுதியாகக் கூட்டுக் குழுவின் கடைசிக் கூட்டத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறிய எந்த ஒரு திருத்தமும் ஏற்கப்படாமல் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆளும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த “ஆமாம் சாமி” போடும் உறுப்பினர்கள் அளித்த திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன. அரசுக்கு ஆதரவாகக் கூட்டுக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படும். இதுதான் இன்றைய பா.ஜ.கவின் ஜனநாயகம்.
அடுத்து பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க ஆளும் உத்தரகண்ட் மாநிலம் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை பா.ஜ.க தலைவர்கள் வரலாற்றுச் சாதனை என்றும், பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும் என்றும், வானளாவப் புகழ்ந்து போற்றி வருகின்றனர்.
மேற்கண்ட இரு பிரச்சனைகளும் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கா? அல்லது சீர்குலைக்கவா? என்பதனை ஆழ்ந்து பரிசீலித்திடல் வேண்டும். நாட்டிற்கு நல்லது செய்வதாகக் கூறி நாட்டு மக்களைப் பிளவுபடுத்தும், அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். தங்களைத் தவிர வேறு எக்கட்சியும் அதிகாரத்திற்கு வந்து விடக் கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்கிறார்கள்.
அத்தகைய நோக்கம் பிசிறின்றி நிறைவேற வேண்டுமாயின் மக்களின் ஆதரவும், அவர்களின் வாக்குகளும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை அவர்களால் எட்ட முடியாத அளவிற்கு மக்கள் தோற்கடித்தார்கள். அத்தோல்வியைச் சரி கட்டிட அவர்களுக்குத் தெரிந்திட்ட ஆயுதம் மட்டுமல்ல, அதுவே அவர்களின் அடிப்படைக் கொள்கையாகும்.
அத்தகைய கொள்கை என்பது மக்களை மதரீதியில் பிளவுபடுவது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றார்கள். இத்தகைய அநாகரிகமான அரசியலை மேற்கொள்வதன் மூலம், தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிக, மிக அபாயகரமானது.
இத்தகைய பேரழிவிலிருந்து நாட்டைக் காக்க வேண்டாமா? அத்தகைய காரியத்தைச் செய்யப் போகின்றவர்கள் யார் என்ற வினாவிற்கு விடை கிடைத்தது தர்மபுரியில்!
ஆம்! நமது அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், தமிழ்நாடு மாநில 18-வது மாநாட்டை நடத்தித் தரும் பெரும் பொறுப்பை, தர்மபுரி மாவட்டக் குழு மிகுந்த மகிழ்ச்சியோடு மேற்கொண்டது. நம் எதிர்பார்ப்புக்கும் மேலாக மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் தோழர்கள் மிகுந்த உற்சாகப் பெருக்குடன் பணியாற்றினார்கள்.
மூத்த தோழர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், தோழர் நா.நஞ்சப்பன் தலைவராகவும், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆற்றல்மிகு தோழர் எஸ். கலைச்செல்வன் செயலாளராகவும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் எஸ். தேவராஜன் பொருளாளராகவும் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்ட நாள் முதலாய், இரவு பகல் பாராது பணியாற்றியதன் மூலம் மாநாடு வெற்றிகரமாக அமைந்தது.
நகரத்திலும், சுற்று வட்டாரங்களிலும், சுவர் விளம்பரங்கள், தட்டி, பேனர்கள் என்று மாநாட்டைப் பறை சாற்றியது. நகர் முழுவதும் நீலமும், சிவப்பும், நடுவில் நட்சத்திரமும் கொண்ட இளைஞர் பெருமன்ற கொடி அழகாக, நேர்த்தியாக, கம்பீரமாகப் பட்டொளி வீசிப் பறந்த வண்ணம் இருந்தன. சிவப்பு நீலத் தோரணங்கள் நகரை அலங்கரித்தன.
இளைஞர் பெருமன்றச் செயலாளர் தோழர் க.பாரதியும், ஏனைய நிர்வாகிகளும், பல மாதங்களாக மேற்கொண்ட இடைவிடா முயற்சிகளும், நிர்வாகிகளுக்கு தோழர் க.சந்தானம் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கியது மட்டுமின்றி, உற்சாகத்தோடும், பொறுப்புணர்வோடும் செயல்பட ஊக்குவித்து, உற்சாகம் ஊட்டியதாலும் பெரும் பயன் அளித்தது.
