அகத்தியர் யார்? ஒன்றிய பாஜக அரசு முன்னிலைப்படுத்துவது ஏன்?
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

காசித் தமிழ்ச் சங்கமம் 3.0-ன் பொருண்மையாக அகத்தியரை அறிவித்ததுடன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டியையும் நடத்துகிறது. மாணவர்கள் அகத்தியர் வேடமணிந்தும் கலந்துகொண்டனர். ஒன்றிய மோடி அரசு அகத்தியரை முன்னிலைப்படுத்துவது ஏன்? இதன் பின்னணியில் மிகப்பெரிய ஆதிக்க கருத்தியல் இருக்கிறது.
அதாவது அகத்தியர் என்ற புனைவுப் பாத்திரம் இருந்தது என்று சொல்வது தவறான கருத்தல்ல; உள்நோக்கம் கொண்டதும் அல்ல. ஆனால் அகத்தியர் என்றொருவர் இருந்தார்; அவர் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் வகுத்தார் என்று சொல்வது உள்நோக்கம் கொண்ட கருத்து மோசடி. இப்படிச் சொல்வது இந்தியாவின் மூலமொழி சம்ஸ்கிருதம். அதிலிருந்தே அனைத்து இந்திய மொழிகளும் உருவாகின என்று சொல்லும் ஆதிக்கக் கருத்தியல் ஆகும்.
இந்த அகத்தியர் குறித்து பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான அவருடைய கட்டுரை புதிய விழிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. அந்தக் கட்டுரை அவருடைய “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதி..
அகத்தியர்
பல்லவர் ஆட்சிக்காலத்தில் உட்பொதிந்த வரலாறு உருப் பெற்றிருந்ததைப் பல்லவர்களின் மெய்கீர்த்திகள் உணர்த்துகின்றன. இப்போக்கின் வளர்ச்சி நிலையாகப் புராணப் பாத்திரங்களுடன் பல்லவ மன்னர்களை ஒப்பிட்டுப் போற்றும் போக்கும் உருவானது. இவ்வாறு ஒப்பீடு செய்யப்பட்ட புராணப் பாத்திரங்களுள் ஒருவராக அகத்தியர் அமைகிறார்.
நந்திவர்மப் பல்லவனின் கசாக்குடிச் செப்பேடு, அவனது பிறப்பைக் குறிப்பிடும் போது, வாதாபி என்ற அசுரனை வென்றவரான ‘நம்பத்தில் தோன்றிய அகத்தியனைக் காட்டிலும் வேகமுள்ளவனும் வெற்றி வீரனுமான நரசிம்மவர்மன் தோன்றினான்’ என்று குறிப்பிடுகிறது (கசாக்குடிச் செப்பேடு, சுலோகம் 22).
தளவாய்புர சாசனமும், சின்னமனூர் (பெரிய) சாசனமும் பாண்டிய மன்னர்கள் அகத்திய முனிவரைப் புரோஹிதனாக கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றன.
பதிமூன்றாம் நூற்றாண்டினனான வீரபாண்டியனின் கி.பி.1253 ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறுமுனிவரான அகத்தியரிடம் அவன் செந்தமிழ் பயின்றான் என்பதை ‘திடவாசக் குறுமுனியால் செந்தமிழ் நூல் தெரித்தருளி” என்று குறிப்பிடுகிறது (T.A.S கல்வெட்டு 3:4-5)
சங்ககால மன்னர்கள் அகத்தியருடன் தொடர்புபடுத்தப்படாத நிலையில் பல்லவர்களும், பாண்டியர்களும் அகத்தியருடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்ச் சமூகத்தின் மொழி, ஆறுகள், கோவில்கள், மலைகள், வைத்தியமுறை என்பனவற்றின் தோற்றத்தோடு தொடர்புபடுத்தப் படுபவர் அகத்தியர். இதன் அடிப்படையில் தமிழ்ச் சமூகத்தில் புராண மூதாதை என்று இவரைக் குறிப்பிடலாம்.
