AITUC-ன் 20 வது மாநில மாநாடு: நெல்லையில் பேரெழுச்சியுடன் தொடங்கியது!

AITUC-ன் (அனைத்திந்திய தொழிற்சங்கப் பேராயம்) 20 வது மாநில மாநாடு திருநெல்வேலியில் இன்று (01.12.2022) குருதாஸ் தாஸ் குப்தா நகரில், மணியாச்சாரி நினைவரங்கத்தில் பேரெழுச்சியுடன் தொடங்கியது. மூன்று நாட்கள் (டிசம்பர் 1, 2, 3) நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முதல் நிகழ்வாக, அமைப்பின் கொடியேற்றம் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் மற்றும் தோழர்களின் உணர்வுப்பூர்வ முழுக்கங்களுக்கு இடையே மூத்த தோழர் ஏ. சாமி கொடியேற்றினார். பின்னர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலை சுமார் 10:30 மணியளவில் கே. சுப்பராயன் MP தலைமையில் பொது மாநாடு தொடங்கியது. தோழர் ஆர். சடையப்பன் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் தோழர் ம இராதாகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தைச் சமர்ப்பித்தார். பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தியாவில் சோஷலிச சமுதாயத்தைக் கட்டியமைப்பதே AITUC-ன் இலட்சியம் என்று மாநாட்டு தலைமையுரையில் தோழர் கே.சுப்பாராயன் முழங்கினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் தொடக்கவுரையாற்றினார். உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஸ்ரீகுமார் சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் மாநாட்டில் பொதுச் செயலாளர் அறிக்கையை தோழர் டி. எம். மூர்த்தி சமர்ப்பித்து உரையாற்றினார். அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.