
இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களது இருப்பு, உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், பணிகள் ஆகியன குறித்துப் பலவாறான கற்பனைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இவற்றைப் பொது மக்கள் மட்டுமன்றி, ஊடகத்தினர், அரசியலர், ஆட்சியாளர், வழக்கறிஞர், நீதியர் எனப் பெரும்பாலோர் ஏதோவொரு வகையில் நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
1. ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் சார்பாளர்.
2. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமான இணைப்பாக இயங்குபவர்.
3. மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசுக்கு அவ்வப்போது அறிக்கை அளிக்கின்ற கடமையாளர்.
4. பணியமர்த்தல், பதவி நீக்கல் ஆகியன குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுவதால், ஆளுநர் ஒன்றிய அரசுக்குக் கட்டுப்பட்டவர்
5. மாநில அரசை வழிநடத்தும் பொறுப்பும் கடமையும் ஆளுநருக்கு உள்ளது.
6. மாநில அமைச்சரவைக்கு அறிவுரை கூறுகின்ற பங்களிப்பு ஆளுநருக்கு உள்ளது.
7. மாநிலச் சட்டப்பேரவையில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைக்கும் தடுப்புரிமை ஆளுநருக்கு இருக்கிறது.
8. பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சி அல்லது கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் முதல்வரைத் தேர்வு செய்யும் தனியுரிமை ஆளுநருக்கு உண்டு.
9. மாநில அமைச்சரவையின் அறிவுரைகளை மட்டுமன்றி, குடியரசுத் தலைவர் அல்லது ஒன்றிய அமைச்சரவையின் அறிவுரைகளை ஆளுநர் ஏற்றுச் செயல்பட வேண்டும்.
10. தானாகத் தன் விருப்பில் முடிவெடுக்கும் பல உரிமைகள் ஆளுநருக்குத் தரப்பட்டுள்ள .
11. சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டம் மட்டுமல்லாது, ஆளுநரின் ஒப்புதல் பெறவேண்டிய கோப்புகள், பணியமர்த்தல் போன்றவற்றைத் திருப்பியனுப்பவும் திருத்தம் கேட்கவும் மறுக்கவும் ஆளுநருக்கு உரிமை உள்ளது.
12. அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் குறித்திருக்கும் ஒரு சில மாநிலங்களுக்கான, ஒரு சில தனி உரிமைகள் மட்டுமல்லாது, 356 ஆம் பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசைக் கலைக்க அறிவுரை கூறும் உரிமை தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கு இருக்கிறது.
13. மாநில அரசின் நிலைபாடுகளுக்கு மாறாகக் கருத்துத் தெரிவித்தல், மாநில அரசைப் பொதுவெளியில் கண்டித்தல் போன்றவற்றை ஆளுநர் மேற்கொள்ளலாம்.
14. சட்டப்பேரவையில் படிக்கவேண்டிய ஆளுநர் உரையைக்கூடத் திருத்தலாம் அல்லது புறக்கணிக்கலாம்.
15. பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில், மாநில அரசின் அறிவுரை இல்லாமல், ஆளுநர் தனித்துத் தானாகவே முடிவெடுக்கத் தக்க உரிமை பெற்றிருக்கிறார்.
16. இவையின்றி வேறு பல செயல்களையும், தனதுரிமை என்று நடைமுறையில் ஆளுநர் மேற்கொள்ள முடியும்.
இன்னும் இவை போன்ற பல உரிமைகளும் பொறுப்புகளும் கடமைகளும் பணிகளும் ஆளுநருக்கு உண்டு எனக் கூறப்பட்டு வருகிறது; நம்பப்பட்டும் வருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் முறையாகவும் ஆழமாகவும் படித்துப் பார்த்தால், இத்தகைய உரிமைகள், பொறுப்புகள், கடமைகள், பணிகள் என எதுவுமே ஆளுநருக்கு எவ்வகையிலும் வழங்கப்படவில்லை என்பது வெளிப்படையாகவே தெரியும்.
இத்தகைய நிலை எப்படி ஏற்பட்டது என்பதுதான் ஆழ்ந்த ஆய்வுக்குரியதாக இருக்கிறது.
