கட்டுரைகள்தமிழகம்

திரைபிம்பமே ஆட்சியைப் பிடிக்க முதலீடு: நடிகர் விஜய் நினைப்பது நடக்குமா?

வ.மணிமாறன்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயாக மாறி பிப்ரவரி இரண்டாம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி  நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் போன்று, இப்பொழுது வருகிறேன், அப்பொழுது வருகிறேன் என்று இழுக்காமல் அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். அதற்கான விளக்கங்களை அந்த அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். நாம் அவற்றைக் கடந்து அலசிப் பார்ப்போம்.

விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.  பெரும் தொகையை சம்பளமாக பெற்றுக் கொண்டிருப்பவர். ரசிகர் பட்டாளம் மிகுந்தவர். திரைப்பட நடிகர்களில் புகழும் செல்வாக்கும் மிகுந்தவர். இவையெல்லாம் மிகுந்திருக்கும் காலத்திலேயே அரசியலில் அடி எடுத்து வைக்கிறார்.

திரைப்படங்களின் மூலம் ஈட்டிய புகழையும் பிம்பத்தையும் (இமேஜ்) அரசியலுக்கு மடைமாற்றி அதிகாரத்தை பெற வேண்டும் என நடிகர் விஜய் விரும்புகிறார். இதை தம்முடைய அறிக்கையில் தெளிவாக குறிப்பிடுகிறார். “அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல. அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படங்களின் மூலம் கிடைத்த புகழை, அந்த நடிகரின் அரசியல் செல்வாக்காக மாற்றுவதையே பிம்ப அரசியல் (இமேஜ் பாலிடிக்ஸ்) என்கின்றனர். இந்த பிம்ப அரசியல் தமிழ்நாட்டுக்குப் புதியது அல்ல.

எம்ஜிஆர் என்ற திரைப்பட நடிகர் புரட்சித் தலைவராக, முதலமைச்சராக பரிணமித்த வரலாறு உண்டு. அவரை அடியொற்றி ஜெயலலிதா அதிகாரம் செலுத்தினார். இதேபோன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், பாக்யராஜ், டி.ராஜேந்தர்,  கார்த்திக், சரத்குமார், கருணாஸ், விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான் என நீண்ட பிம்ப அரசியல் தமிழ்நாட்டில் உண்டு.

எம்.ஜி.ஆர் பிம்ப அரசியலின் முன்னோடி. அவரைப் போன்று திரைப்படப் புகழுடன், வள்ளல் தோற்றம்; ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கி விட்டால், அரசியலில் குதித்து முதலமைச்சர் பதவியை பிடித்து விட முடியும். அதிகாரத்தை சுவைக்க முடியும் என முன்னணி நடிகர்கள் கனவு காண்கின்றனர். அதனை செயல்படுத்தவும் முயல்கின்றனர்.

நடிகர் விஜய்க்கும் இப்படிப்பட்ட கனவு உண்டு. அதற்காக ரசிகர் மன்றங்களை வலுவாக கட்டமைத்ததுடன், அவற்றை விஜய் மக்கள் இயக்கமாக 2009 ஆம் ஆண்டே மாற்றினார்.

“விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே” என்று அறிக்கையின் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க முடிவெடுத்ததற்கும் தற்போது தொடங்கி இருப்பதற்கும் பின்வரும் காரணங்களை கூறுகிறார்…

“எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும்” என்றும்,

“2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழி வகுப்பது தான் நமது இலக்கு” என்றும் கூறுகிறார்.

தனக்குப் பெயர், புகழ் மற்றும் எல்லாம் கொடுத்த மக்களுக்கு விஜய் செய்வது, கட்சி தொடங்கி, முதலமைச்சராவதுதான். அதாவது, தன்னையும், தன் திரைபிம்பத்தையும் முதலீடு செய்து ஆட்சிக்கு வரவேண்டும் என விஜய் நினைக்கிறார். அவர் மட்டுமல்ல, முன்னணி நடிகர்கள் அனைவருமே இப்படித்தான் நினைக்கின்றனர். ஆனால், இதுதான் அரசியல். இதுதான் ஜனநாயகம் என்று கருதுவது தவறானது. பிழையானது.

