அறிக்கைகள்

விவசாயிகளுக்கு மன நிறைவு தரும் வேளாண் பட்ஜெட்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருப்பது விவசாயிகளுக்கு மன நிறைவு தரும் வேளாண் பட்ஜெட் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (15.03.2025) ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வேளாண் பட்ஜெட் தயாரிக்கும் முன்பு விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் கேட்டிருக்கிறார். இந்த ஜனநாயக பண்பு வரவேற்கத்தக்கது. இது தொடர வேண்டும்.

கடந்த ஆண்டு (2024-25) 1.81 லட்சம் பாசனக் கிணறுகளுக்கு மின் இணைப்பு பெற்றுள்ள விபரத்தை கூறும் அறிக்கை, உடனடியாக மின் இணைப்பு வழங்க முடியாத 1000 விவசாய கிணறுகளுக்கு சூரிய மின்சக்தி மின் மோட்டர் அமைத்து தருவதற்கு நிதி ஒதுக்கியிருக்கிறது.

சிறு தானிய இயக்கம், எண்ணெய் வித்துக்கள் இயக்கம் போன்றவைகளுடன் முந்திரி வாரியம் அமைத்திருப்பதும், மானாவாரி பகுதிகளில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு தலா ரூ.2000 மானியம் வழங்குவது, பண்ணைக் குட்டைகள் அமைப்பது போன்ற பல்வேறு திட்டங்களும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

உணவுப் பொருட்கள் விளையும் வயலில் இருந்து – நுகர்வோர் இல்லங்களுக்கு செல்லும் வகையில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. இதனை மேலும் விரிவுபடுத்த இணைய வழி கேட்பு மூலம் நுகர்வோர் வீடுகளுக்கு வழங்கும் புதிய திட்டம் உழவர் சந்தை வணிகத்தை வலுப்படுத்தும்.

வேளாண் விஞ்ஞானி முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆய்வு திட்டம் பொருத்தமானது.

சாகுபடி வேலைகள் எந்திரமயமாகி வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விவசாயப் பணிக்கான எந்திர மையங்கள் அமைப்பது. எந்திரங்கள் வாங்க மானியம் வழங்குவது, ஆயிரம் மையங்களில் முதலமைச்சர் உழவர் நல சேவை மய்யங்கள் அமைப்பது போன்றவைகள் சாகுபடி பணிகள் சுணக்கமில்லாது நடைபெற உதவும்.

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட்டு கலைஞர் ஆட்சியில் 1999 ஆம் ஆண்டில் அமைத்த தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

விபத்து மரணத்திற்கு தலா 5 லட்சமாகவும், இயற்கை மரணத்திற்கு தலா ரூ 3 லட்சமாகவும் நிவாரணம் இருக்க வேண்டும் என்பதும், உழவர் பாதுகாப்பு திட்ட அட்டையில் உள்ள முதன்மை உறுப்பினர்களுடன், சார்பு உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை விரிவு படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் பரிசீலித்திருக்கலாம். கரும்புக்கு ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

மலர் சாகுபடிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னோடி விவசாயிகளை ஜப்பான், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று, அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் மன நிறைவு கொள்ளும் வேளாண் பட்ஜெட்டாக அமைந்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button