1. சில உரிமைகளை ஆளுநர்கள் தம் விருப்பில் தாங்களாகவே எடுத்துக்கொண்டுவிட்டனர்.
2. ஒன்றிய அரசின் ஆட்சியாளர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் சிலவற்றை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டனர்.
3. அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அல்லது மனதில் கொள்ளாமல், உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் ஆளுநர்களுக்குச் சில உரிமைகளையும் பொறுப்புகளையும் கடமைகளையும் பணிகளையும் வாரி வழங்கிவிட்டன. இவற்றுடன், ஆளுநர்கள் தாமாக எடுத்துக்கொண்ட உரிமைகளுக்கு ஒப்புதல் தந்துவிட்டன.
நடைமுறையில் இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க முடியாமல் அல்லது செய்வதறியாமல் அல்லது இவற்றை இருப்பதாக நம்பிக்கொண்டு, வேறு வழியின்றி மாநில அரசுகள் கடந்த 73 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன.
அரசமைப்புச் சட்டம் உருவானபோது அரசமைப்பு அவையிலேயே மாநில ஆளுநரின் உரிமைகளும் கடமைகளும் பொறுப்புகளும் பணிகளும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பன குறித்த விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையான கருத்துக்கள் கூறப்பட்டு, செயல்பாடுகளும் நடைமுறைகளும் விரிவாக விளக்கப்பட்ட பின்னர்தான், ஆளுநர் பொறுப்புக் குறித்த இன்றைய இறுதிச் சட்ட பிரிவுகள் வடிவம் பெற்றன.
அரசமைப்பு அவையின் செயல்பாடுகள் குறித்த முழுமையான பதிவுகள் இவற்றையெல்லாம் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
ஆனால், அரசமைப்புச் சட்டம் குறிப்பாகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறாத உரிமைகள் பல ஆளுநருக்கு இருப்பதாக இன்று வரை எடுத்துக்கொள்ளப்பட்டு ஏற்கப்பட்டும் வருகிறது.
அரசமைப்பு அவையில் ஆளுநர் பற்றிய பிரிவுகளை வகுக்கும்போது 1949 மே 30 31 ஆகிய நாள்களில் நடந்த கருத்துப் பகிர்தல்கள், கீழ்க்கண்டவற்றை நடுவப்படுத்தி இருந்தன:
1. ஆளுநர் தேர்வு முறை: (அ) மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்வது; அல்லது (ஆ) சட்டப்பேரவை தேர்ந்தெடுத்துத் தரும் நால்வரில் ஒருவரைக் குடியரசுத் தலைவர் பணியமர்த்துவது; அல்லது (இ) குடியரசுத் தலைவர் நேரடியாகப் பணியமர்த்துவது.
2. ஆளுநரின் உரிமைகள், பணிகள் மற்றும் செயல்பாடுகள்.
3. ஆளுநர் பொறுப்புக்கான தகுதி.
இவை குறித்து நீண்ட கால அளவில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன என்றுதான் கூறவேண்டும்.
ஆளுநருக்கான அரசமைப்புப் பிரிவுகளை வகுக்கும் முன்னரே, 1947ஆம் ஆண்டில், ஆளுநர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து தொடக்கமாக அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், மக்களாட்சி முறையில் சட்டப்பேரவை மற்றும் அமைச்சரவை ஆட்சி முறை என்ற நிலை உருவாக்கப்பட்டதால், ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது பொருத்தமாக இருக்காது என்று கருதப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் மற்றும் முதல்வர் தலைமையிலான அமைச்சரவை என்று இரண்டு வகை ஆளுமை நடுவங்கள் அமையும்போது, இவற்றுக்கிடையில் உரிமைப் பூசல் எதுவும் உருவாகிவிடக்கூடாது என்பதுதான் பெரிதும் பார்க்கப்பட்டது.
சட்டப்பேரவை, அமைச்சரவை, முதல்வர் என்ற வகையில் பரவலாக மக்களைச் சார்ந்திருக்கும் முறைக்கு மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் ஒருவர் தன்னை முன்னிறுத்தும் போக்கு வளர்ந்துவிடக்கூடாது என்ற அச்சத்தினைப் பலரும் எடுத்துக்காட்டினர்.