பொதுவாக, கதாநாயகர்களுக்கு திடீரென பணமும் புகழும் கிடைத்தவுடன் அவர்கள் பிரமித்துப்  போகிறார்கள். ஒன்று, இந்தப் பணம், புகழ் அனைத்தும் கடவுளின் அருளால் கருணையால் தனக்கு கிடைத்திருப்பதாக மூடநம்பிக்கை கொள்கின்றனர். இரண்டாவதாக, மேலும் மேலும் முன்னேறுவதற்கான திறமையும் அதீத சக்தியும் அதிர்ஷ்டமும் தனக்கு இருப்பதாக பிரமை கொள்கின்றனர். இதனால் பணம், புகழ் கிடைத்தவுடன், அரசியல் பதவி என்னும் அதிகாரத்தை எளிதாக எட்டிப் பிடித்து விடலாம் என நம்புகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் முதல் தற்போது கட்சி தொடங்கியிருக்கும் விஜய் வரை இதனைத் தான் வெளிப்படுத்துகின்றனர்.

நாட்டில் எவ்வளவோ எரியும் பிரச்சினைகள் இருக்கின்றன. இன்று நாடாளுமன்ற ஜனநாயக கவசத்துக்குள் பாசிசம் கோலோச்சுகிறது. கூட்டாட்சி என்பதையெல்லாம் வீசி எறிந்து விட்டு வெறும் நிர்வாக அலகுகளாக மாநிலங்களை மாற்ற ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ஆளுநர்களின் அரசியல் தலையீடும், அமலாக்கத்துறை போன்ற  புலனாய்வு அமைப்புகளின் அரசியல் ரீதியான பயன்பாடும் எல்லையற்று போய்க்கொண்டிருக்கிறது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைத்தால் மக்களாட்சி தொடருமா என்பதே ஐயம் என்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே.

இப்படி பல்வேறு அரசியல் பிரச்சனைகளின் கூர்முனையாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் இருக்கிறது. ஆனால், இந்த அரசியல் எதார்த்தம் பற்றி எதுவும் பேசாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைக்க விஜய் நினைக்கிறார். எப்படி சாத்தியம்?

ஆனால், அறிக்கையின் பல்வேறு இடங்களில் அடிப்படை அரசியல் மாற்றம் பற்றி விஜய் பேசுகிறார். “முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வர ஒரு தன்னார்வ அமைப்பினால் (விஜய் மக்கள் இயக்கம்) மட்டும் இயலாத காரியம்.” என்று கூறும் விஜய், “தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச ஊழலற்ற,  திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக் கூடிய..” என்பதையே அவர் அடிப்படை அரசியல் மாற்றம் என்கிறார்.

நடிகர் விஜய்யின் மேலோட்டமான இந்த பார்வைக்கும் இன்றைய அரசியல் எதார்த்தத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

விஜய் போன்ற நடிகர்களின் அரசியலற்ற அதிகாரத்தை நோக்கிய நகர்வுக்கு, பெரும்பாலும் அரசியல் உணர்வும் அரசியல் புரிதலும் இல்லாத இளைஞர்கள் தான் அடித்தளமாக உள்ளனர். அதாவது களத்தில் உள்ள அரசியல் கட்சிகளால் பெரிய ஈர்ப்பையோ செல்வாக்கையோ செலுத்த முடியாத இளைஞர்கள் அடித்தளமாக உள்ளனர். அவர்களிடம் “உங்கள் நடிகர் ஏன் அரசியலுக்கு வருவதாகச் சொல்கிறார்? அவர் என்ன செய்து விடுவார்?” என்ற சாதாரண கேள்விக்கு கூட சரியான பதில் இல்லை. ஆனால் “யார் யாரோ அரசியலுக்கு வரும்போது எங்கள் நடிகர் மட்டும் வரக் கூடாதா?” என்ற எதிர்க் கேள்விதான் அவர்களின் பதிலாக வருகிறது.

தங்களுக்குப் பிடித்த நடிகருக்காக அரசியலில் அடியெடுத்து வைக்கும் அந்த இளைஞர்கள், சமூகத்தையும் அரசியலையும் கவனிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது அவற்றுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இதன் மூலம் சமூகத்தில் அரசியல் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றையும், தமிழ் சமூகத்தை வளர்த்தெடுத்த தலைவர்களையும் பற்றி கற்றுக் கொள்வார்கள். விஜய் போன்ற நடிகர்கள் தொடங்கும் கட்சிகளின் வரம்பு குறித்தும் தெளிவு பெறுவார்கள்.

அதேநேரத்தில், திரைப்பட நடிகர்களை ரசிப்பதன் வரம்பையும், எதார்த்தத்தில் சமூக அரசியல் செயல்படும் விதத்தைப் பற்றியும் முற்போக்கு பண்பாட்டு அமைப்புகள் அவர்களிடம் உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: வ.மணிமாறன்
ஊடகவியலாளர், எழுத்தாளர்
manimaran2@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button