அகத்தியர் காவிரி ஆற்றை உருவாக்குதல், வாதாபி என்னும் அரக்கனை உண்டு சீரணித்தது, கடலை குடித்தது, தென்திசை சாய்ந்து வடதிசை உயர்ந்த போது சமநிலைப் படுத்துவதற்காகச் சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்டது, பொதியமலையில் அமர்ந்து அங்குத் தமிழ்ச் சங்கம் ஒன்றை உருவாக்கித் தமிழ் வளர்த்தது, விந்திய மலையில் செருக்கினை அடக்கியது என அகத்தியரை மையமாகக் கொண்ட கதைகள் வாய்மொழி வழக்காறுகளாகவும், இலக்கியப் பதிவுகளாகவும் வழக்கில் உள்ளன.
அகத்தியரும் சிவனும் :
சிவனுடன் அகத்தியர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார். ‘அகத்தியரை உகப்பான்’ என்று திருநாவுக்கரசர் (6:50-3) சிவனைக் குறிப்பிடுகிறார். முக்கிய சிவத்தலங்கள் சில அகத்தியரால் வணங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றன. குற்றாலத்தில் தற்போது உள்ள சிவன் கோவில் விஷ்ணு கோவிலாகத் தொடக்கத்தில் இருந்ததாகவும் அகத்தியர் அதைச் சிவன் கோயிலாக மாற்றியதாகவும் திருக்குற்றாலத் தலபுராணம் குறிப்பிடும். இதை அடிப்படையாகக் கொண்டு வேறுபாடான வழிபாட்டுச் சடங்குகள் இக்கோயிலில் இன்றும் வழக்கில் உள்ளன.
அகத்தியரும் தமிழும்:
தமிழ்நாட்டையாண்ட மன்னர்களுடன் இவ்வாறு தொடர்புபடுத்திக் கூறப்படும் அகத்தியரின் தலையாய சிறப்பு தமிழுக்கும் அவருக்கும் இடையிலான தொடர்பாகும். பொதியமலையில் அவர் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி தமிழாராய்ந்தார் என்பது அவரைக் குறித்த பரவலான நம்பிக்கையாகும். பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த கம்பன், சீதை சீதையைத் தேடி தென்திசைக்குச் செல்லும் வானர வீரர்களுக்கு இட்ட கட்டளையாக,
“தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவன் உறைவிடம் ஆம்.”
என்று பாடியுள்ளான். கம்பனுக்கு முந்தைய தமிழ்ச் செவ்விலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில் முதல் முறையாக ‘மாதவ முனிவன் மலை’ (15:13) என்ற சொல்லாட்சி இடம்பெறுகிறது. ‘மாதவ முனிவன் என்பதற்கு ‘அகத்தியர்’ என்று உரையாசிரியர்கள் பொருள் கொள்ளுகிறார்கள். காவிரி நதியின் தோற்ற வரலாறு குறித்து,
“அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்ந்த காவிரிப் பாவை”
என்று மணிமேகலை (பதிகம் 11-12) குறிப்பிடுகிறது. அகத்தியரையும் தமிழையும் தொடர்புபடுத்தும் முயற்சியை நின்றசீர் நெடுமாறன் காலம் அல்லது அதற்குப் பிந்தைய காலத்ததான இறையனார் களவியல் உரை என்ற நூலில்தான் முதன் முறையாகக் காண முடிகிறது.
சங்க இலக்கியங்களில் அகத்தியரைப் பற்றிய பதிவுகள் எவையும் இல்லை. மதுரைக்காஞ்சியில் (வரி 40) ‘தென்னவன் பெயரிய துன்னரும் துப்பின் தொல்முது கடவுள்’ என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. இத்தொடருக்கு உரையாசிரியர் நச்சினார்க் கினியர் அகத்தியரைக் குறிப்பிடுகிறார். இது வலிந்து கூறப்பட்டதாகவே உள்ளது. திருஞானசம்பந்தரின் காலத்தவனாகிய நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட ‘இறையனார் அகப்பொருள்’ என்ற இலக்கண நூல் மூன்று தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீ இயினார் பாண்டியர். அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரிஞ்சியூர் முடி நாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐந்நூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப..
அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப..
அவர்க்கு நூல் அகத்தியம் என்ப..
இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளுர்க்காப்பியனும், சிறுபாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரந்தையும் என..
அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூதபுராணமும் என இவை..
இனிக் கடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தார்.. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும் என்ப..”
ஆனால் அகத்தியர் குறித்து தொல்காப்பியம் எதுவும் கூறவில்லை, பாயிரம் எழுதிய பனம்பாரனாரும் எதுவும் கூறவில்லை. மூன்றாம் சங்கம் சார்ந்ததாகக் கூறப்படும் சங்க இலக்கியங்களில் அகத்தியர் குறித்த குறிப்பு எதுவும் இல்லை என்பதை ஏற்கனவே கண்டோம்.
ஆயினும் இறையனார் களவியல் உரை கூறும் செய்தியின் தாக்கம் தமிழ்ச் சமூகத்தில் அழுத்தமாகப் பதிவாகி விட்டது. இதனால் அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் இலக்கண நூலின் வழிநூலாகவே தொல்காப்பியம் கருதப்படலாயிற்று.
அகத்தியரும் முச்சங்கமும்:
முச்சங்கம் என்ற கருத்து தமிழரின் பண்பாட்டு வரலாற்றைச் சிதைக்கும் முயற்சியின் ஓரங்கமே. உலகச் செவ்வியல் இலக்கிய வரிசையில் சங்க இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. இச்சங்க இலக்கியங்களை முச்சங்கங்களில் இறுதியான கடைச்சங்கத்தைச் சார்ந்தனவாகக் குறிப்பிடுகின்றனர். முதற்சங்கம் அகத்தியர் இருந்து தமிழ் ஆராய்ந்த சங்கமாகக் குறிப்பிடப்படுகிறது. அப்படியானால் காலத்தால் முற்பட்ட முதற்சங்கத்தின் தாக்கத்திற்குச் சங்க இலக்கியங்கள் ஆட்பட்டவை என்று கருத்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதாக அகத்தியர் என்ற ஆரிய முனிவர் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.
இறையனார் அகப்பொருள் உரையில் குறிப்பிடப்படும் மூன்று சங்கங்கள் குறித்து கா.சிவதம்பி (1988:65) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“ஐதீகவாக்கம்” (புராணமாக்கல்) என்பது வரலாற்றினைத் தயாரிக்கும் ஒரு வகை முறையாகும். இறையனார் களவியலுரையிலே தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை, தமிழை இந்து மயப்படுத்துவதற்கான, முக்கியமாக அதனை சைவ மரபின் ஓரங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியேயாகும். இவ்வாறு நோக்கும். பொழுது, தமிழிலக்கிய வரலாற்றில் இவ் வைதீகத்துக்குரிய இடம், பெரு முக்கியமுடைய ஒன்றாகும். வெளிப்படையாகச் சமண, பௌத்தச் சார்புள்ள ஒரு நிறுவனத்தினை (சங்கத்தினை) எடுத்துக் கொண்டு அதற்கு ஓர் இந்து உருவும் பொருளும் கொடுக்கும் முயற்சியினை இக்கதையிலே காணலாம்.”
சிவத்தம்பியின் மேற்கூறிய அவதானிப்பு பொருத்தமானதே. ஏனெனில் அவைதீக சமயம் சார்ந்த பௌத்தர்கள் இறையனார் களவியல் உரை கூறும் மூன்று சங்கங்களுக்கு மாறுபாடான கருத்தைக் கொண்டிருந்தனர். இதற்குச் சான்றாக புத்தமித்திரன் என்ற பௌத்தர் எழுதிய ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூலின் அவையடக்கச் செய்யுளில்,
‘ஆயும், குணத்(து) அவ லோகிதன் பக்கம் அகத்தியன் கேட்(டு)
ஏயும் புவனிக்(கு) இயம்பிய தண்டமிழ் ஈங்(கு) உரைக்க”
என்ற தொடர்களைக் குறிப்பிடலாம். இத்தொடரில் இடம்பெறும் அவலோகிதன் என்பது புத்தரைக் குறிக்கும் சொல்லாகும்.
