கட்டுரைகள்

சிந்துவெளிக்குமுன்செல்லும்பண்டைத்தமிழ்ப்பண்பாடு

மே.து.ரா.

இரும்பின் தொன்மை குறித்த அண்மைக் கால ஆய்வு முடிவுகள், தமிழ்ப் பண்பாட்டின் பழமையினை முற்றிலுமாகத் தெளிவுபடுத்திவிட்டன.

23.-01.-2025 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பும், அதனையொட்டி வெளியிடப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலும், நூறாண்டுகளுக்கு மேலாக நிலவிவந்த பல கருத்தமைவுகளைப் புரட்டிப்போட்டுவிட்டன.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்), கொடுமணல் (ஈரோடு), பொருந்தல் (திண்டுக்கல்), கீழடி (சிவகங்கை), மாங்காடு (சேலம்), கீழநமண்டி (திருவண்ணாமலை), மயிலாடும்பாறை (கிருட்டிணகிரி), சிவகளை (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அடுத்தடுத்து நடைபெற்ற அகழ்வுகள் தமிழக வரலாற்றில் புதிய ஒளியினைத் தொடர்ந்து பாய்ச்சி வருகின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட இரும்புக் காலத்தைச் சேர்ந்த ஈமம் தொடர்பான இடங்கள் கிடைத்துள்ளன. இவற்றில், 1362 முதுமக்கள் தாழிகள், 996 பரல் உயர் பதுக்கைகள், 225 கல் வட்டங்கள், 634 வாழ்விடத்துடன்கூடிய ஈமக் காடுகள் ஆகியன அடங்கும். இவற்றில் மிகச் சில இடங்களில் மட்டுமே இதுவரை அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டரசின் தொல்லியல் துறை, ஒன்றிய அரசின் தொல்லியல் துறை, சில பல்கலைக்கழகங்கள் ஆகியன இத்தகைய அகழ்வு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. ஒன்றிய அரசின் முழுமையான ஒத்துழைப்பு இல்லையென்றாலும், தமிழக அரசின் முன்னெடுப்புகளால் இந்த அகழ்வுகள் செம்மையாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டுக்கு வந்தது என்றுதான் நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்தது. இதனை அடுத்தடுத்த அகழ்வு முடிவுகள் மாற்றியமைத்துள்ளன.

மாங்காடு (மேட்டூர் வட்டம்) என்ற இடத்தின் அகழ்வில் கிடைத்த இரும்பு வாளினை ஆய்வு செய்தபோது கி.மு. 1510ஆம் ஆண்டினைச் சார்ந்ததாக மதிப்பிடப்பட்டது. கீழநமண்டி (வந்தவாசி வட்டம்) அகழ்வில் பெற்ற இரும்பின் காலம் கி.மு. 1692 என்றானது. மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 2172 என்று முடிவானதால், இரும்பின் பயன்பாடு மேலும் முன் சென்றது. அடுத்து, ஆதிச்சநல்லூர் அகழ்வின் இரும்பினை ஆய்வு செய்தபோது, காலவரையறை கி.மு. 2522 முதல் 1613 வரை பின்னுக்கு சென்றது.

 

இந்த நிலையில்தான் சிவகளை அகழ்வுகள் சிறப்பானதொரு கட்டத்தை எட்டியுள்ளன. இங்குக் கிடைத்த இரும்புப் பொருள்கள் 85க்கு மேலாக உள்ளன. இந்த இரும்புப் பொருள்களின் காலம் கி.மு. 2953 முதல் கி.மு. 3395 வரை இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டின் காலம் கி.மு. 3395 என்ற அளவிலேயே இருந்திருப்பது தெளிவாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் கிடைத்துள்ள இரும்புப் பொருள்களைக் காணும்போது, தமிழகத்தில் மட்டுமே தாதுக்களில் இருந்து தரப்படுத்தப்பட்ட – பக்குவப்படுத்தப்பட்ட வகையில் அவை உள்ளன என்பது தனித்து நோக்கத்தக்கதாகும்.

