கோட்டூர் பெ.அருணாசலம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னோடியும், கோட்டூர் ஒன்றிய ஊராட்சியின் முன்னாள் பெருந்தலைவருமான தோழர் பெ.அருணாசலம் (வயது 93) இன்று (21.02.2025) திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானார் என்பதை அறிந்து வேதனையுற்றோம்.
இன்றைய திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், வெங்கத்தான்குடி ஊராட்சியில் உள்ள சிங்கமங்கலம் என்ற ஊரில் தியாகி பெருமாள் குடும்பத்தில் பிறந்தவர் பெ.அருணாசலம்.
சிறுவயது முதலே விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கத்தில் ஆர்வமாக பங்கேற்று, கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து, இறுதி மூச்சுவரை செயல்பட்டு வந்தவர்.
வெங்கத்தான்குடி ஊராட்சி தலைவராக செயல்பட்டு வந்த பெ.அருணாசலம், 1986 மக்களால் நேரடியாக தேர்வு செய்யும் முறையில் கோட்டூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு, மிகச் சிறப்பாக செயல்பட்டவர். பிறகு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பொறுப்புக்கும் தேர்வு செய்யப்பட்டவர்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டக் குழு உறுப்பினர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர், மாவட்ட நிர்வாகக் குழு, மாநிலக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டு முத்திரை பதித்தவர். முதுமை மற்றும் உடல் நலிவு காரணமாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பெற்று, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டார் என்பது துயரமானது.
எளிமையும், நேர்மையும் கொண்ட வாழ்க்கை நெறியில் வழுவாது நின்று, இணைந்த இயக்கத்தின் முடிவுகளை நிறைவேற்றுவதில் முனைப்பாக செயல்படும் முன்னுதாரணமாக திகழ்ந்த பெ.அருணாசலம் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
பெ.அருணாசலம் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். இவர்களுக்கு 6 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். தோழர் பெ. அருணாசலம் மறைவுக்கு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது மகன்கள், மகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.