
1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றது. ஏப்ரல் மாதம் கரன்ஸ்கி தலைமையில் இடைக்கால அரசு ஏற்பட்டது.
ரஷ்ய சோசலிஸ்ட் கட்சி, மென்ஸ்விக் கட்சி, இதரக் குழுக்களோடு அரசியல் கருத்து ஒற்றுமை ஏற்படாத சூழலில், ஓர் இடைக்கால அரசு நல்லது எனக் கருதினார் லெனின்.
ரஷ்ய இடைக்கால அரசு தொழிலாளர் வர்க்கத்திற்குத் துரோகம் செய்தது. மன்னர்கள், குலாக்குகள், நிலச்சுவாந்தாரர்களின் அரசாக அது செயல்பட்டது. இராணுவ ஆட்சியிடமோ, ஜார் மன்னனிடமோ மீண்டும் ஆட்சி செல்வதை விட, இடைக்கால அரசு நல்லது என்ற லெனினது ஜனநாயகப் பார்வையை இடைக்கால அரசு சிதைத்து விட்டது.
ஆட்சி நிர்வாகம், நிதிநிலை, ராணுவம், தொழிலாளர், விவசாயிகள், ஏழைமக்கள் குறித்த லெனினது ஆலோசனைகளை இடைக்கால அரசு உடைத்து விட்டது.
இச்சூழலில்தான் லெனின் 1917 அக்டோபர் மாதம் பெட்ரோகிராட் கூட்டத்தில் படைவீரர்கள், குடியானவர்கள், தொழிலாளர்களுக்கு அறை கூவல் விடுத்தார். ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற அறை கூவினார்.
அப்போது இருந்த “ரெட்கார்டு” சிறப்புப் பாதுகாப்புப் படை (செஞ்சேனை அல்ல. பிறகுதான் செஞ்சேனை உருவாக்கப்பட்டது.) தொழிலாளர்கள், இதரப் படை வீரர்கள் என இணைந்து வங்கி, தொலைப்பேசி, கப்பற்கூடம், ராணுவத் தலைமை என யாவற்றையும் கைப்பற்றினார்கள்.
ஆட்சி அதிகாரம் சோவியத்துகளுக்கே என லெனின் பிரகடனப்படுத்தினார். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் முதல் கையெழுத்து. அமைதிக்கானதுதான். முதல் சோசலிஸ்ட் அரசு அமைந்த உடன், ஜெர்மனி ரஷ்யாவின் நிலப்பரப்புகளைக் கேட்டது. போர் கூடாது என்ற முடிவில் லெனின் உறுதியாக இருந்தார். டிராட்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டார். முடிவு ஏற்படவில்லை. ஜெர்மன் கேட்ட நிலப்பரப்பை லெனின் அரசு வழங்கியது.
மறுபுறம் ரஷ்யா போரில் ஜப்பானிடம் தோற்று இருந்தது. முதல் உலக யுத்தத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அந்நிய நாடுகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.
லெனின் அரசைக் கவிழ்க்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் வெண்படையை (white army) ஏவியது. ரஷ்யாவிற்குள் நிலச் சீர்திருத்தத்தை ஏற்காத விவசாயிகள், நிலப்பிரப்புகள் பச்சைப் படையை (கிரீன் ஆர்மி) ஏவினார்கள்.
இன்னொரு புறம் சோசலிஸ்ட் கருத்துகொண்ட மென்ஸ்விக்குகள், லெனினை ஏற்கவில்லை.
இச்சூழலில்தான் லெனின் 1917 நவம்பர், டிசம்பர் மாதங்களில் புகழ் வாய்ந்த இராணுவப் பிரகடனங்கள், நிதிநிலை அறிக்கைகள், சமூக நலத் திட்டங்கள், புலம்பெயர் மக்கள் என அறிக்கை தாக்கல் செய்தார்.
