மாமன்னர் ஆட்சியில் தண்டனைக்கு மேல் தண்டனையா?
கட்சிக் கடிதம் - மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

போர்க்குணமிக்க தோழர்களே!
தலைநகர் டெல்லி பட்டினத்தில் ஆட்சி, அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள மோடியின் தலைமையிலான ஆட்சி, ஜனநாயகம் எனும் மிக உயர்ந்த கொள்கையைக் கைவிட்டு, மன்னரின் ஆட்சி முறையினை, அதுவும் மாமன்னர் ஆட்சி முறையைப் பின்பற்றி வருகின்றது.
அனைவரையும் அரவணைத்தும், பிறர் கருத்துகளுக்கு மதிப்பளித்தும், பல கட்சிகளையும் அங்கீகரித்து போற்றிப் பாதுகாக்கும் மிக உயர்வான ஜனநாயகப் பண்புகள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு, நான் வைத்ததே சட்டம், ஏற்கிறாயா? இல்லையா? என இறுமாப்புடன் ஆணையிடும் ஆணவம் பிடித்த ஒன்றிய அரசாகச் செயல்பட்டு வருவதும், அது தொடர்ந்து நீடிப்பதும் நாட்டிற்குப் பேராபத்து என்பதை நாட்டு மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.
இந்தியா என்கிற பெரும் நாடு உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் உள்ளடக்கியதுதான் இந்தியா என்பது மோடிக்குத் தெரியாத ஒன்றல்ல,
ஒன்றிய அரசு அல்லது அதற்கு தலைமை தாங்கும் பிரதமரோ நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அம்மாநிலங்களில் வாழும் இந்தியக் குடிமக்கள் 140 கோடி மக்களுக்கும் கடமைப்பட்டவர்கள்.
ஒன்றிய அரசானாலும், மாநில அரசுகள் ஆனாலும் அவை அனைத்தையும் வழிநடத்திச் செல்வது நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
அரசமைப்புச் சட்டத்தை எந்த ஒரு நபரும் அல்லது அரசும் மீறுவது இயலாது, கூடாது. அவ்வாறு மீறிச் செயல்படுவார்கள் தண்டனைக்குரியவர்கள்.
ஒரு இந்தியக் குடிமகன் அரசியலமைப்புச் சட்டத்தை மீறினால், அவன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவான்.
ஆனால் சட்டத்தை அமல்படுத்திட வேண்டியவர்கள் மீறினால் அவர்களை யார் தண்டிப்பது?
நடுவண் அரசு என்று போற்றப்படும் ஒன்றிய அரசு நடுநிலை தவறாது செயல்பட வேண்டும்.
அவ்வாறு செயல்படாமல் சார்பு நிலை எடுத்துச் செய்யப்படும் ஒன்றிய அரசை, அதற்கு தலைமை தாங்கும் பிரதமரைக் கேள்வி கேட்பவர்கள் யார்?
மாற்றுக் கருத்துடையோரை அனுமதிக்க மாட்டேன் என்று கூறுவது ஜனநாயகம் அல்ல! மாறாக, அது ஒரு சர்வாதிகாரம், அது ஓர் பாசிசம்!
சர்வாதிகாரம், பாசிசம் தற்காலிக வெற்றிகளைப் பெறலாம், பெற முடியும். ஆனால், அதுவே நிரந்தரமல்ல, அவை வீழ்த்தப்படும். முறியடிக்கப்படும் என்பது உறுதியானது. ஜனநாயகம் இறுதியில் வெற்றி பெறும் அதுவே நிரந்தரமானது, மெய்யானது.
இந்த உண்மை இங்கு மட்டுமல்ல, உலகிற்கே பொதுவானது. இரண்டாம் உலகப் போரின் உலகளாவிய பாசிசத்தை உலகம் கண்டுள்ளது.
தன்னை மிஞ்சுபவர் யாருமில்லை, தன்னைவிட உலகில் அறிவாளிகள் இல்லை, உலகம் தன் ஆளுகைக்கு உட்பட்டது என்று கொக்கரித்து, இரண்டாம் உலகப் பெரும் போருக்குக் காரணமான ஹிட்லரின் மரணம் வீர மரணம் அல்ல, கோழைத்தனமான தற்கொலை.
