வரலாறு

இந்தியத் தொழிலாளர்களின் முதல் கோரிக்கை

டி.எம்.மூர்த்தி

ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு – 2 

இந்தியத் தொழிலாளர்களின் முதல் கோரிக்கை 

ஒரு ஷிப்ட் என்பது ஒரு நாள் முழுவதும் வேலை செய்வதாகும். அதிகாலை 4 மணிக்கு ஷிப்ட் துவங்கும். ஆனால் அன்று தனக்கு வேலை கிடைக்குமா என உறுதி செய்து கொள்ள அதற்கும் முன்னதாக, அதி-அதிகாலை 3 மணிக்கே ஆலைவாயிலுக்குப் போய்விட வேண்டும். 

காலை 4 மணிக்குத் தொடங்கும் வேலை இரவு 10 மணிக்கு முடியும். 18 மணி நேர வேலை. இரவு 10 மணிக்கு மேல் வீட்டுக்குச் சென்று 5 மணி நேரத்துக்குள் மறுபடி ஆலைவாயிலுக்கு வர வேண்டும். வாரம் 7 நாளும் வேலை. அதாவது வாரத்துக்கு 7×18= 126 மணி நேரம். (இப்போது 6×8=48 மணி நேரம் என்பதையும் நினைவில் கொள்க) இதற்கு 3 அணா முதல் 4 அணா வரை கூலி. இதுதான் முதலாவது தொழிற்சாலைச் சட்டம் வகுத்தளித்த ‘நீதி’.

இதன் பின்புதான் பாம்பே மில் ஹாண்ட்ஸ் அசோஷியேஷன் வருகிறது. இந்த அமைப்புக்கு சந்தா வாங்குவதில்லை. இதனால் உறுப்பினர்கள் கிடையாது. நிர்வாகிகள் கிடையாது. அமைப்பு விதி கிடையாது. வரும் ஆனால் வராது போல, இது சங்கம், ஆனால் சங்கம் இல்லை. என்றாலும் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. 1884 ஆம் ஆண்டில், பஞ்சாலைத் தொழிலாளர்கள் 10ஆயிரம் பேரைத் திரட்டி ஒரு கோரிக்கைச் சாசனத்தை அரசுக்கு வைத்தது.

  • வாரம் ஒருநாள் விடுமுறை வேண்டும்.
  • மதிய உணவுக்காக 30 நிமிட இடைவேளை வேண்டும்.
  • ஆலையில் விபத்து ஏற்பட்டு, காயமடைந்தால் அல்லது இறந்து போனால் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • பெண் தொழிலாளர் மகப்பேறுக்கு விடுப்பளிக்க வேண்டும்.

ஆகியவையே அந்தக் கோரிக்கை. 

சம்பள வெட்டை எதிர்த்து, 1877 ஆம் ஆண்டிலேயே நாக்பூர் எம்ப்பெரஸ் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தாலும் கூட, பல ஆலைகளின் தொழிலாளர்கள் கூடி, தமது வேலை நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் வகையில் முன்வைத்ததால், இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் கோரிக்கைச் சாசனமாக இதைக் கொள்ளலாம். 

இதனையடுத்து தொழிற்சாலை ஆணையம் (Factory Commission) ஒன்றை பிரிட்டிஷ் அரசு நியமித்தது. அதன் பரிந்துரைகளைப் பெற்று இரண்டாவது தொழிற்சாலைச் சட்டம் (Factories Act – II) 1891ல் வந்தது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button