உலகின் பிற பகுதிகளில் கிடைத்த தொல்பொருள்கள் யாவும், விண்கல் இரும்பிலிருந்து உருவாக்கப்பட்டவையாகவே இருந்தன. இவற்றின் பழமையான காலம் கி.மு. 3400 &- 3100 என்ற அளவிலேயே இருந்ததாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழகத்தில் கிடைத்தவை அனைத்தும் கனிமங்களிலிருந்து பக்குவப்படுத்தப்பட்டவை என்பதை வேறுபடுத்திக் காணவேண்டும்.
பேராசிரியர் கா. ராசன், திரு.இரா. சிவானந்தன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், தங்களது அகழ்வு முடிவுகளைச் செம்மையாக உருவாக்கி, உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது போற்றுதலுக்கு உரியதாகும்.

பொதுவாக, ஏதோவொரு ஆய்வகத்திற்குத் தந்து முடிவுகளைப் பெறுவதற்கு மாறாக, மூன்று வெவ்வேறு ஆய்வகங்களிலிருந்து முடிவுகள் காணப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பிளாரிடோ மாநிலத்தில் உள்ள பீட்டா பகுப்பு ஆய்வகம், கதிரியக்கக் காலப் பகுவாய்வு செய்வதில் முன்னிடம் பெற்றதாகும். அடுத்து, தூண்டொளி வழிக் காலக் கணக்கீடு செய்ய, லக்னோ நகரில் உள்ள பீர்பால் சகானி தொல் அறிவியல் ஆய்வு நிறுவனமும் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வகமும் முன்னிலை கொண்டவையாகும்.

இரண்டு வகையான ஆய்வு முறைகளைச் செய்ய, மூன்று வேறுபட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி முடிவுகள் பெறப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஒன்றுபட்ட காலக் கணக்கீடுகளையே அவை வழங்கியுள்ளன என்பது தற்போது கிடைத்துள்ள முடிவுகளின் தனிச் சிறப்பாகும்.
எனவே, சிவகளையில் கிடைத்துள்ள இரும்பின் பயன்பாடு கி.மு. 3345 என்ற கால அளவிலானது என்பது அய்யத்துக்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இரும்புக் கனிமங்களோ அல்லது பக்குவப்படாத இரும்போ மட்டும் தமிழகத்தின் அகழ்வுகளில் கிடைத்திருக்கவில்லை. அவை யாவும் 1200 முதல் 1400 செல்சியசு அளவிலான சூட்டில் வடித்தெடுக்கப்பட்ட பொருள்களாகவே இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, மாங்காடு அகழ்வில் இரும்பு வாள் இருந்தது. ஆதிச்சநல்லூரில் இரும்பு மண்வெட்டி போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன. சிவகளையில் இரும்பினாலான கத்திகள், அம்பு முனைகள், உளிகள், கோடாரிகள், வாள்கள், மண்வெட்டிகள், மோதிரங்கள் போன்ற பயன்பாட்டுப் பொருள்களும் உற்பத்திக் கருவிகளும் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டின் அகழ்வுகளில் கிடைத்துள்ள பொருள்களில் இரும்பு மட்டுமே இருக்கவில்லை. மயிலாடும்பாறையில் பாறை ஓவியங்கள், வணிகக் குழுக்களின் கல்வெட்டு, தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் போன்றவையும் உள்ளன. ஆதிச்சநல்லூரில் தாய்த் தெய்வம் என்று கருதப்படும் உருவம், தங்க மோதிரம், வெண்கலப் பொருள்கள், நெல்மணிகள், பிற உற்பத்திப் பொருள்கள் ஆகியனவும் அகழ்வில் எடுக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த நெல்மணிகளின் காலம் கி.மு.1149 என்று தெரியவந்துள்ளது. பிற உற்பத்திப் பொருள்களின் காலம் கி.மு.1441 ஆகும். சிவகளையில் பெற்ற நெல்மணிகளின் காலம் கி.மு.1155 என முடிவு கிடைத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் பொருந்தல் அகழ்வில் எழுத்துக்களுடன் கூடிய இரு பானைகளில் இருந்த நெல் மணிகளின் காலங்கள் கி.மு. 490 எனவும் கி.மு.450 எனவும் கண்டறியப்பட்டிருந்தன.

