கட்டுரைகள்

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் : கொள்கையா? கொடுக்கல் வாங்கலா?

- இளசை கணேசன்

‘அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது’ என அதிமுக தலைமை செப்டம்பர் 25ஆம் தேதி அன்று அறிவித்தது. இந்த முடிவை அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதிமுக மாவட்டச்  செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்..

பாஜக மாநிலத் தலைமை கடந்த ஓராண்டு காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், பேரறிஞர் அண்ணா மீதும், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா மீதும் அவதூறு பேசியும் அதிமுக கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.

20.8.2023 ல் மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், பொதுச் செயலாளர் எடப்பாடியை அவதூறாகவும் விமர்சித்தது.

இத்தகைய செயல்கள் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் 2 கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்ற கட்சிகளுடன் அணி சேர்ந்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது – இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிமுக – பாஜக இடையே நடந்தது என்ன?
  • கூட்டணியின் பிரதான கட்சியான அதிமுகவை அண்ணாமலை அடிக்கடி சீண்டுவது ஏன்?
  • அண்ணாமலையின் விமர்சனம் அவருடைய சொந்த சரக்கா? தலைமையின் வழிகாட்டலா?
  • கூட்டணி முறிவு கொள்கை ரீதியிலானதா? கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா?
  • கூட்டணி முறிவில் வெற்றி எடப்பாடிக்கா? அண்ணாமலைக்கா? இந்த முடிவு நிலைக்குமா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
அண்ணாமலையின் அர்ச்சனைகள்

அண்ணாமலை சாப்பிடுவதற்கும்; தவறாக திரித்துப் பேசுவதற்கும் மட்டுமே வாய் திறப்பார்!

அன்றாடம் பொய்யை அவிழ்த்து விடாமல் அவரால் இருக்க முடியாது.

  • “அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்” என்று ஓராண்டுக்கு முன்பே அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.
  • ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா என்று அண்ணாமலை வெளிப்படையாகவே விமர்சித்தார்.
  • நான் ஒன்றும் கைகட்டி, காலில் விழுந்து அதிகாரத்துக்கு வந்தவன் இல்லை என்று மறைமுகமாக எடப்பாடியை சுட்டிக்காட்டி அண்ணாமலை பேசினார்.
  • மதுரையில் நடைபெற்ற அண்ணா திமுக மாநாடு பிரம்மாண்டமானது என்றெல்லாம் கூற முடியாது 90 சதவீத கூட்டம் காசு கொடுத்து கூட்டி வரப்பட்டது என்று கொச்சைப்படுத்தினார்.
  • செப்டம்பர்11 ல் சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று அண்ணாமலை பேசியபோது.. “1956ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவு கருத்துக்களைப் பேசிய அறிஞர் அண்ணாவை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக் கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால் மீனாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என தேவர் பெருமகனார் எச்சரித்தார். அதற்குப் பயந்து அண்ணாவும் விழாவை நடத்திய பி.டி.ராஜனும் ஓடி வந்து மன்னிப்பு கேட்டனர்.” என்று உண்மையைத் திரித்துப் பேசினார்.

இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த போதும், “அண்ணாவைப் பற்றி சரியான ஆதாரங்களோடுதான் பேசியிருக்கிறேன். மன்னிப்புக் கேட்க மாட்டேன்” என்று கூறிய அண்ணாமலை, தான் பேசியதை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவிக்க முன்வரவில்லை.

அண்ணாமலை எதை ஆதாரம் காட்டிப் பேசினாரோ அந்த இந்து பத்திரிகையே போதிய விளக்கம் அளித்ததால் அண்ணாமலை, மாட்டிக்கொண்டு அம்பலப்பட்டிருக்கிறார்.

அதிமுகவின் எதிர்வினை

செப்டம்பர் 14ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி இதை எதிர்பார்க்கவில்லை.

செப்டம்பர் 17ல் விநாயகர் சதுர்த்தி அன்று மதுரையில் அதிமுக போஸ்டர் யுத்தம் தொடங்கியது.

  • ஐபிஎஸ் படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல. ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய இயக்கம் அண்ணா தலைமையிலான இயக்கம்.
  • கூட்டணியாவது கூந்தலாவது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.
  • நாளை நமதே நாற்பதும் நமதே!

என்றவாறு போஸ்டர் வாசகங்கள் இருந்தன.