ஜப்பான், ஜெர்மன் வெண்படை, பச்சைப் படையென நான்கு புறமும் இராணுவத் தாக்குதல். இடையூறுகள் என்ற சூழலில், முதல் சோசலிச, பாட்டாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாக்க, லெனின் ராணுவத்திற்கு முன்னுரிமை அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லெனின் ரஷ்யாவின் முதல் முன்னுரிமை கருச்சுமந்த தாய்மை நிலைப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எனப் பிரகடனப்படுத்தினார். சமூக நலம் என்ற முதல் சொல் பிறந்த இடமும் ரஷ்யாதான்.
போர்களால் புலம்பெயர்ந்த மக்கள். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் ரஷ்யச் சட்டம் பொருந்தும் என்றார்.
அடுத்து கல்வி
கல்வியில் ரஷ்யாவில் நிலவும் கூட்டுப் பண்ணைகள் சிக்கல்கள் குறித்தும், இனப் பாகுபாடுகள் குறித்தும், ஓர் தீர்வை எட்ட முடியும் என நம்பினார்.
மசூதிகள், வேதாலயங்கள் என யாவும் காலை முதல் மாலை வரை பள்ளிக்கூடங்கள் என அறிவித்தார். மாலை, இரவு நேரங்களில் அது அவரவர் வழிபாட்டுத் தளங்கள் என்றார்.
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற சாலைகள் செய்வோம் என்ற பாரதியின் கனவு மெய்ப்பட்ட இடம் அதுதான்.
கல்விக்கும், குழந்தைகள் உணவிற்கும் முன்னுரிமை போக, அடுத்துதான் ராணுவத்திற்கு நிதி அளிக்கப்பட்டது. செஞ்சேனை உருவாக்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த செஞ்சேனைதான் ஸ்டாலின் தலைமையில் அளப்பரிய உயிர்த் தியாகங்கள் செய்து ஐரோப்பாவை பாசிசத்திலிருந்து விடுவித்தது. இரண்டாம் உலக யுத்தம் முடிவிற்கு வந்தது.
லெனின் ஆட்சியை முடக்க, ரூபிள் பதுக்கப்பட்டது கிராமப்புற விவசாய உற்பத்திப் பொருட்கள் முடக்கப்பட்டன.
இச்சூழலில்தான் லெனினது அரசு, புதிய ரூபிள் அச்சிடப்படும். அது நிலம் ஏதுமற்ற ஏழை விவசாயிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றது.
விலைமாதார்கள் என அழைக்கப்பட்ட ருஷ்ய பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகள், சமூகப் பணிகளுக்குப் பயிற்சி அளிக்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. பெண் கல்வி என்ற சொல் பிறந்த முதல் இடம் இது.
ஜார் மன்னன் சொத்துகள், மந்திரவாதி ராஸ்புதின் சொத்துகள், அந்நிய நாடுகளின் சட்ட விரோதச் சொத்துகள், வேதாலயங்களின் அளவற்ற சொத்துகள் அனைத்தும் கையகப்படுத்த, புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) நெப் என்ற சொல்லும் முதலில் பிறந்த இடமாக ரஷ்யா திகழ்ந்தது.
முதியோர்களுக்கான ஆயுட்காலப் பொறுப்பு அரசு ஏற்கும் என்றது. நோய்வாய்ப்பட்டோர், உடல் உறுப்பு குறை கொண்ட மாற்றுத்திறன் கொண்டவர்களுக்குப் புதிய பயிற்சி மையங்கள் அரசு அமைக்கும் என்றது.
அனைத்துக்கும் மேலாக ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினத்தின் மீதான வெறுப்பு, பாலினச் சீண்டல், அடக்குமுறைகளைச் சட்டப் பூர்வமாகத் தடை செய்வதோடு, மாற்றுப் பாலின மனிதர்களுக்கு ரஷ்யாவின் சட்டபூர்வ உரிமையாவும் உண்டு என்றார் லெனின்.
மொத்தத்தில் மக்கள் நலனுக்கான, மக்கள் நல பட்ஜெட் அது. முதல் சோசலிஸ்ட் அரசின் பட்ஜெட் அது.