இவற்றைக் கொண்டு பண்டைய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களின் காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டளவில் இருக்கவேண்டும் என்ற முடிவு முன்வைக்கப்பட்டது. அதேபோன்று, நெல்மணிகள் இருந்த பானைகளில் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளின் காலமும், அசோகரது பிராமி எழுத்துக்களுக்கு முந்தையதென உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்து, கீழடி அகழ்வு பண்டைய பாடல்களின் காலத்தை கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டுசென்றது.

ஆனால், தற்போது சிவகளையில் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளின் காலம் கி.மு.685 என்று முன் செல்கிறது. நெல்மணிகளின் காலம் சிவகளை அகழ்வின் அடிப்படையில் கி.மு.1155 என்று எடுத்துக் கொண்டாலும், ஆதிச்சநல்லூர் அகழ்வின் அடிப்படையில் கி.மு.1149 என்று எடுத்துக்கொண்டாலும், இரண்டு கால அளவுகளும் பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை.எனவே, தமிழ்நாட்டின் மருத வள உற்பத்தி கி.மு. 12ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே வளர்ச்சி பெற்றிருந்தது என்பது தற்போது தெரிய வருகிறது.

இவற்றைக்கொண்டு பார்க்கும்போது, பண்டைய பாடல்கள் காட்டும் மருத நில வளர்ச்சி நிலை கி.மு. 1155 க்கு முன்னரே ஏற்பட்டுவிட்டதை அறிய முடிகிறது.
சிவகளை, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வுகளில் கிடைத்த இரும்புப் பொருள்களான மண்வெட்டி, உளி, கோடாரி, கத்தி போன்ற உற்பத்திக் கருவிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் மருத வள உற்பத்தி நிலை கி.மு. 3345 என்ற அளவில் இருந்திருக்கவேண்டும் என்று கருதவேண்டியுள்ளது.

இதனால், பண்டைய பாடல்களில் காணப்படும் மருதத்தின் வளர்ச்சியும் வேளாண் நுட்பமும் கி.மு. 3345க்கு முன்னரே ஏற்பட்டிருந்த சமூக-பொருளிய-பண்பாட்டுக் காலத்தினை மதிப்பிட முடிகிறது.

அத்துடன், இரும்பைக் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கும் நுட்பம், இரும்பைப் பண்படுத்தும் ஆற்றல் ஆகியன அறிவியல் அறிவின் உயர்நிலைகளை உறுதிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் செம்பின் பயன்பாடு குறைவாக இருந்தாலும், வெண்கலப் பொருள்கள் ஆதிச்சநல்லூர் அகழ்வில் பெறப்பட்டிருக்கின்றன. செம்புக் காலத்துக்கு முன்னர் அல்லது செம்புக் காலத்தினையொட்டி, இரும்புக் காலம் தமிழகத்தில் நிலவி வந்ததை அறியலாம்.

வரலாற்று வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, பண்டைய தமிழ் இலக்கியங்கள் மேம்பட்டதொரு பண்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தாலும், இலக்கியத் தரவுகளை அடிப்படைகளாக ஒத்துக்கொள்ள தயக்கங்கள் இருந்தன. ஆனால், தற்போதைய அகழ்வுகளின் தரவுகள் பண்டைய இலக்கியங்களின் உண்மைத் தன்மைகளைத் தெளிவாகத் தெரியப்படுத்தியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

பண்டைய பண்பாட்டு இருப்பிடங்களாக மெசபடோமியா (கி.மு. 4100-1750), பெரு (கி.மு. 3000-1800), எகிப்து (கி.மு. 3150-30), சிந்துவெளி (கி.மு. 3300-1300), அரப்பா (கி.மு. 3300-1300), சீனம் (கி.மு. 2020-), கிரேக்கம் (கி.மு. 800-323), ரோமானியம் (கி.மு. 753-426) போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தப் பண்பாடுகளின் கால வரையறைகள், வெவ்வேறு ஆய்வாளர்களால் மாறுபட்டுக் கூறப்பட்டிருப்பினும், ஏறக்குறைய அந்தந்தக் காலப்பகுதிகளில் நிலவியதாகவே எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பாக, சிந்துவெளி அரப்பா ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், இவற்றின் மேல் எல்லை கி.மு. 3300 என்று அமைந்திருக்க, தமிழ்நாட்டின் சிவகளை அகழ்வின் காலக் கணக்கை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கி.மு. 3345 மேல்நிலையாக இருப்பது புறந்தள்ளக்கூடியதல்ல.
பண்டைய பண்பாட்டு இருப்பிடங்களாகக் கருதப்படும் அனைத்திலும் கட்டிடக் கட்டமைப்பின் எச்சங்கள் காணப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அத்தகைய கட்டிடக் கட்டமைப்புகள் எதுவும் இதுவரை அகழ்ந்தெடுக்கப்படவில்லை என்பது உண்மைதான்.

