
“கண்ணியத்துடன் கூடிய வாழ்க்கை கருணை அல்ல. அது பெண்கள் உரிமை, அதை உறுதிப்படுத்து” எனும் முழக்கத்தோடு உலகின் அனைத்து பெண்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகளை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
2025 ஆண்டிலும் உலக அளவில் பெண்கள் சந்தித்து வரும் சவால்கள் குறித்துப் பேச வேண்டிய நிர்பந்தத்திற்கும் உள்ளாகி இருக்கிறோம்.
இந்தியப் பெண்கள் இயக்கம்
இந்தியப் பெண்கள் இயக்கத்தில் சோசலிச சிந்தனையும் செயல்பாடும் மேலோங்கி இருந்தாலும், அதனை மகளிர் அடைவதற்கு தொடர்ச்சியாக போராட்டங்களும் முன்னோடி பெண்தோழர்களின் அர்ப்பணிப்பும் இன்றியமையாதது. சமூக உறவுகளுக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் இடையிலான இயங்கியல் ரீதியான தொடர்புகளை இயக்க தோழர்கள் அடையாளம் காண வேண்டும்.உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, உற்பத்திக் கருவிகளின் மீதான கட்டுப்பாடு, ஆண், பெண் மற்றும் குடும்ப நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கி பயணிக்கிற பெண்களைப் பற்றிய இந்த சமூகத்தின் பார்வை மிக குறுகலானது.
எதிர்காலத்தில் நம்மை எவ்வித திசைவழி நோக்கி நகர்த்திக் கொள்ள வேண்டும் என கூர்ந்த பார்வையும் தெளிவும் கொண்டவர்களாக பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தை திருமணம் தொடங்கி பெண் சிசுக் கொலை, உடன்கட்டை ஏறுதல், உழைப்புச் சுரண்டல், அதிகாரம் மறுத்தல், சுய மரியாதை இழத்தல், சொத்துக்கான அங்கீகாரம் மறுத்தல், ஆண் இனத்தவருக்கு கீழாக நடத்தப்படுதல் போன்ற பலதரப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களாக பெண் சமூகம் நடத்தப்பட்ட தன் விளைவாக மேலை நாடுகளின் போராட்டங்கள், பெண்ணிய இயக்கங்கள் மூலம் வெகுவாக இந்திய மக்கள் ஈர்க்கப்பட்டனர்.
1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில், ராணி லட்சுமிபாய் மற்றும் பேகம் ஹஸ்ரத் மஹால் போன்ற ராணிகள் மட்டுமல்ல, ஜல்காரி பாய் போன்ற தலித் பெண்களும், அசிசான் பாய் போன்றோரும் சுதந்திரப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு போராளிகளாகவும் தலைவர்களாகவும் பரிணமித்தனர்.
இந்தப் போராளிகள் அனைவரும் பெண்களைக் கட்டிப்போட்ட பல நிலப்பிரபுத்துவக் கட்டுப்பாடுகளுக்கு சவாலாகவே அமைந்தனர்.
19 ஆம் நூற்றாண்டில் பல சமூக சீர்திருத்தவாதிகளும், சாதாரண பெண்களும் சதி மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக போராடினார்கள். மேலும் விதவை மறுமணம் மற்றும் பெண் கல்விக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ரக்மாபாய் எனும் போராளி 13 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால், அவர் வயது வந்தவுடன் இந்த குழந்தை திருமணத்தை மதிக்க விருப்பமில்லாதவராய் எதிர்த்து அவர் சமூக சீர்திருத்தவாதிகளின் அணிவகுப்பில் முதன்மையான போராளியாக மாறினார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராக ஆனார். 1880களில் கொல்கத்தாவின் கடம்பினி கங்கோபாத்யாயா மருத்துவராகவும் இங்கிலாந்தில் கூடுதல் பட்டம் பெறவும் மிகப்பெரிய ஆணாதிக்க எதிர்ப்பைக் கடக்க வேண்டியிருந்தது. ஒடுக்கப்பட்ட இன எழுத்தாளரும் ஆர்வலருமான சாவித்ரிபாய் புலே, தன்னைத் துன்புறுத்தி, துஷ்பிரயோகம் செய்து, அவதூறுகளை வீசும் நிலப்பிரபுத்துவ, சனாதன சக்திகளை எதிர்த்துப் பெண் கல்விக்கு முன்னோடியாக இருந்தார்.
உயர்சாதி இந்து விதவைகள் அனுபவித்த அருவருப்பான மற்றும் பாரபட்சமான சமூக பழக்கவழக்கங்களை சாவித்ரிபாய் தனது கணவர் ஜோதிபா பூலேவுடன் சேர்ந்து போராடினார்.
மருத்துவராகத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்களில் ஆனந்திபாய் ஜோஷியும், மகாராஷ்டிராவின் ஆரம்பகால பெண் நாவலாசிரியர் காஷிபாய் கனித்கரும் முதன்முதலில் காலணிகள் அணிந்தும், குடைகளை ஏந்தியும் பொதுவில் இறங்கியபோது, தெருக்களில் கல்லெறியப்பட்டதன் மூலம் ஆகப்பெரும் புரட்சியை தூண்டினார்கள்.