தன் நாட்டிற்கு மட்டுமல்ல, இப்பேருலகின் ஜனநாயகத்தைக் காக்க, சோவியத் செஞ் சேனையின் மாவீரர்கள் 2 கோடி பலியாகி, ஹிட்லரின் பாசிசத்தைத் தோற்கடித்து, வேரடி, வேரடி மண்ணோடு புதைகுழிக்கு அனுப்பி, உலகின் ஜனநாயகத்தைக் காத்திட்ட பெருமைக்குரியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்கின்ற பேருண்மை மோடியின் வகையறா கூட்டத்திற்கு புரிய வைக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் இந்திய நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்!
இன்று ஒன்றியத்தில் உள்ள பாசிச அரசு, தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டுள்ளது.
அத்தாக்குதல் என்பது துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டுள்ள, பீரங்கித் தாக்குதல்களால் அல்ல, ராக்கெட் வீச்சால் அல்ல, மாறாக ஜனநாயகம் என்கிற பெயராலேய அத்தாக்குதல் தொடுக்கப்படுகின்றது.
தனக்குக் கிடைத்துள்ள ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, தனது தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆணைகளை ஏற்றுப் பிசிறின்றி நிறைவேற்றி வருகிறது.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் அண்மையில் கூறிய கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். “ஒரு நாட்டைக் கபளீகரம் செய்யப் போர் தொடுக்க வேண்டியது இல்லை. மாறாக, அம்மக்களின் கலாச்சாரத்தை, தாய்மொழியை அழிப்பதன் மூலம் நாட்டைக் கபளீகரம் செய்து விட முடியும் என்று தெரிவித்திருந்தார்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பச்சை ஆர்எஸ்எஸ் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.
அவர் கூறியது போன்றுதான் இன்று ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டைச் சீரழிக்க மொழிப் படையெடுப்பை மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் நாளை, உலக தாய்மொழி தினமாகப் பின்பற்றி வருகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள மக்கள், தங்களின் தாய் மொழியை போற்றிக் கொண்டாடி மகிழ்கின்றனர். இதன் பொருள் என்ன? ஐக்கிய நாடு சபை உலக மொழி தினம் எனக் கொண்டாட அறைகூவல் விடுக்கவில்லை. மாறாக, உலகத் தாய்மொழி தினம் எனக் குறிப்பிடுகின்றது.
அவரவர் தாய்மொழி காக்கப்பட வேண்டும். அது அழிவை நோக்கிச் சென்றுவிடக் கூடாது. தாய் மொழிக்குப் பிறமொழிகளால் ஆபத்து நேரிடலாம், அத்தகைய ஆபத்துகளில் இருந்து தாய் மொழியைக் காத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை, தேவையை உணர்த்துவதுதான் உலக தாய்மொழி தினமாகும்.
உலக தாய்மொழி தினத்தை நாம் கொண்டாடி மகிழும் நேரத்தில்தான் நம் தாய்மொழி தமிழ் மீது “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பன்மொழி கற்றுத் தேர்ந்த பாகவி பாரதி போற்றி, புகழ்ந்த நம் இனிய தாய் மொழியாம் தமிழ் மீது, ஒன்றிய அரசு போர் தொடுத்துள்ளது.
இப்போர் இன்று நேற்றல்ல, நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் பெரும் போராட்டம்.
ஒவ்வொரு போரின் போதும், தமிழுக்கு எதிராகப் போர் தொடுத்தவர்களை, தமிழ் மக்கள் ஒரு முகமாய் நின்று தோற்கடித்தார்கள்.
ஆனால் இன்று போர் தொடுப்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, மோடியின் வஞ்சகம் நிறைந்திட்ட பெரும் சூழ்ச்சிக்கு இறையாகிவிட்ட புல்லுருவிகள், தமிழகத்தில், தமிழன் என்று வெட்கமின்றி, கூச்சநாச்சமின்றிப் புலம்பித் திரியும் கூட்டத்தினையும், நாம் எதிர் கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம் என்பது வேதனைக்குரியது.
தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாகப் பின்பற்றி வரும் கல்விக் கொள்கைக்கு மாறாக, தனது தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் உத்தரவுகளை ஏற்று, மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய தேசியக் கல்விக் கொள்கை எனும், படுபிற்போக்குத்தன ஓர் முடிவை மேற்கொண்டு, அம்முடிவை நீ ஏற்க வேண்டும். அவ்வாறு ஏற்கவில்லை எனில், உனக்கு நிதி கொடுக்க மாட்டோம் என்று ஆணவச் செருக்கோடு கூறுகின்றார் ஒன்றிய கல்வி அமைச்சர் திருவாளர் தர்மேந்திர பிரதான்.
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு கையெழுத்து இடவில்லை எனில், நிதி வழங்கச் சட்டத்தில் இடமில்லை என்று இல்லாத சட்டத்தை இருப்பதாகக் கூறுகின்றார்.