ஆனால், ஒன்றினை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். சமூக-பொருளிய-பண்பாட்டு நிலைகள், உலகெங்குமுள்ள இனங்களிடையே இணையாகவும் சீராகவும் ஒன்றாகவும் இருக்கவில்லை.

கட்டிடங்கள் போன்ற கட்டமைப்பு எச்சங்களுக்கு அப்பாலும் உள்ள பண்பாட்டுப் பன்முகத் தன்மைகளைப் புரிந்துகொண்டுதான் பண்டைய பண்பாடுகளை மதிப்பிடவேண்டும்.
நெல் போன்ற வள உற்பத்தியின் வளர்ச்சியும் அதற்கு ஏற்றவாறான உற்பத்திக் கருவிகளும் உற்பத்திக் கட்டமைப்புகளும் உருவாகி முன்னேற்றம் கண்டிருந்த நிலையினை, இரும்பின் முழுமையான பயன்பாடு உறுதிப்படுத்துகிறது.

இயற்கைப் பிரிவுகளாகத் தமிழ்நாட்டில் நால்வகை நிலங்கள் அறியப்பட்டிருந்தாலும், குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகியன மட்டுமே இயற்கையில் அமைந்தவையாகும். மனித உழைப்பினாலும் உற்பத்தி நுட்ப வளர்ச்சியாலும் நீரியல் கட்டமைப்புகளாலும் மட்டுமே மருதம் என்ற நிலப் பகுப்பு உருவாக்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. குறிஞ்சி, முல்லை, நெய்தல் சார்ந்த நிலங்களின் பகுதிகளிலேயே மருத மென்புலங்கள் பண்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றன.

பண்டைய பாடல்கள் குறிஞ்சி, முல்லை, நெய்தல் சார்ந்த நிலப் பகுதிகளின் வாழ்நிலைகளை விரிவாகவும் விளக்கமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருக்கின்றன. அந்தந்த நிலங்களின் சமூக-பொருளிய-பண்பாட்டு வாழ்முறைப் போக்குகளை ஆழமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

எனவே, மருத நில வாழ்நிலையில்தான் தமிழர் பண்பாடு தொடங்குகிறது என்று வரையறுப்பது முற்றிலும் பொருந்தாததாகும். அந்த நிலையினை எட்டக்கூடிய முந்தைய பின்புலத்தையும் காணவேண்டும்.

மேலும், நகர வளர்ச்சி மட்டுமே பண்டைய பண்பாட்டுச் செம்மைக்கு அடிப்படையாக இருந்துவிட முடியாது. இதனால், கட்டிடக் கட்டமைப்புகளைப் பண்பாட்டுத் தொன்மைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்வது தவறான முடிவுகளுக்கு இட்டுச் சென்றுவிடும்.

தமிழ்நாட்டில் கட்டிடக் கட்டமைப்புகள் இன்னும் அகழ்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும் இப்போதுதான் அகழ்வு முயற்சிகளின் பயன்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன என்பதையும் புறக்கணித்துவிடக்கூடாது.

 

தமிழ்நாட்டின் தனித்தன்மைகளையும் இங்கு கணக்கில் கொள்ளவேண்டும்.
சீனாவைத் தவிர்த்து, பிற பண்டைய பண்பாடுகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் அழிவைக் கண்டுவிட்டன. அந்தப் பண்பாடுகளின் தொடர்ச்சி அறுந்ததுடன், அவை ஏன் அழிவுற்றன, அந்தப் பண்பாடுகளை வளர்த்தெடுத்தோர் நிலை என்னவாயிற்று என்பன போன்ற விவரங்கள் எதுவும் அறியக் கிடைக்கவில்லை. அத்தகைய பண்டைய பண்பாடுகளின் இருப்பிடங்களில் வேறு யாரும் குடியேறி, அடுத்தடுத்து வாழ்ந்ததாகவும் தெரியவில்லை. இதனால், பண்டைய பண்பாடுகளின் கட்டிடக் கட்டமைப்புகள் மண்ணில் புதைந்தோ, தனித்திருந்தோ இன்று எச்சங்களாக வெளிப்பட்டிருக்கின்றன.

