
மக்கள் ஒன்று கூடும் உலகின் மிகப்பெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, அரசியல் திருவிழாவாக மாற்றப்பட்டு விட்டது. இதனை இரட்டை எஞ்சின் அரசு திட்டமிட்டு செயல்படுத்தி இந்துத்துவ தேசிய அடையாளத்துடன் இணைக்கப்பட்ட சந்தைத் திருவிழாவாக மாற்றிவிட்டது.
கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு நகரங்களில் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். பிரயாக்ராஜ் (முன்னர் அலகாபாத்), ஹரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய நான்கு நகரங்களின் ஆற்றுப் படுகைகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை ஆறுகள் சங்கமிக்கும் இடத்திலும், ஹரித்துவாரில் கங்கையிலும், நாசிக்கில் கோதாவரியிலும், உஜ்ஜைனியில் ஷிப்ரா ஆற்றுப் படுகையிலும் கும்பமேளா கொண்டாடும் போது மக்கள் திரளாக நீராடுகின்றனர்.
இப்படிக் கொண்டாடப்படும் 12வது கும்பமேளாவை மகா கும்பமேளா என்று அழைக்கின்றனர். இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியது. இந்த அடிப்படையில் தற்போது நடைபெறுவது மகா கும்பமேளா ஆகும். கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை சங்கமிக்கும் இடத்தில் மக்கள் திரண்டு நீராடுகின்றனர்.
விஐபிகளுக்கு தடையற்ற வழிபாடு
மடாதிபதிகள், அகாராக்கள், உடல் முழுவதும் திருநீறு பூசிய நாக சாதுக்கள் தங்குவதற்கான கூடாரங்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நதியில் நீராடிவிட்டு வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. விஐபிக்கள் எனப்படும் பிரமுகர்கள் நேராக கங்கை, யமுனா சங்கமத்திற்குச் சென்று நீராடி வழிபட்டுச் சென்றனர்.
குடியரசுத்தலைவர் முர்மு, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பிரமுகர்கள் நதியில் நீராடி வழிபட்டுச் சென்றனர். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனியாகவும் முக்கிய பிரமுகர்களுடன் சென்றும் பல முறை நீராடினார்.
ஆனால், நாள்தோறும் திரண்டுவரும் மக்கள் தங்குவதற்கு நெரிசலான கூடாரங்கள், அவர்கள் நதியில் நீராடிய பிறகு திரும்பி வருவதற்கும் உடை மாற்றுவதற்கும் எளிதாகச் செல்லமுடியாமல் கூட்ட நெரிசல், ஈர உடைகளுடன் ரயில் நிலையங்களுக்கும் பேருந்து நிறுத்தங்களுக்கும் செல்ல முடியாமல் திணறும் நிலை. ஓரிடத்தைக் கடப்பதற்குக்கூட பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய சூழல், சில நாட்களில் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசலால் நின்று கொண்டிருந்த ஊர்திகள்.. இவைதான் பிரக்யாராஜ் நகரின் கும்பமேளா ஏற்பாடுகள்.
நெரிசலில் 30 பேர் பலி
மவுனி அமாவாசை அன்று லட்சக்கணக்கான மக்கள் நீராடுவதற்காக குவிந்தனர். இதனால் நீராடுவதற்காக ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் தடுப்புகளை உடைத்துக்கொண்டும் ஓடினர். பலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக்கொண்டு நீராட ஓடினர்.
அதிகாலை 2 மணிக்கு எங்கும் மரண ஓலம், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், புனித நீராடவும் எங்கு செல்வது? எப்படிச் செல்வது? என்பது தெரியாமல் மக்கள் திண்டாடினர். அவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் காவல்துறை திணறியது.
ஆயிரக்கணக்கானோர் தங்களுடன் வந்தவர்களை, உறவினர்களைத் தேடி அலைந்தனர்.