மூன்றாம் மொழியாக ஏதாவது ஒன்றை நீ ஏற்றுத்தான் தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதன் உள்நோக்கம் என்ன?
இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் மூன்றாம் மொழியாக எம்மொழி பின்பற்றப்பட்டு வருகிறது என்பதனை ஆதாரத்துடன் பகிரங்கமாக அறிவிப்பாரா ஒன்றிய கல்வி அமைச்சர்?
ஆடு நனைகிறது என ஓநாய் வருத்தப்பட்டதாக கதை ஒன்று உண்டு. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மேம்பட, கல்வியின் தரம் உயர்த்தப்படத்தான் தேசியக் கல்விக் கொள்கையாம்.
கேழ்வரகில் நெய் வடிகின்றது என்கிறார் கல்வி அமைச்சர்.
கல்வி அமைச்சரே, தர்மேந்திர பிரதானே, தலைமை தாங்கும் மோடியே, அதன் அடிவருடிகளே, எங்களின் பெற்றோர்கள் நாங்கள் சின்னஞ் சிறுவனாக இருந்தபோதே, எங்கள் காதுகள் ஒன்றில் அல்ல, இரண்டிலும் காது குத்தி விட்டார்கள். நீங்கள் மீண்டும் காதுகுத்த முயல வேண்டாம்.
ஒரே நாடு, ஒரே மொழி என்கிற பித்தலாட்டத்தனமான கொள்கையை அமல்படுத்தும், உங்களின் மிகக் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியே, உங்களின் கேடுகெட்ட கல்விக் கொள்கையாகும்.
அத்தகைய கொள்கைக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை. அதனால், எத்தகைய விளைவுகள் ஏற்படினும் அதனை நெஞ்சு நிமிர்த்தி ஏற்கத் தயார்.
கல்வியில் மட்டுமல்ல, இயற்கைச் சீற்றத்தால் பெரும் பாதிப்பிற்கு, சென்ற 2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 37,000 கோடி கோரியது. மோடி அரசு ஒன்றரை பைசா கூட வழங்கவில்லை.
கடந்த 20 ஆண்டு காலமாகப் பின்பற்றி வரும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிட வேண்டிய நிதி 2,152 கோடி, அந்நிதியை ஒன்றிய அரசு இன்று வரை வழங்க மறுக்கிறது.
இதன் விளைவாக தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள். அவர்கள் பணியாற்றிய காலத்திற்குரிய ஊதியத்தை, பல மாதங்களாக மாநில அரசால் வழங்க முடியவில்லை. பணிகளைத் தொடரவும் முடியவில்லை. ஏழை, எளிய மக்களின் துன்பத்தை, துயரத்தை, பட்டினியைக் கண்டு மோடி அரசு மனம் மகிழ்கின்றது.
இவைகளுக்கெல்லாம் மேலாக, நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு என்கிற பெயரால், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளை, 31 தொகுதிகளாகக் குறைப்பதற்கும், வட மாநிலங்களான உ.பி, பிஹார், போன்ற மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கைகளை, தற்போதை காட்டிலும் அதிகரிப்பதற்குமான, அடாவடித்தனத்தை மேற்கொண்டு, தமிழகத்தின் உரிமைகளை முற்றாகப் பறிப்பதற்கான படுபாதகச் செயலை கூச்ச, நாச்சமின்றி மேற்கொள்ள துடியாய், துடிக்கிறது மோடி அரசு.
ஆம்! நாட்டை ஆள்வது ஜனநாயக ஆட்சி அல்ல. மாறாக மன்னராட்சி. மாமன்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது.
மாநில ஆட்சிகள் எல்லாம், அதிலும் குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்கள் எல்லாம், குறுநில மன்னர்கள் ஆட்சியாகக் கருதுகின்றது மோடி ஆட்சி.
நாட்டில் மாமன்னர் ஆட்சிக்கு இடமில்லை. மக்கள் கிளர்ந்து ஒன்றுபட்டு போர் புரிவார்கள்.
மாமன்னர் ஆட்சி முறைக்கு முடிவு கட்டி விடுவார்கள்.
ஜனநாயகத்தை காப்பாற்ற களம் புகுவார்கள்.
போர்க்களம் காண, கண நேரமும் தாமதிக்காது. களம் காண ஆயத்தமாவீர்! அணிவகுப்பீர்!
மீண்டும் சந்திப்போம்,
வணக்கம்,
தோழமைமிக்க,