ஒரு வகையில் பார்த்தால், பண்டைய பண்பாடுகளில், மக்கள் வாழ்நிலை பற்றிய விவரங்கள் இலக்கியங்கள் வழியாகவோ, வேறு பதிவுகள் வழியாகவோ தெரியவில்லை. ஆனால், பண்டைய இலக்கியங்கள் தமிழரது வாழ்முறைகளை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கின்றன.

பண்டைத் தமிழரைப் பொறுத்தவரை, அவர்களின் வாழிடங்களில் அவர்களது தலைமுறையினர் இன்றுவரை தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். வழிபாட்டுக் கட்டமைப்புகள் தோன்றியிராத காலத்தைச் சார்ந்த நிலை அன்று இருந்ததால், பிற வாழிடங்கள் யாவும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தன. இது இயற்கையின் விளைவாகும். இதனால், பழைய கட்டமைப்புகள் எஞ்சியிருக்க வாய்ப்புகள் இல்லாமல் போயிற்று.

மேலும், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நகரங்கள், மாடமாளிகைகள் போன்றவை கூறப்பட்டாலும், இனக்குழு வாழ்முறையின் எச்சங்கள் ஏதோவொரு முறையில் தொடர்ந்துகொண்டிருந்தன. மிகை உற்பத்தியும் பொருள் திரட்சியும் ஏற்பட அப்போது வாய்ப்புகள் இருக்கவில்லை. இதனால், பெருமளவில் நகரங்களின் தோற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

வேளாண் வளர்ச்சியின் விரிவாக்கம் மட்டுமே பெரிதென ஏற்கப்பட்டு, விளைநிலப் பகுதிகள் விரிவடைந்தன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு பெருகியிருந்த நிலையினை சிவகளை போன்ற அகழ்வுகள் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

சிந்துவெளி, அரப்பா போன்ற பண்பாடுகளில் இருந்ததைப் போன்ற வளர்ச்சி பெற்ற வழிபாட்டு அடையாளங்கள் எதுவும் தமிழ்நாட்டின் அகழ்வுகளில் இதுவரை கிடைக்கவில்லை என்று கூற முடியும். இதுவும் சிந்துவெளி, அரப்பாப் பண்பாடுகளுக்கு முந்தியதாகத் தமிழர் பண்பாடு இருந்தது என்பதைக் காட்டிவிடுகிறது. காலக் கணக்கீடும் இதனை உறுதிப்படுத்திவிடுகிறது.

இரும்பின் தொன்மை குறித்த இத்தகைய கண்டுபிடிப்புகள் தொடக்கம் மட்டுமே. இன்னும் அகழ்ந்தெடுக்காமல் இருக்கின்ற பல இடங்களையும் ஆய்வு செய்யும்போது, மேலும் பல விவரங்கள் கிடைக்கலாம். கீழடிக் கட்டமைப்புகளை எப்படி யாரும் எதிர்பார்க்கவில்லையோ, அது போல மேலும் பல தரவுகள் புதிதாகக் கிடைக்கலாம்.

ஆனால், கிடைத்திருக்கின்ற பொருள்களையும் இரும்பின் காலக்கணக்கையும் எடுத்துப் பார்க்கும்போது, சிந்துவெளி, அரப்பா ஆகிய பண்டைய பண்பாடுகளுக்கு அப்பால், உலகின் நிலவிய பிற பண்பாடுகளுக்கெல்லாம் எவ்வகையிலும் பின்தங்கியதாகத் தமிழர் பண்பாடு இருக்கவில்லை என்ற முடிவுக்கு வருவதில் தயக்கமோ, தடையோ. அய்யமோ இருப்பதாகத் தெரியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button