ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள்
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாளை மறுநாள் (05.02.2025) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் நிதியமைச்சர் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (01.02.2025) தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் உரையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறுவதைக் கூட விரும்பாத வன்மத்துடன், தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய ரயில்வே திட்டங்கள், சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள், தொடர்ந்து இயற்கைப் பேரிடர்களை சந்தித்ததால் ஏற்பட்ட பெரும் இழப்புகளை சீரமைக்க ஒன்றிய அரசிடம் கோரிய தேசிய பேரிடர் நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, தமிழக மாணவர் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வு விதிவிலக்கு, பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோருதல் என தமிழ்நாடு அரசு முன்வைத்த கோரிக்கைகளும், தமிழ்நாடும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் ஓர வஞ்சனை செயலுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் அளிக்கும் தீர்ப்பு கடுமையான கண்டனமாக அமைய வேண்டும்.
ஒன்றிய அரசு அதிகாரத்தில் உள்ள வகுப்புவாத, மதவெறி சக்திகள், சாதி, இன, மொழி வெறி சக்திகளை அணி சேர்த்து, தமிழ்நாட்டில் கால் பதிக்க பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி செயலகமாக மாற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவி அதிகார அத்துமீறல் மக்களாட்சி நெறிகளை சீரழித்து, சிதைத்து வருகிறார்.
வகுப்புவாத சக்திகளின் குருபீடத்தின் ஆசியுடன் சாதி, மொழி, இனவெறி சக்திகள் நாட்டின் ஒற்றுமைக்கும், வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழும் பன்மைத்துவ மரபுக்கும் கேடு செய்யும் வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்தி வருகிறது.
உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவி வண்ணம் பூசுவது, பெரியார் ஈவெராவை இழித்தும், பழித்தும் பேசுவது போன்ற கழிசடை அரசியலை விதைத்து வருபவர்களை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் முற்றாக நிராகரித்து, தமிழ்நாட்டின் தனித்துவம் வாய்ந்த சிறப்புக்கு வலுச்சேர்க்க வேண்டும்.
சனாதனக் கருத்தியலில் கட்டமைக்கப்பட்ட வர்ணாசிரம, சாதிய அடக்குமுறை சமூக அமைப்பில் உழைக்கும் மக்கள் அடக்கி, ஒடுக்கி சமூக வட்டத்தில் இருந்து, வெளியேற்றி, ஒதுக்கி வைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பெரியார் ஈவெரா, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சுயமரியாதை – சமதர்ம இயக்கம் கண்டு சமூக நீதிக்காக போராடினர். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என தொன்மை தமிழர் தொலைநோக்கு பார்வைக்கு செயல்வடிவம் தருவதற்கான வலுவான அடித்தளம் அமைத்தனர்.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்று, சமூக நீதி ஜனநாயகத்தை முன்னெடுத்து வந்த தமிழ்நாடு கூட்டாட்சி கோட்பாடுகளை மதித்து செயல்படுத்தி வருகிறது.
பெரியார் ஈவெரா உயர்த்தி பிடித்து, இறுதி மூச்சு வரை பகுத்தறிவு கருத்துக்களின் பரப்புரையால், விழிப்புணர்வு கொண்ட தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, அறிவுத் துறையில் இஸ்ரோவின் தலைமை ஏற்று சாதனை படைத்து திகழ்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நூறு சதவீதம் வெற்றி தந்த, தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் திமுகழக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.