சிவனிடமும் முருகக் கடவுளிடமும் அகத்தியர் தமிழ் கற்றார் என்ற கருத்து, பரவலாக முன்வைக்கப்படுகிறது. சைவம், செல்வாக்குப் பெற்றிருந்த பிற்காலச் சோழர் காலத்தில், அகத்தியரைச் சைவத்திலிருந்து பிரித்து புத்த மதத்திற்குக் கொண்டுவரும் முயற்சியின் வெளிப்பாடாக இதைக் கருத இடமுள்ளது. தமிழுக்கும், அகத்தியருக்கும் இடையிலான நெருக்கமான இணைப்பை மறுக்க இயலாத ஒரு சமூகச் சூழலில் தமிழுக்கும் அகத்தியருக்குமான உறவை ஏற்றுக்கொண்டு அவரைப் புத்தரின் மாணவனாக வீரசோழியம் ஆசிரியர் மாற்றிக் காட்டுகிறார்.
தமிழ்ப் புராணங்களில் அகத்தியர்:
தமிழில் உருவான புராணங்கள் இருவகைத்தன. ஒன்று தமிழில் சுயமாக உருவான புராணங்கள், இரண்டாவது வடமொழிப் புராணங்களைத் தழுவி உருவானவை. இரண்டாவது வகைப் புராணங்களில் திருவிளையாடல் புராணமும் கந்த புராணமும் குறிப்பிடத்தக்க புராணங்களாகும். இவையிரண்டும் சைவசமயம் சார்ந்தவை.
திருவிளையாடல் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவர் நூலின் பாயிரத்தில்,
“சிவபெருமானிடத்துக் கேட்டுத் தெளிந்த திருநந்திதேவர்பால் சற்குமார முனிவர் அன்பினோடு கேட்டு ஆராய்ந்து வியாச முனிவருக்கு அறிவிக்க, வியாச முனிவர் சூத முனிவருக்குக் கூறிய புராணங்கள் பதினெட்டு ஆகும். அவற்றுள் கந்த புராணத்தின் ஒரு பகுதியாகிய சங்கர சங்கிதையில் திருவாலவாய் என்னும் மதுரையின் பெருமை கூறப்பெற்றுள்ளது.
அச்சங்கர சங்கிதை என்னும் சிறந்த வடநூல்கள் புகழ்பெற்ற மதுரையின் பெருமைகளை எல்லாம் தமிழ் மொழியில் திரட்டித் தந்தருள வேண்டும் என்று மதுரை மாநகரில் வாழும் பெரியோர்கள் கேட்டுக்கொள்ள “இப்பிறவியிலேயே பிறப்பின் பயனை அடையக் கடவோம்” என்ற உறுதி கொண்டு தலவிசேடம், தீர்த்த விசேடம், மூர்த்தி விசேடம் என்ற மூன்றும், மதுரைச் சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல் அறுபத்து நான்கும், அருச்சனை புரிந்த செயல் ஒன்றும் ஆக அறுபத்தெட்டினையும் முறைப்படியே படலங்களாக அமைத்து விரிவான முறையில் கூறலுற்றோம்.”