கூட்ட நெரிசல் குறித்தும் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் உத்தரப்பிரதேச பாஜக அரசு பேச மறுத்தது. மூடி மறைக்க முயன்றது. பின்னர் 30 பேர் இறந்ததாக அம்மாநில காவல்துறை அறிவித்தது.
கூட்ட நெரிசலில் கை, கால்கள் உடைந்தும் எலும்பு முறிவு ஏற்பட்டும் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களைப் பற்றி எந்தக் கணக்கும் இல்லை. உத்தரப்பிரதேச அரசும் காவல்துறையும் போதுமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அவர்களின் அலட்சியமே காரணம் என நீராடத் திரண்ட மக்கள் குற்றம்சாட்டினர்.
தற்காலிக குடில்களில் பயன்படுத்திய சிலிண்டர்கள் திடீரென வெடித்ததில், குடில்கள் தீப்பற்றி எரிந்தது. பெரும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. தீயணைப்பு ஊர்திகள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தியதாக அரசு தெரிவித்தது. இவற்றையும் மீறி மக்கள் திரளுவதும், நீராடி வழிபடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அரசியலாக்கப்பட்ட ஆன்மீக நிகழ்வு
நாடு விடுதலை அடைந்த பிறகு பல்வேறு கட்சிகளின் ஆட்சியில் கும்பமேளா நடந்துள்ளது. எந்த முதலமைச்சரும் கும்பமேளாவை அரசியலாக்கவோ தங்களை பெரும் பிம்பமாக கட்டமைத்துக் கொள்ளவோ முயன்றதில்லை. மக்களும் எந்த ஆடம்பரமும் பிரமாண்டமும் இன்றி மாட்டு வண்டிகளிலும் பேருந்துகளிலும் கால்நடையாகவும் கும்பமேளா நடக்கும் இடத்துக்குச் சென்று நீராடினர். வழிபடுவதிலும் அமைதியைத் தேடுவதிலும் அவர்கள் மூழ்கியிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் மகா கும்பமேளா இதுவரை இல்லாத அளவுக்கு, ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப அரசியலாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படங்களுடன், அலகாபாத் என்னும் பெயரை மாற்றி பிரயாக்ராஜ் எனப் பெயரிடப்பட்ட நகரில் நடைபெறும் ‘புதிய இந்தியாவின்’ முதல் கும்பமேளா. ‘இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீகப் பாரம்பரியத்தின் வெளிப்பாடு’ போன்ற வாசகங்கள் இடம்பெற்ற சுவரொட்டிகள் உத்தரப்பிரதேசத்தை நிறைத்தன. உத்தரப்பிரதேச அரசு நாடும் முழுவதும் விளம்பரங்கள் கொடுத்தது. கும்பமேளா என்ற ஆன்மீக நிகழ்வு, இந்துத்துவ தேசிய அடையாளத்துடன் இணைக்கப்பட்ட திருவிழாவாக மாற்றப்பட்டுள்ளது.
பல்வேறு நம்பிக்கைகள், மரபுகள் சங்கமிக்கும் பன்மைப் பண்புகளுடன் கூடிய கும்பமேளாவாக இல்லாமல், அரசியல் மயமாக்கப்பட்ட விழாவாக மடைமாற்றப்பட்டு விட்டது. பக்தி, வழிபாடு என்பதன் அடிப்படை உணர்வையே ஒன்றிய மோடி அரசும் உத்தரப்பிரதேச யோகி அரசும் இணைந்து சீர்குலைத்து விட்டது.
“திக்கற்றவருக்குத் தெய்வமே துணை” என்று வாழ்க்கையில் துன்பங்களுக்கு உள்ளாகி, திண்டாடும் மக்களுக்காக சொல்லப்படும் பழமொழி ஒன்று உண்டு. ஆனால் அந்தத் தெய்வமும் அதனைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட மதமும் திக்கற்று இருக்கிறது. மக்களே துணை நிற்க வாருங்கள் என்று சங்கிகளும் சங்கிகளின் அரசும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு மகா கும்பமேளாவே சான்று.