1882 இல் ‘ஸ்த்ரீ புருஷ் துலானா’ என்ற மராத்திய துண்டு பிரசுரத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவமின்மையை எதிர்த்து எழுதியபோது, சில சமூக சீர்திருத்தவாதிகள் கூட அவரைத் தாக்கினர். தலித் சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா பூலே மட்டுமே அந்தப் படைப்பைப் பாதுகாத்தார். 1890 களில், பிரம்ம சமாஜப் பெண்கள் குழுக்கள் கொல்கத்தாவின் தெருக்களில் பர்தாவுக்கு எதிராக ஒரு பொதுப் பிரச்சாரத்தை நடத்தினர்.
சுதந்திரப் போராட்டங்களில், 1928-29 பொது வேலைநிறுத்தத்தின் போது கம்யூனிஸ்ட் தலைமையிலான தொழிற்சங்க இயக்கத்தில் இருந்த பெண்கள் பருத்தி ஜவுளி ஆலைகளின் வாயில்கள் முழுவதும் பெண்கள் மட்டுமே திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
கல்பனா தத் ஒரு புரட்சியாளராகவும், இந்திய விடுதலை இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 1930 ஆம் ஆண்டு சிட்டகாங் ஆயுதக் கிடங்கை தகர்க்கும் நடவடிக்கையில் அவர் தொடர்புடையவர், இது பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றும் ஒரு துணிச்சலான முயற்சியாகும். சிறைவாசத்தை எதிர்கொண்ட போதிலும், அவர் சுதந்திரக் கொள்கையில் உறுதியாக இருந்தார்.
பிரித்திலதா வடேதர் ஒரு புரட்சியாளராகவும், இந்திய விடுதலை இயக்கத்தின் தீவிர உறுப்பினராகவும் இருந்தார். அவர் சிட்டகாங் ஆயுதக் கிடங்குத் தாக்குதலில் பங்கேற்று பின்னர் இனப் பாகுபாட்டை எதிர்த்து பஹர்தலி ஐரோப்பிய கிளப்பின் மீது தாக்குதலுக்கு தலைமை தாங்கினார்.
கிளாரா ஜெட்கின், ரோசா லக்சம்பர்க், குரூப்ஸ் கயா போன்ற தலைவர்களின் வரலாற்று பின்னணியில், இந்தியாவில் முன்னணி பாத்திரம் வகித்த தலைவர்கள் கல்பனா தத், அஸ்ரா பேகம், விமலா டாங்கே, விமலா பரூக்கி, பிரமிளா லூம்பா, தாரா ரெட்டி, ரேணு சக்கரவர்த்தி, கீதா முகர்ஜி, சரளா சர்மா, ரஞ்சனா ராய் கார்க்தி சக்கரவர்த்தி, பார்வதி கிருஷ்ணன், மீனாட்சி சுந்தரத்தம்மாள், சரஸ்வதி சுப்பையா போன்ற எண்ணற்ற தோழர்கள் வலுசேர்த்து போராட்ட வாழ்வை எப்படி எதிர்கொள்வதென வாழ்ந்து காட்டியுள்ளனர்.
அன்றைய காலகட்டத்தை காட்டிலும், போராட்டத்தின் தீவிர தன்மை குறைந்துள்ளதை சுய பரிசோதனை அடிப்படையில் ஒப்புக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பலதரப்பட்ட சுதந்திரப் போக்குகள் பெண்களிடையே காணப்பட்டாலும் அவை வர்க்கப்பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருப்பதை மார்க்சிய கண்ணோட்டத்தோடு உணர முடியும்.
பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், பொதுவெளியில் பகிரங்கமாக பெண்களை இழிவாக பேசுதல், கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள் உட்பட குடும்ப வன்முறைகள் என நீளும் பட்டியல்.உலகின் எல்லா நெருக்கடிகளுக்கும், முதலாளித்துவம் கையில் எடுக்கும் ஆயுதம் பெண்கள். இருபாலருக்கும் பொதுவான வேலைகளில் கூட வேலை பங்கீடு செய்யும் ஆண்களை இழிவாக பேசும் போக்கு முதலில் பெண்களிடையே ஒழிக்கப்பட வேண்டும். இது சமூக, குடும்ப பொறுப்புகளிலிருந்து ஒரு பாலினத்தவரை அந்நியப்படுத்தும் சம்பிரதாயம்.
பெண்களுக்கான விழிப்புணர்வே இத்தகைய பிற்போக்குவாதங்களை மாற்றும்.
“குடும்பம் எப்போதும் சுற்றியிருக்கும் உணர்வு சுரண்டலுக்கான ஒரு வழியாகவே எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களையும் குழந்தைகளும் சுரண்டுவதற்காகவே குடும்பத்தைப் பயன்படுத்துவது சோசலிசத்தின் கீழ்தான் முடிவுக்கு வரும்.” பெண்களின் அந்தஸ்து என்பது வழிவழியாகவே ஆண்களை விட தரம் குறைந்த ஒன்றாகவும், ஒரு சில நேரங்களில் உண்மையில் அடிமைத்தனமாகவுமே இருந்து வருகிறது. முழுமையான சுதந்திரம் “பாலின அடிப்படையில் அல்ல; வர்க்க அடிப்படையில்” கிடைக்கவேண்டும்.
வர்க்க அடிப்படையிலான சுதந்திரத்தை இலக்காகக் கொண்டு, போராடுவோம் வெற்றி பெறுவோம்!! புரட்சிகர வாழ்த்துகள்.