என்று குறிப்பிட்டுள்ளார் (பட்டுசாமி ஒதுவார் 2004:7-8). இப் பாயிரப்பகுதி இந்நூலின் வடமொழிச் சார்பைத் தெளிவாகக் கூறுகிறது. இந்நூலின் தொடக்கத்தில், ‘முருக வேளிடத்து வேத முதலிய எல்லாக் கலைகளையும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தவர் அகத்தியர்’ என்று வியாசமுனிவர் பிற முனிவர்களிடம் கூறியதன் அடிப்படையில் அவர்கள் அகத்தியரைச் சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அகத்தியரின் இடப்பெயர்ச்சி:
கபிலர் பாடிய புறநானூற்றுச் செய்யுளொன்றில் (201:8) ‘வடபால் முனிவன் தடவினுள் தோன்றி’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது.’வடபால் முனிவன்’ என்பவன் சம்பு எனும் முனிவனென்று உ.வே.சா பொருள் கொள்கிறார். வடபால் முனிவன் என்பவன் சாமிநாத அய்யர் குறிப்பிடுவது போல் சம்பு முனிவன் அல்ல என்றும் அது அகத்தியரையே குறிப்பிடுகிறது என்றும் அண்மையில் ஐராவதம் மகாதேவன் (2010:34) குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறிய புறநானூற்றுச் செய்யுளில் (201:8) இடம்பெறும் தடவினுள் என்ற சொல்லிற்கு ஓமகுண்டம் என்று பொருள் கொள்ளாது பெரிய மண்பானை என்று பொருள் கொள்ளுகிறார். சங்க இலக்கியங்களிலும் தொல்தமிழ் (பிராமி) கல்வெட்டிலும் ‘தடவு’ என்ற சொல் பானையைக் குறிப்பதை இதற்குச் சான்றாகக் கொள்கிறார். அத்துடன் கும்பத்தில் பிறந்தவராக அகத்தியர் சுட்டப்படுவதையும் தடவு என்ற சொல் பானையைக் குறிப்பதையும் இணைத்துக் காட்டுகிறார். இறுதியாக, சிந்துவெளி நாகரிகம் குலைந்தபின் திராவிட மொழி பேசும் மக்கள் தென்னகத்திற்குப் பெருமளவில் குடிபெயர்ந்ததைக் காட்டுவதாக விளக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார். ஆரிய மரபினரான அகத்தியரை திராவிடராக மாற்றும் முயற்சியாகவே இதைக் கொள்ளமுடியும்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய பிஷப் கால்டுவெல் அந்நூலில் அகத்தியர் குறித்துக் கூறியுள்ள செய்திகளை ரேவ் (197:17) என்பவர் தொகுத்தளித்துள்ளது வருமாறு;
“தாமிரபரணி ஆற்றங்கரையில் கொற்கையைத் தலைநகரமாகக் கொண்ட பாண்டிய நாட்டில் செழித்திருந்த, தமிழ் நாகரிகம்தான். பழமையான திராவிட நாகரீகம்.
இதன் தோற்றம் தமிழ்ச் சமூகமாக இருந்திருந்தாலும் அடுத்தடுத்து வந்த சிறு ஆரிய குழுக்களின், முக்கியமாக வட இந்தியாவிலிருந்து வந்த குழுக்களின் தாக்கத்தால் ஆரம்ப நிலையிலேயே இந்நாகரீகம் வேகமாக வளர்ந்தது.
இவ்வாறு வந்த குழுக்களின் முதல் அல்லது முக்கியக் குழுவின் தலைவர்தான் அகஸ்தியர் என்பது பாரம்பரிய நம்பிக்கை.
தமிழருக்கு ‘அறிவியலும் இலக்கியமும்’ முதலில் கற்றுத் தந்தவரென்று அகஸ்தியர் தெற்கில் வணங்கப்படுகிறார்.
அவர் ‘தமிழ் முனி’ என்றழைக்கப்படுகிறார்.”
குலசேகரப்பாண்டியன் அரசவையில் அகஸ்தியர் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தார் என்று நம்பப்படுகிறது.
