ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -4,
கோரல் மில் வேலைநிறுத்தம்,
1906 ஆம் ஆண்டு அரசு அமைத்த பஞ்சாலைக்குழு, பரிந்துரைகளை வழங்காமல் காலம் கடத்திக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் முதலாளியான ஜே&எஃப் ஹார்வி, மதுரை, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் பஞ்சாலைகளை நடத்தினர்.
தூத்துக்குடியில் இருந்த ஆலை “தூத்துக்குடி கோரல் காட்டன் மில்” என்றழைக்கப்பட்டது. இங்கு வேலை செய்தவர்களை தொழிலாளி என்றல்ல, ‘கூலி’ என்றே அழைத்தனர். 16 மணிநேர வேலை மட்டுமல்ல, சின்னத் தவறுகளுக்குக் கூட கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். கறுப்பர்களல்லவா, வெள்ளைக்காரத் திமிர் அவர்களுக்கு கொடுமைகளை இழைத்தது.
தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகள் வ.உ.சிதம்பரனாருக்கு தெரிந்தது. அவர் சுதேசிக் கப்பல் ஓட்டி நட்டமடைந்து இருந்த நேரம். அதற்காக அவர் சும்மா இருக்கவில்லை. சுப்பிரமணிய சிவாவுடன் சென்று, தொழிலாளர்களைச் சந்தித்து கூட்டம் நடத்தினார்.
அது 1908 பிப்வரி 25ம் தேதி.
வ.உ.சிதம்பரனார் பேசினார்.
“15 நாட்கள் நீங்கள் வேலைக்குப் போகாவிட்டால், மான்செஸ்டர் அல்லாடிப் போகும். மாதம் முழுக்க கடுமையாய் உழைத்து 3 அணா, 4 அணா கூலி வாங்குகிறீர்கள். ஆனால் இங்குள்ள ஐரோப்பிய அதிகாரிகள், சும்மா கையெழுத்துப் போட்டு விட்டு 400, 500 ரூபாய் சம்பளம் எடுத்துக் கொள்கிறார்கள். வங்காளத்தில் சணல் ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து சம்பள உயர்வு பெற்றுள்ளனர். வடமேற்கு வங்க ரயில்வே தொழிலாளர்களும் போராடி கூடுதல் சம்பளம் பெற்றுள்ளனர். மூன்று நாள் மில் நின்றால் உங்களை விட மோசமாகப் பாதிக்கப்படுவது உங்கள் முதலாளி தான்” என்று வ.உ.சிதம்பரனார் எடுத்துரைத்தார்.
அடுத்த நாள் நடந்த கூட்டத்தில் எந்த வடிவத்தில் போராடுவது என விவாதிக்கப்பட்டது. இரண்டு வழிகள் இருந்தன. 1. எந்திரங்களை உடைத்து செயல்பாட்டை நிறுத்துவது (இப்படித்தான் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் 1800களில் போராடினர்) 2. தொழிலாளர்கள் வேலைக்கு வராமல் மில்லை நிறுத்த வைப்பது. முதல் வழியை நிராகரித்து வேலைநிறுத்தத்தைத் தேர்வு செய்தனர்.
1908 பி்ப்ரவரி 27ல் வேலைநிறுத்தம் தொடங்கியது. வேலைநிறுத்தத்தை விளக்கி 28 ஆம் தேதி தொழிலாளர்கள் நோட்டீஸ்களை கொடுத்தனர். இதனை அறிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், வ.உ.சியை அழைத்து “நோட்டீஸ் ஏன் போட்டீர்கள்” என்று கேட்டனர்.
வ.உ.சிதம்பரனார் தர்ம சங்க கட்டிடத்தில் தொழிலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்குள் போன சிஐடி தனது குறிப்பில், 400 பேர் அமரத்தக்க அந்த இடத்தில் ஆயிரம் பேர் குழுமியிருந்ததாகப் பதிவு செய்திருக்கிறான்.
(இன்னும் வரும்)
கட்டுரையாளர் : டி.எம்.மூர்த்தி
ஜனசக்தி ஆசிரியர்
ஏஐடியுசி தேசிய செயலாளர்