
சீன நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், அரசியல், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளவும், இரு நாட்டு மக்களின் நட்புறவுவை வளர்க்கவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராமகிருஷ்ண பாண்டா தலைமையில் 12 பேர் அடங்கிய குழு டிசம்பர் 5 முதல் 12 வரை சீனா சென்று வந்தது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு நூற்றாண்டை தொட்ட ஆண்டான 2020ல் வறுமையை ஒழித்து விட்டோம் என்று உலகிற்கு அறிவித்த பின்னர் சீனாவிற்கு செல்லும் நமது கட்சியின் முதல் குழுவாக எங்கள் குழு அமைந்திருந்தது.
பீஜிங், ச்சாங்சா (ஹீனான் மாகாணம்), சாங்காய் ஆகிய மூன்று நகரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், கட்சியின் அருங்காட்சியம், கட்சிப் பள்ளி, மாவோ பிறந்த கிராமம், சீனப் பெருஞ்சுவர், சானி (SANY) தொழிற்சாலை, யூலு கல்விக்கூடம், லுடாங் கிராமம், ரோபோ தொழிற் பூங்கா, நகரக் கட்டுமான அலுவலகம், புல்லட் ரயில் பயணம், கட்சி தொடங்கப்பட்ட முதல் மாநாடு நடைபெற்ற இடம் என எங்கள் பயணத்தை மிக நேர்த்தியாக திட்டமிட்டிருந்தனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர், தேசியவாத அரசோடு உள்நாட்டு போர் என இரு முனையில் போராடி வரலாற்றுப் புகழ் மிக்க நெடும் பயணத்தை மேற்கொண்டு மாவோ தலைமையில் 1949 ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி சீனப் புரட்சியை வெற்றி கண்டது கம்யூனிஸ்ட் கட்சி.
நிலச் சீர்த்திருத்தம், ஐந்தாண்டு திட்டங்கள் என மாவோ தலைமையில் சோசலிஸ நாடாக கட்டி எழுப்பினர். 1976ல் மாவோ மறைவிற்கு பிறகு பொறுப்புக்கு வந்த டெங் சியோபிங் சீனப் பண்புக்கேற்ற சோசலிஸம் என்ற சீர்திருத்த நடவடிக்கையை 1978ஆம் ஆண்டு மேற்கொண்டார். அதன் பின்னர் வந்த தலைவர்களும் தற்போதைய கட்சியின் பொதுச் செயலாரும், அதிபருமான ஜீ ஜிங்பிங்கு வரை கடைபிடிக்கின்றனர்.
1978ஆம் ஆண்டு சீன பொருளாதார சந்தையை அந்நிய மூலதனத்திற்கு திறந்து விட்டனர். சந்தை பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டாலும் வங்கி, எரிசக்தி, ரயில்வே, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. சீனாவில் இயங்கும் பன்னாட்டு வங்கிகளில் குறைந்தது ஐந்து சதவீத பங்குகளை அரசு வைத்திருக்கிறது. வாகனத் தயாரிப்பு உள்ளிட்ட சீனாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகளில் அரசு முதலீடு செய்துள்ளது.
நிதி மூலதனம், தொழில்துறை மூலதனம் என இரண்டையும் வரவேற்றாலும் கூட அதிக முக்கியத்துவம் தொழில்துறை மூலதனத்திற்கே கொடுக்கின்றனர். காரணம் தொழில்துறையே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக பங்களிப்பு செலுத்துவதாக கூறினர்.
வறுமை ஒழிப்பு
கட்சியின் நூற்றாண்டில் வறுமையில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து வெற்றியும் கண்டுள்ளனர். வறுமை ஒழிப்புக்கு முதன்மையாக அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவைகளை உத்தரவாதப் படுத்தியுள்ளனர். அதேபோல் வருவாய் இடைவெளி என்பதும் அதிகம் தான். உலகில் அதிக பணக்காரர்கள் பில்லியனர்ஸ் வாழும் நாடும் சீனா தான்.
வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளாக நிலச் சீர்திருத்தம், நிலம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிட்ட அளவு நிலம் இலவசமாக ஒதுக்கப்படுகிறது. கூடுதலாக விவசாயம் செய்ய நிலம் தேவைப்படுவோருக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேலை நிலத்தை பெற்ற நபரோ, அவரது குடும்பமோ வேறு வேலை கிடைத்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து சென்று விட்டால் அந்த நிலம் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டிற்கே சென்று விடும்.
நான்கைந்து கிராமங்களை உள்ளடக்கி ஒரு தொழிற்சாலை, பட்டதாரிகளை ஊக்கப்படுத்தி கிராமங்களில் இரண்டாண்டு சேவை, கட்சி உறுப்பினர்களை, ஓய்வுபெற்ற இராணுவத்தினரை கிராமங்களுக்கு அனுப்பி மக்களின் திறன் வளர்பதில் வழிகாட்டுதல், விவசாயத்தில் வருமானத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பல செயல் திட்டங்களை முன்னெடுத்ததாக கூறினர்.
கல்வி மருத்துவம்
ஆறு வயதிலிருந்து பதினைந்து வயது வரை இலவச கட்டாய கல்வி சட்டமாக்கப்பட்டிருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவத்திலும் தனியார் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அரசின் கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளுமே அதிகம்.