44 மாவட்டங்களிலும் இளைஞர் பெருமன்ற கிளைகளைப் புதுப்பித்தும், புதிய கிளை அமைப்புகளை உருவாக்கியும், இடைநிலை அமைப்புகளின் மாநாடுகளை நடத்தி முடித்து, அனைத்து மாவட்ட மாநாடுகளையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்ததுடன், கிளை முதல் அனைத்து அமைப்புகளுக்கும் இளம் தோழர்களைத், நம்பிக்கை நட்சத்திரங்களாக, புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் முத்தாய்ப்பாக மாநில மாநாடு தர்மபுரியில் ஜனவரி 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்றன. அதன் தொடக்கம் ஜனவரி 26 ஆம் நாள். ஆம்! அன்றைய நாள் நாட்டின் மிக முக்கியமான நாள். அன்றுதான் நமது நாட்டின் 26 வது குடியரசு தின நாளாகும்.
குடியரசு நாளில் தர்மபுரி நகரம், இந்நாள் வரை கண்டிராத மாபெரும் எழுச்சியைக் காண முடிந்தது. நாட்டின் எதிர்காலச் சிற்பிகள் – நம்பிக்கை நட்சத்திரங்களாக இளம் தோழர்களின் லட்சியப் பேரணியைக் கண்டது. மாற்றாரும் போற்றிடும் வண்ணம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புற்றீசல் போல் புறப்பட்டு வந்தனர்.
பெரியதோர் போர்ப்படை, எதிரி நாட்டின் இடையூறுகளை எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்க ராணுவம் அணிவகுத்து வருவதைப் போன்று, மக்கள் தொண்டரணியின் தளபதி தோழர் எம்.லகுமையா தலைமையில், சீருடை அணிந்த செந்தாண்டர்கள் கம்பீரமாய் அணிவகுத்து முன்செல்ல, அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் க.பாரதி தலைமையேற்று, இளம் பட்டாளம் பெரும் போர்படையெனத் திரண்டது. அணிவகுத்த அனைவரது கரங்களிலும் இளைஞர் பெருமன்ற கொடி இருந்தது.
ஒரு கரத்தில் கொடி என்றால், மறுகரம் முஸ்ட்டியை உயர்த்தி,
அனைவருக்கும் கட்டணமில்லாக் கல்வி வேண்டும்
அனைவருக்கும் வேலை வேண்டும்
சர்வாதிகாரத்தை முறியடிப்போம்.
பாசிசத்தை முறியடிப்போம்.
குடியரசைக் காப்போம்.
சோசலிசம் அமைப்போம்
என விண்ணதிர முழக்கமிட்டபடி அணிவகுத்ததைக் காண, கண் கோடி வேண்டும்.
வகுப்பு வாத சக்திகளே, பிளவுபடுத்தும் சக்திகளே, சர்வாதிகார சக்திகளே, பாசிச சக்திகளே! உங்களை எதிர்கொள்ள, உங்கள் கொட்டத்தை ஒடிக்கிட இதோ இளைஞர் படை ஆயத்தமாகிவிட்டது. நாட்டின் விடுதலைப் போர்க்களத்தில் மாவீரன் பகத்சிங்கும், ராஜகுருவும், சுகதேவும் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது.
எங்கள் முன்னோர்களே! நீங்கள் செய்திட்ட பெரும் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை இழக்க மாட்டோம், ஒருபோதும் இழக்க மாட்டோம் எனச் சூளுரைத்துத் திரண்ட இளம் தோழர்களே! வாழ்த்துகள்!
உங்கள் பணி தொடரட்டும்! புதிய தலைமையின் கீழ் தொய்வின்றித் தொடரட்டும்!
இளைஞர் மன்றம் இல்லா ஊரில்லை, இளைஞர் மன்றமில்லா நகரம், வார்டுகள் இல்லை என்பதனை நிலைநாட்டுங்கள்.
வகுப்புவாதச் சக்திகளின் பேராபத்தை வேரறுக்க, விடிவெள்ளியாய்க் கிளம்புங்கள். மீண்டும் ஒரு சுதந்திரப் போரை உங்கள் காலத்தில் நிகழ்த்துங்கள்.
முயன்றால் முடியாதது என எதுவும் இல்லை என்பதனை நிரூபணம் ஆக்கிய உங்களுக்கு வாழ்த்துகள்!.
மகிழ்ச்சி! பெரும் மகிழ்ச்சி!!
மீண்டும் சந்திப்போம்,
வணக்கம்,
தோழமைமிக்க,