மறுபுறம் பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். “மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வரவேண்டும்” என்று தனது வாழ்த்து செய்தியில் கூறியிருந்தார்.

அடுத்த நாள், செப்டம்பர் 18ஆம் தேதி அதிமுகவின் செய்தி தொடர்பாளர் ஜெயக்குமார் அறிக்கை வெளிவந்தது. “இனி பொறுப்பதில்லை, அண்ணாமலையின் பேச்சுக்கு! பாஜக எங்கள் கூட்டணியில் இல்லை. எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? அண்ணாமலை தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழேதான் ஓட்டு வாங்குவார்” என்று ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்தார்.

“அண்ணாவைப் பற்றி அவதூறாகப் பேசினால் நாக்கு துண்டாகும்” என்று செல்லூர் ராஜு அவருக்கே உரிய பாணியில் எச்சரிக்கை விடுத்தார்.

சி.வி.சண்முகம், வேலுமணி போன்றவர்களும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.

அதிகாரத் திமிர்

செப்டம்பர் 22ல் “அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும்“ என்ற நிபந்தனையுடன் அமித்ஷாவை சந்திக்க அதிமுக தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி சென்றனர்.

அமித்ஷாவை சந்திக்க முடியாமல் அவமானப்பட்டது தான் மிச்சம். அவருக்குப் பதில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்தனர்.

அப்போது, கலந்து பேசி முடிவெடுக்கிறோம் என்று கூட சொல்லாமல், அண்ணாமலையை மாற்ற முடியாது என்று நெற்றியில் அடித்தாற் போன்று சொல்லி விட்டனர்.

பிளவு எப்படிப்பட்டது?

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு கொள்கை முரண்பாடுகளால் ஏற்பட்டதா? அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா?

கொள்கை முரண்பாடுகள் எதுவும் இல்லை. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைதான். நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டுப் பிரச்சனைதான்.

அதிமுகவுடன் கூட்டணி சேரத் தேவையில்லை – இது அண்ணாமலையின் விருப்பம். பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விடுவது நல்லது – இது எடப்பாடியின் விருப்பம்.

இருவர் விருப்பமும் ஒரே புள்ளியில் சந்தித்தாலும் நடைமுறையில் இது நடக்காது! விருப்பமும் அரசியல் சூழலும் வேறாக இருக்கிறது!

எனவே, ஒருவரை விட்டு ஒருவர் ஓடிவிட முடியாது. இருவரின் கைகளும் ஒரே கைவிலங்கில் மாட்டப்பட்டு, அதன் திறவுகோல் அமித்ஷாவின் கையில் இருக்கிறது.

அமித்ஷா எடப்பாடி சந்திப்பு

செப்டம்பர் 14 அன்று நடந்த இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டிருக்கும்? எத்தனை தொகுதிகளைத் தான் அமித்ஷா கேட்டிருப்பார்?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு  20  தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருப்பார் போலும்! தமிழ்நாட்டில் உள்ள 39 ல் 20 தொகுதிகளா? அல்லது புதுச்சேரி உட்பட 40ல் 20 தொகுதிகளா? என்பது தெரியவில்லை!

எதிர்பாராத இடி! அதிர்ச்சியில் இருந்து எடப்பாடி மீளவில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கிய தொகுதிகள் 5 மட்டுமே.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கிய தொகுதிகள் 20 மட்டுமே!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென்று 20 தொகுதிகள் கேட்டால், எடப்பாடிக்கு எப்படி இருக்கும்?

பாஜகவின் சூழ்ச்சி
  • திராவிடக் கட்சிகளை வீழ்த்தாமல் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது.
  • ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அதிமுகவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி பாஜகவை பலப்படுத்துவது.
  • தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்த்துவது.
  • அதிமுகவின் தோழமைக் கட்சிகளை பாஜகவின் தோழமைக் கட்சிகளாக மாற்றுவது. அதிமுகவை தனிமைப்படுத்துவது.
  • 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதை மாற்றி பாஜக தலைமையிலான கூட்டணி என்று கட்டமைப்பது.
  • இதன் தொடர்ச்சியாக 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் மற்றும் பாஜக தலைமையிலான தேர்தல் கூட்டணி என்று உருவாக்குவது.

இவைதான் பாஜகவின் அரசியல் அஜன்டா.

நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று:

  • பாஜக நினைத்தது போன்று அதிமுகவை செங்குத்தாக பிளவுபடுத்த முடியவில்லை. ஓரளவு பலவீனப்படுத்த மட்டுமே முடிந்தது.
  • பாஜகவால் சசிகலாவை சரிக்கட்ட முடிந்தது.
  • பாஜகவால் ஓபிஎஸ்க்கு முட்டுக் கொடுக்க முடிந்தது.
  • நினைத்த மாதிரி எடப்பாடியை வளைக்க முடியவில்லை!
  • எடப்பாடி தனது தலைமையிலான கட்சியே‌ அதிமுக என்பதை நிலைநாட்டி விட்டார்.
  • எடப்பாடி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார்!
  • இரட்டை இலை சின்னத்தையும் பெற்றுவிட்டார்!
  • சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகிவிட்டார்.
  • புரட்சித் தமிழர் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

இவை பாஜகவின் தயவால் வந்தவை அல்ல. அண்ணாமலை எதிர்பார்த்ததும் அல்ல. எனவே பாஜகவால் இவற்றை ஏற்க முடியவில்லை!

பாஜகவின் கூட்டணி கணக்கு:

பாஜக – அதிமுக கூட்டணிக்கு பாஜக தலைமை தாங்குவது.

தினகரன், சசிகலா, ஓபிஎஸ், பாமக, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி போன்ற கட்சிகளை பாஜகவின் தோழமைக் கட்சிகளாக‌ உருவாக்குவது.

பாஜகவின் தோழமைக் கட்சிகளுக்கு பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து இடங்கள் ஒதுக்குவது.

அதிமுகவின் தோழமைக் கட்சிகளுக்கு, அதிமுகவின் தொகுதிகளிலிருந்து பிரித்துக் கொடுப்பது.

வடமாவட்டங்களில் வாக்குகளைப் பெறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியை பயன்படுத்திக் கொள்வது.

மேற்கு மாவட்டங்களில் வாக்குகளைப் பெறுவதற்கு அண்ணாமலையையும் அதிமுகவையும் பயன்படுத்திக் கொள்வது.

தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் தேவேந்திரர் குல வாக்குகள் பாஜக பக்கம் இருப்பதால், அவர்களோடு முக்குலத்தோர் வாக்குகளையும் பெற சூழ்ச்சி வலை பின்னப்பட்டது.

விளைவு, அதிமுக பாஜக கூட்டணி முறிவு.

இந்தப் பிளவு எடப்பாடிக்கு வெற்றியா? அண்ணாமலைக்கு வெற்றியா?

இருவருக்கும். ஒருவரைப் பயன்படுத்தி இன்னொருவர் ஆதாயம் பெற துடித்தனர்.

உண்மையில் இருவருக்கும் வெற்றி இல்லை! “உன்னால நான் கெட்டேன்! என்னால நீ கெட்ட” என்ற கதை தான்.

சசிகலாவிடம் மண்டியிட்டு ஊர்ந்த கேவலமான செயலை ‌கூசாமல் செய்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு அல்லக் கையாக இருக்கவில்லையே ஏன்?

சசிகலாவிடம் எடப்பாடி பெற்றது பதவி, அதிகாரம், அந்தஸ்து.

தன்மானம், சுயமரியாதை பார்த்தால் முதல்வர் பதவி கிடைக்குமா?

அண்ணாமலையிடம் எடப்பாடி பெறுவதோ  அதிகாரப் பறிப்பு, அடிமடியில் கைவைப்பு! ஆப்பு!

பாஜகவிடம் எடப்பாடி வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் எடப்பாடிக்கு அண்ணாமலை உத்தரவு போடுகிறார்.

அடிபணிதலுக்கும் எல்லை உண்டுதானே. அண்ணாமலை அதிகாரத் திமிரில் எல்லையை மிஞ்சிவிட்டார்.

பாஜக அதிமுக கூட்டணி பிளவு நிலைக்குமா, நிலைக்காதா?

இருதரப்பும் அவரவர் நிலையிலிருந்து இறங்கி வந்தால் கூட்டணி; இருவரும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்று இருந்தால் பிளவு.

அரசியலில் எதுவும் நடக்கலாம்!

என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அவர்கள் பாணியில் சொன்னால், அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் விருப்பங்கள், உணர்வுகள் மதிக்கப்படுமா? என்பதே நமது கேள்வி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button