எனவே, மாநிலத்தின் மேலாண்மை, ஆட்சி என யாவும் சட்டப்பேரவைக்குக் கட்டுப்பட்ட அமைச்சரவையின் பொறுப்பில் விடப்படும்போது, ஆளுநர் எத்தகைய உரிமையும் பணிகளும் இல்லாத பெயரளவுக்கான அரசமைப்பு முறைத் தலைவராக மட்டுமே இருக்கவேண்டும் என்று முடிவு காணப்பட்டது.
அத்துடன், உரிமைகள், பணிகள், கடமைகள் அல்லது பொறுப்புகள் என எதுவும் இல்லாத, பெயரளவுக்கு அணிகலன் போல் இருக்கக்கூடிய ஆளுநரைத் தேர்தல்வழித் தேர்ந்தெடுப்பதில், காலத்தையும் பணத்தையும் உழைப்பையும் செலவழிக்க வேண்டியதில்லை என்பதும் நிலைநிறுத்தப்பட்டது.
சட்டப்பேரவைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் முன் வைப்பார்கள். ஆனால், பெயரளவுக்கான ஆளுநர் பொறுப்புக்கான தேர்தலில் வேட்பாளரின் தனிப்பட்ட சிறப்புகள் மட்டுமே பேசப்படும் என்பதும் கணக்கில் கொள்ளப்பட்டது.
அடுத்து, சட்டப்பேரவை நான்கு பெயர்களைத் தேர்வு செய்து பரிந்துரைத்தால், அதிலிருந்து ஒருவரைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பது என்ற கருத்து ஆய்வு செய்யப்பட்டது. மாநில சட்டப்பேரவையின் பரிந்துரையில், மூன்றாம் நான்காம் வரிசையில் இருப்போர் ஆளுநராக அமர்த்தப்பட்டால், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் நல்லிணக்கம் இல்லாமல் போகலாம் என்ற அச்சம் தோன்றியதால் இக்கருத்தும் கைவிடப்பட்டது.
ஆளுநரருக்கும் முதல்வருக்கும் இடையில் எத்தகைய பூசலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே முழுமையாக மனதில் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அரசமைப்பு அவை உரைகள் வெளிப்படுத்துகின்றன.
இவற்றையடுத்துத்தான், மாநில ஆளுநரைக் குடியரசுத் தலைவர் நேரடியாகப் பணியமர்த்தலாம் என்னும் இப்போதைய நிலை ஏற்கப்பட்டது. இதோடு, ஆளுநருக்கு எத்தகைய உரிமையும் கடமையும் செயல்பாடும் பணியும் தனித்த முறையில் இருக்கக்கூடாது என்பதும் இறுதி செய்யப்பட்டது.
பதவி ஏற்கும்போது, மாநில மக்களுக்காகப் பணியாற்றுவதாகவும் அவர்களது நலன்களுக்காகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதாகவும் உறுதி எடுத்துக்கொள்ளும் ஆளுநர், அந்த மக்களை முழுதும் அறியாமல் எப்படிப் பணியாற்ற முடியும் என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டு அரசமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுத் தலைவர் என்ற முறையில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ‘ஆளுநர்களுக்கு எத்தகைய செயல்பாடுகளும் தரப்படவில்லை, இன்னும் சொல்லப்போனால் செயல்பாடுகளே அவர்களுக்கு இல்லை’ (No function) என்று விளக்கம் தந்தார்.
அப்போதும்கூட, பல உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநர்கள், ஒன்றிய அரசின் முகவர்களாக மாறிவிடுவார்கள் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினர்.
இத்தகைய சூழலில் பிரதமர் நேரு, மாநிலத்தின் அரசியலில் ஈடுபாடு அல்லது ஆர்வம் இல்லாதவராக ஆளுநர் இருக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு ஆளுநர் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் கூறியது தெளிவினை ஏற்படுத்துவதாகத் தெரிந்தது. இதனால், வேறு மாநிலத்தைச் சார்ந்தவரை ஆளுநராக அமர்த்துவது இதற்கு வாய்ப்பாக அமையும் என்பது பொதுக் கருத்தாக அமைந்தது.
