
‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ எனப் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாடல் ஒலித்த போது அடிவாரத்தில் முருகனும், நடுவில் மகாவீரரும், உச்சியில் மசூதியோடு இணைந்த தர்ஹாவும் இணைந்தே இருந்தன.
இன்று திருப்பரங்குன்றம் மலையை வைத்துப் பொய்களின் உற்பத்தியாளர்கள் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.
1868 ஆம் ஆண்டில் நெல்சன் தனது புகழ்பெற்ற மதுரை மேனுவல் நூலில் பக்கம் ஒன்பதில் 500 அடி உயர ஸ்கந்த மலையில் ஒரு முசல்மான் ஒருவரின் கல்லறையும் அதைச் சுற்றி நினைவு மசூதி அமைந்துள்ளதாகவும் அது பெயர் பெற்ற இடமெனவும் குறிப்பிடுகிறார்.
எஸ்.சி.ஹில் தனது யூசுப் கான் தி ரெபல் கமாண்டன்ட் என்ற 1914 ஆம் ஆண்டு நூலில் பக்கம் 56 இல் சிக்கந்தர் என்ற பெயருடைய பக்கிரி சிக்கந்தர் மலையில் வாழ்ந்து மடிந்ததாகவும் அவ்விடத்திற்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் செல்வார்கள் எனவும் குறிப்பிடுகிறார். அவ்விடத்தில் யூசுப் கானால் மசூதி ஒன்று கட்டப்பட்டதென பாதர் ஸ்வார்ட்ஸ் குறிப்பிட்டதையும் ஹில் பதிவு செய்துள்ளார்.
1926 முதல் 1931 வரை மதுரை சார்பு நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் பின்னர் பிரிவி கவுன்சில் என்ற மன்னர் மன்றத்திலும் நடந்த வழக்கின் தீர்ப்பை வெறுப்பு அரசியல் கூட்டத்தினர் ஆதாரமாகக் காட்டுகிறார்கள் 12.05.1931 ஆம் நாள் சர் ஜார்ஜ் லவ்ண்ட்ஸ் வழங்கிய அத்தீர்ப்பின் இறுதி பத்தியில் யாருடைய கைவசமும் இல்லாத பகுதி மட்டுமே கோவில் நிர்வாகத்தினருக்கு பாத்தியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அத்தீர்ப்பிலும் நெல்சனின் மதுரை மேனுவல் விவாதிக்கப்பட்டது.
ஆனால் அவ்வழக்கைப் பற்றி விவாதிப்பது தேவையற்றது. ஏனென்றால், 1991 ஆண்டில் ஒரு மிக முக்கியச் சட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது. பிளேசஸ் ஆஃப் ஒர்ஷிப் ஸ்பெசல் புரொவிசன்ஸ் ஆக்ட் 1991 (Places of worship special provisions Act 1991) என்ற வழிபாட்டுத் தலங்களுக்கான சிறப்புச்சட்டம் அரசியலமைப்புச் சட்ட விரோதிகளால் பாபர் மசூதி இடிக்கப்படுமுன் அதற்கு முந்தைய வருடம் இயற்றப்பட்டது. அச்சட்டப்படி 15.08.1947 ஆம் நாளில் ஒரு வழிபாட்டுத்தலம் என்னவாக இருந்ததோ அதே நிலையில் அது இருக்க வேண்டும். அதை இன்னொரு வழிபாட்டுத் தலமாக மாற்ற முயற்சிப்பது மூன்று வருட தண்டனைக்குரிய குற்றமென எட்டு பிரிவுகளைக் கொண்ட அச்சட்டம் கூறுகிறது. இந்தியாவில் பாபர் மசூதிக்கு மட்டுமே அச்சட்டத்திலிருந்து விதி விலக்கு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 12.12.2024 ஆம் நாள் இதே போன்று ஐந்து மசூதிகள் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை ஒன்றை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தியா முழுமையிலும் ஒரு வழிபாட்டுத் தலத்தை மாற்ற எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்ய இயலாது அவ்வாறு ஏற்கனவே நிலுவையிலுள்ள வழக்குகளில் சொல்லப்பட்ட உத்தரவுகளும் செல்லாது.
சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து எல்லா வழிபாட்டுத் தலங்களும் உள்ளது உள்ளபடி தொடர வேண்டும்.
மேற்சொன்ன சட்டப்பிரிவுகள்படி மூன்று வருடத் தண்டனைக்குரிய குற்றமான வழிபாட்டுத் தலங்களை மாற்ற முயற்சிப்பதேன்? அதற்கு முருக பக்தர்களை துணைக்கழைப்பதேன் என்ற கேள்வி நம்முன் எழாமல் இல்லை. அனைத்து சாதி அர்ச்சகர்கள் வேண்டாம் ஏனென்றால் எல்லோரும் இந்து அல்ல எனச் சொல்லும் அதே கூட்டம் இப்போது இந்துவே திரண்டு வா எனக்கூறுவது வேடிக்கைதான். இதே கூட்டம்தான் அனைத்து சாதி மக்களும் கோயிலுக்குள் நுழைந்ததும் மீனாட்சி அம்மன் கோயிலை பூட்டிக்கொண்டு வெளியேறியதையும் யாரும் மறக்கவில்லை.
நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி எவ்வித செயல் திட்டங்களும் இல்லாதவர்களால், ராமேஸ்வரத்தில் சுடப்படும் மீனவர்கள்,அருணாச்சல பிரதேச எல்லையை ஆக்கிரமிக்கும் சீனா, அதல பாதாளத்தில் பாயும் இந்திய ரூபாய் மதிப்பு, இது தவிர கொத்துக் கொத்தாக அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் குறித்து கவலைப்படவில்லை. மாறாக மதத்தின் பெயரால் மக்களை பிளவு செய்வது அவர்களுக்கு அரசியல் ஆதாயமளிப்பதாகவே உள்ளது. வெறுப்பு அரசியல் பலனாளிகளுக்குத் இது நன்றாகவேத் தெரியும்.
ஏ.எஸ்.பி அய்யர் ஆங்கிலேயர் அல்லாத இந்திய ஐசிஎஸ் அதிகாரி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி, மேனாள் டிஜிபி லக்ஷ்மி நாராயணனின் மாமனாரும் தூதராகப் பணி புரிந்த ஏ.பி.வெங்கடேஸ்வரனின் தந்தையும் கூட, பல சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்கவும் செய்துள்ளார்.
அவர் எழுதிய 25 years a civilian நூலில் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி ஆகியன புத்தரின் தாயாருக்கான கோவில்கள் என்கிறார். இன்று பௌத்தர்கள் அக்கோயில்கள் குறித்து ஆய்வு செய்து மீட்டெடுக்க கேட்டால் என்னவாகும்?
தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் அவர்களுடைய புகழ்பெற்ற எண்பெரும்குன்றம் நூலில் தென்பரங்குன்றம் உமையாண்டவர் கோவில் அர்த்த நாரீஸ்வரர் சிற்பமானது சமண தீர்த்தங்கரரது உருவத்தை அழித்து அர்த்த நாரீஸ்வரர் உருவாக்கப்பட்டிருந்தாலும் அக்குகைக் கோவிலில் தீர்த்தங்கரரது அடையாளமான சுருள் சுருளான அசோக மரத்தின் கிளைகளை அர்த்த நாரீஸ்வரரின் தலை மீது இன்றும் காண முடியும் என்கிறார்.
மதுரையில் மிக முக்கிய வரலாற்றுப் பேராசிரியர் வெங்கட்ராமன் தனது நண்பரான ஜெர்மன் அறிஞருடன் மதுரையின் அடையாளங்களில் ஒன்றான பாண்டி கோவிலுக்குள் 1970 களில் நுழைந்த போது பாண்டி முனியின் உச்சந்தலையில் உள்ள உஷ்னிஷா என்ற கொண்டை போன்ற அடையாளத்தைக் கண்டதும் (Oh My God he is Buddha) கடவுளே! அவர் புத்தர்! எனக் கூறியதைப் பேராசிரியர் வெங்கட்ராமன் பல கூட்டங்களில் கூறியதை மதுரையினர் கேட்டதுண்டு. மறைந்த பேராசிரியர் பாண்டி முனியின் மீசை குறித்தும் கூறியுள்ளார். ஆனால், மதுரையில் பாண்டி முனியை புத்தராக்க யாரும் முயற்சிக்கவில்லை அவர் அருகிலேயே நூற்றுக்கணக்கான ஆடுகளும் கோழிகளும் பலி விருந்தாகின்றன!
எனவேதான் 1991 சட்டம் இன்று நமக்கு எப்போதையும் விட இப்போது தேவையாக உள்ளது.
திமுக அரசு திருப்பரங்குன்றம் பிரச்சினையை மிகுந்த எச்சரிக்கையாக கையாளுகின்றது. நீதிமன்றக் குறுக்கீட்டால் திருப்பரங்குன்றத்தில் மையம் கொண்ட போராட்டம் மதுரை பழங்காநத்தத்திற்கு மாறி அப்போராட்டத்தில் வன்முறை நடக்காமலிருந்தது.
அதனால் மதுரை மக்கள் நிம்மதி அடைந்ததென்னவோ உண்மை. ஆனால் மண்டைக்காடு கலவரத்தை அன்றைய அதிமுக எம்ஜிஆர் கையாண்டதைப் போல் பாம்பும் சாகக் கூடாது தடியும் உடைய கூடாது என அரசியல் உறுதியற்று இன்றைய அரசு கையாண்டால் சட்டம் ஒழுங்கு சிக்கல் பொது ஒழுங்கு பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது.
அமைதியை குலைப்பவர்களை மயிலறகால் வருடுவதை அரசு கைவிட்டு அரசியல் பலத்துடன் கையாள வேண்டும். கொலை வழக்கில் சங்கராச்சாரியரை சிறைக்கனுப்பிய மாநிலம்தானே இது.!