பல்வேறு அறிவுத்துறைகள் பற்றி அவருடைய அரச குலச் சீடர் எழுதிய அடிப்படை நூல்களை அகஸ்தியர் எழுதியதாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ் இலக்கணக் கோட்பாடுகள் குறித்து அவர் எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றது. கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் அவர் வழிபடப்படுகிறார். திருநெல்வேலியில் பாயும் தாமிரபரணி நதி புறப்படும் பொருநை அல்லது அகஸ்தியர் மலையில் இன்றும் உயிருடன் இவர் வசிப்பதாகவும், மனிதக் கண்களுக்குப் புலப்பட மாட்டார் என்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான இந்துக்கள் நம்புகின்றனர். தெற்கே அகஸ்தியர் வாழ்ந்த காலமும் அவர் எழுதிய நூல்களின் காலமும் உறுதியாகக் கூற முடியாது என்றாலும், இராமாயணத்தின் காலத்திற்கும் கிரேக்க வணிகர்களின் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் என்று இதை ஓரளவு உறுதியாகக் கூறலாம்.
இவ்வாறு, தமிழர்களின் பண்பாட்டு வாழ்வில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்று அகத்தியர் விளங்குகிறார். தமிழ் இலக்கணம், இலக்கியம், மருத்துவம் என்பனவெல்லாம் இவரை இலக்காகக் கொண்டே உருவானது என்ற நம்பிக்கையை அழுத்தமாக வேரூன்றச் செய்துவிட்டனர். இந்நம்பிக்கை தமிழ்மொழியை சைவ சமயத்துடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்த உதவியுள்ளது. சமயச் சார்பில்லாத சங்க இலக்கியங்களையும், அவைதீக சமயச் சார்புடைய காவியங்களையும் கொண்டிருந்த தமிழ்மொழியைக் சைவத்துடன் பிணைக்கும் பணியை அகத்தியர் என்ற புராண மூதாதை செய்துள்ளார்.
அகத்தியர் யார்?
அகத்தியரை மையமாகக் கொண்டுள்ள புராணச் செய்திகள் வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்துவந்த ஆரிய மரபினராகவே அவரை எண்ணத் தூண்டுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ஹாஜோ என்னுமிடத்தில் உள்ள ஹயக்கிரிவர் கோவிலில் அகத்தியருக்குச் சிலையுள்ளது (ரெங்கையா முருகன் 2010: 121-122). இமயமலையில் கேத்தர் நாத் போகும் வழியில் உள்ள ஒரு கிராமம். அகஸ்தியர் பெயரைத் தாங்கியுள்ளது. அங்கு அகத்தியருக்கு ஒரு கோவிலும் உள்ளது (செய்தி ரெங்கையா முருகன்). இச்செய்திகள் அகத்தியர் வடபுலத்துக்குரியவர் என்பதற்கான சான்றுகளாகும். தமிழகத்தில் அகத்தியர் (2007:62) என்ற தலைப்பில் நூலொன்றை எழுதிய சிவராஜபிள்ளை, புராணத்தை உருவாக்குவோராலும் புராணத்தை உபதேசிப்பவர்களாலும் உருவாக்கப்பட்டவரே அகத்தியர் என்று கருதுவதுடன், ஆரியப் பண்பாட்டையும் அறிவையும் இந்தியாவின் தென்பகுதியில் பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டவரே அகத்தியர் என்ற முடிவுக்கு வருகிறார் (மேலது 63). இக்கருத்தே பொருத்தமானது.
தமிழ் இலக்கியம், மருத்துவம், வரலாறு ஆகிய அனைத்திலும் ஓர் இடத்தைப் பெற்று, கிட்டத்தட்ட தமிழர்களின் பண்பாட்டு வீரர் என்ற நிலையில் தமிழர் தம் பண்பாட்டு வரலாற்றில் அகத்தியர் ஆதிக்கம் செலுத்திவருகின்றார்.
புராண மூதாதையர் உணர்த்தும் செய்தி:
வேளிர் மரபினனான இருங்கோவேள், முனிவன் ஒருவனது மரபில் வந்தவனாகப் புறநானூறு (201:8) குறிப்பிடுகிறது. சிபி மன்னனது மரபினராகச் சோழமன்னர்களைப் புறநானூறும் (43:4-8) சிலப்பதிகாரமும் (20:51-52) குறிப்பிடுகின்றன. இதன் பின்னர் சொழ மன்னர்களின் மூதாதையாக மனுநீதிச்சோழன் என்ற கற்பனை மன்னன் உருவாக்கப்படுகிறான்.
இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட அரச மரபின் மேன்மையை உணர்த்த உதவியுள்ளன. ஆனால் ஓர் ஆபத்தான போக்கு புராண மூதாதையர்களை மையமாகக் கொண்டு உருவானது. இப்போக்கின் படி தமிழ்ச்சமூகம் முழுவதற்குமான புராண மூதாதையர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
சோழ மன்னர்களின் முன்னோனாக உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரமே மனு என்று முன்னர் கண்டோம். ஓர் அரச மரபின் புராண மூதாதையான இவன் தமிழ்ச் சமூகம் முழுமைக்குமான புராண மூதாதையாக மாற்றப்பட்டுவிட்டான். ‘பழிக்குப்பழி’ என்ற இனக்குழு நீதிமுறையின் அடையாளமான மனு, நடுநிலை தவறாது நீதி வழங்கும் மன்னனாக அடையாளம் காட்டப்பட்டதன் வளர்ச்சி நிலையாக இன்று தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மனுவுக்குச் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று விபத்தாகும்.
அகத்தியர் என்ற வடபுல முனிவர் தமிழர்களின் பண்பாட்டு வாழ்வில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்று விளங்குகிறார். தமிழ் இலக்கணம், இலக்கியம், மருத்துவம் என்பனவெல்லாம் இவரை மையமாகக் கொண்டே உருவானது என்ற நம்பிக்கையை அழுத்தமாக வேரூன்றச் செய்துவிட்டனர். இந்நம்பிக்கை தமிழ் மொழியைச் சைவ சமயத்துடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்த உதவியுள்ளது. சமயச்சார்பு இல்லாத பழந்தமிழ் இலக்கியங்களை சைவத்துடன் பிணைக்கும் பணியை அகத்தியர் என்ற புராண மூதாதையின் துணையுடன் நிகழ்த்திவிட்டனர்.
முடிவுரை:-
உண்மையில் தம்மோடு வாழ்ந்து, போர்க்கள மரணம் அடைந்தோர்க்கு நடுகல் நாட்டி பண்டைத் தமிழர் வழிபட்டுள்ளனர். இவர்கள் ஒரு சமுகத்தின் மூதாதையராகக் கருதப்பட்டனர். இவ்வழிபாடு மரணமடைந்தவரின் குடும்பத்தாரால் மட்டுமின்றி ஊரவராலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களால் இறந்தோர் வழிபாடு நிகழ்த்தப்பட்டுள்ளது. இறந்தவனுக்குப் பிண்டம் கொடுத்தல் குறித்த சங்க இலக்கியச் செய்திகள் இதற்குச் சான்றாகும். முன்னோர் வழிபாடும், இறந்தோர் வழிபாடும் இவ்வாறு சிறப்பிடம் பெற்றிருந்தன.
தொல்சமயம் சிதைந்தபின் தோன்றிய நிறுவன சமயங்கள் மறு உலகம் குறித்தும் இறந்தோர் வழிபாடு குறித்தும் தொல் சமயத்தில் உலகம் குறித்தும் இடம்பெற்றிருந்த நம்பிக்கைகளை விரிவுபடுத்தின. இதன் அங்கமாக கற்பனையான புராண மூதாதையர்கள் உருவாக்கப்பட்டனர். நாடாளும் வேந்தர்கள் தம் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வண்ணமாக, தம் குல மூதாதையர்களாகப் புராண மூதாதையர்கள் சிலரை வரித்துக் கொண்டனர். வைதீக சமயத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் மிகுந்த போது தமிழர்களின் பண்பாட்டு வாழ்வில் புராண மூதாதையர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். பண்டைத் தமிழரின் சமய நெறியிலும் மூதாதையர் வழிபாட்டிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாறுதல்களாக இவை அமைகின்றன.