இருப்பினும், வலிமையான எதிர்ப்புகள் இருந்ததால், வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்தான் ஆளுநராகப் பணியமர்த்தப்படுவார் என்ற வரையறை அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நேரு தன் கூற்றைத் தானே பின்பற்றவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் அரசியல் செயல்பாட்டாளராக இருந்த காங்கிரசுக் கட்சியினர்தாம் மாநில ஆளுநர்களாக அமர்த்தப்பட்டனர். இவர்கள் ஆளுநர்களாகப் பொறுப்பேற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் போக்குகளில் தலையிடுவது ஏதோ ஒரு வகையில் நடந்தது.
1952 பொதுத் தேர்தலில், அன்றைய ஒன்றுபட்ட சென்னை மாநிலச் சட்டப்பேரவையில் காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. அப்போது சென்னை ஆளுநராக இருந்த காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த பிரகாசா, பெரும்பான்மை பெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையிலான கூட்டணியினை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. மாறாக, சிறுபான்மையினராக இருந்த காங்கிரசின் சார்பில் ராசாசியை ஆட்சி அமைக்கச் செய்தார். இதற்குப் பிரதமர் நேருவும் உடன்பட்டிருந்தார் என்பதுதான் வியப்புக்குரியதாகும்.
அடுத்து, 1957 தேர்தலில் பெரும்பான்மை பெற்று கேரளாவில் ஆட்சியமைத்த இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நம்பூத்திரிபாட் அரசு 1959இல் கலைக்கப்பட்டது.
நேரு காலத்திலிருந்து, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நோக்கமே ஒன்றிய அரசிடம் இருந்து வருகிறது. அன்று தொடங்கிய இத்தகைய போக்குகள் இன்று வரை தொடர்கின்றன.
அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, அதில் உள்ள சொல்லாடல்களும் விவரங்களும் மட்டுமே சட்டப்படி ஏற்கத் தக்கனவாகும். அரசமைப்பு அவையில் நடந்த கருத்துப் பகிர்தல்களும் வரைவுக் குழுத் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர் கொடுத்த விளக்கங்களும் சட்டத்தின் பகுதிகளாக அல்லது வழிகாட்டிகளாக இருக்க முடியாது என்பதெல்லாம் உண்மைதான்.
ஆனால், எழுத்துக்களும் உணர்வுகளும் (Letter and Spirit) என்பது ஏற்கப்பட்டதொரு சட்ட எதிர்பார்ப்பாகும். அரசமைப்பு அவையின் உணர்வுகள் பெரிதும் இப்போதைய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுவிட்டன என்றுதான் கூறவேண்டும்.
ஆக, அரசமைப்பு அவையின் போக்கு மற்றும் இறுதி செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின் நோக்கு ஆகியன ஒன்றை மட்டுமே வலியுறுத்தி உறுதி செய்கின்றன. அமைச்சரவையின் அறிவுறுத்தலுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டாக வேண்டிய ஆளுநருக்கு, வேறு எவ்வகையிலான செயல்பாட்டு உரிமைகளும் இல்லை என்பதுதான் அது.
எனவே, கட்டமைக்கப்பட்ட கற்பனைகளின் அடிப்படையில் மேற்கொண்டுவரும் எத்தகைய உரிமைகளும் கடமைகளும் பொறுப்புகளும் பணிகளும் ஆளுநருக்குத் தரப்படவில்லை என்பதே உண்மை நிலை.
மாநிலங்களில், குறிப்பாக எதிர்க் கட்சியினர் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் தற்போது ஆளுநராக இருப்போரது தனித்த செயல்பாடுகளும் தன்விருப்பப் போக்குகளும் அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானவை.
ஆளுநர் பதவி வேண்டியதில்லை என்பது கொள்கை நிலையாக இருக்கலாம். இருப்பினும், இன்றைய நிலையில் – இருக்கின்ற நிலையில் நடைமுறைகளை வகுத்துச் செயல்பட்டாக வேண்டியதைப் புறக்கணித்துவிட முடியாது.
எனவே, இவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம்தான் தலையிட்டுத் தெளிவுபடுத்த வேண்டும்.