SANY தொழிற்சாலை
சானி நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு சர்வதேசளவில் இயங்கும் தனியார் நிறுவனம். காற்றாலை, மண்ணை துளையிடும் இயந்திரம், ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனம். இத்துறையில் உலகின் 15 சதவிகித பங்குகளை கொண்டிருக்கும் நிறுவனம். இந்தியாவில் புனே, கோவா இரண்டு இடத்தில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் முழுக்க தானியங்கு இயந்திரங்களை கொண்டே உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தில் தற்போது 30,000 தொழிலார்கள், 3,000 பொறியாளர்கள் உள்ளனர். இதனை 2030 ஆம் ஆண்டிற்குள் தொழிலார்களை 3000 ஆக குறைத்து பொறியாளர்களை 30,000மாக உயிர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளன.
ரோபோ பூங்கா
சாங்காய் நகரில் அமைந்துள்ள செயற்கை நுண்ணறிவு ரோபோ பூங்காவிற்கு அழைத்துச் சென்றனர். இங்கு உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் ரோபோ தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகின் முன்னணி நாடாக உயர்வதற்கான களத்தை கட்டி அமைத்துள்ளனர்.
கட்சிப் பள்ளி
கட்சியில் உறுப்பினராவதற்கு நமது கட்சியில் உள்ள அதே விதிகளை போல தான் அவர்களும் கொண்டுள்ளனர். கட்சி உறுப்பினர்களுக்கான கல்வியை வழங்குவதற்கு அனைத்து நகரங்களிலும் கட்சிப் பள்ளிகளை கொண்டுள்ளனர். அனைத்து மட்டங்களிலும் ஊழியர்களை பயிற்றுவிக்க இளம் ஆசிரியர்களை கொண்டுள்ளனர்.
கட்சியின் அருங்காட்சியகத்தில் ஒரு சிற்பம் எங்களை நெகிழ வைக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது. மாவோ தலைமையிலான நெடும் பயணத்தில் பனிப் பிரதேசத்தை கடந்து செல்லும் போது பனிப்புயலில் சிக்கி தோழர்கள் பலர் உயிரிழக்கின்றனர். அதில் ஒருவரது உடல் பனிமூடிய நிலத்திற்குள் மூழ்கி விடுகிறது. ஒரு கரம் மட்டும் பனிக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கிறது. அந்தக் கரத்தில் ஒரு சிறு நூலை இறுக்கமாக பற்றி பிடித்திருக்கிறார். பயணத்தின் அடுத்தப் பிரிவினர் அதே வழியாக வருகிற பொழுது பூமிக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் அந்த கரத்தை பார்க்கிறார். கையில் இறுக்கமாக பற்றி இருக்கிற அந்த நூலை எடுத்துப் பார்க்கிறார். அந்த நூல் கட்சியின் திட்டமாகும். அந்த நூலுக்குள் அவர் கட்சிக்கு செலுத்த வேண்டிய லெவி பணத்தை மறவாமல் வைத்திருக்கிறார். செங்கொடியின் கொள்கையை இறுகப்பிடித்து நெடும் பயணத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கட்டித் தழுவிய வீரமரணத்தின் தியாக வரலாற்றை பறைசாற்றும் உணர்ச்சிப்பூர்வ சிற்பக் காட்சியாக வடித்திருந்தனர்.
கண் முன்னே நிறுத்திய அற்புதம்
ஷாங்காய் நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட முதல் மாநாடு நடைபெற்ற ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அதை ஒட்டியே அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். முதல் மாநாட்டில் பல்வேறு மாகாணங்களில் இருந்து பல்வேறு புரட்சிக் குழுக்களைச் சார்ந்த மாவோ உட்பட 12 பேரும், காமிண்டனை சார்ந்த ஒருவரும் என மொத்தம் 13 பேர் கலந்து கொண்டனர். முதல் மாநாட்டை அப்படியே தத்ரூபமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு 13 பேரும் உயிரோடு உரையாடுவது போல் நமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
கட்சியின் அருங்காட்சியகங்களை தொழில் நுட்ப உதவியோடு வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்க பிரமிக்கத்தக்க வகையில் கட்டி அமைத்துள்ளனர்.
பொதுவான வளர்ச்சி
பொதுவான வளர்ச்சி என்கிற முழக்கம் மாவோ காலத்தில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் முன்னெடுக்கப்படுகிறது. கட்சிப் பள்ளியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்து இலக்காக விவரித்தது 2035ஆம் ஆண்டுக்குள் சீன நாட்டை நவீனமயமாக்கலான நாடாக முன்னேறுவது. நகர்ப்புற – கிராமப்புற வருவாய் இடைவெளியை குறைப்பது. அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவது.
உண்மையிலிருந்து உண்மையைத் தேடு
இந்த வாசகம் ஹீனான் மாகாணத்தின் தலைநகரான ச்சாங்சாவில் 976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுலு கல்விக்கூடத்தின் வாசகமாகும். இங்கு கல்வி கற்க வந்த மாவோ இதனை அரிசியல் முழக்கமாக மாற்றி புரட்சிக்கே உத்வேகமூட்டினார். எங்கள் பயணம் குறுகிய நாட்களே, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னாட்டு பிரிவினர் திட்டமிடல் படி அமைந்தது. மொழி மிக பெரும் தடை. 99 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது. சீன மொழி மட்டும் தான். இதிலிருந்தே நாங்கள் பார்த்ததை, புரிந்து கொண்டதை வைத்து எங்கள் அனுபவத்தை பகிர்கிறோம்.
கூகுள், யூடியூப், முகநூல், வாட்ஸ் ஆப் என்று எதுவுமே அவர்கள் பயன்படுத்துவதில்லை. அனைத்திற்கும் அங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென்று தனி இணையதளம் சீன மொழியில் மட்டுமே இயங்கும். நாம் பயன்படுத்தும் கூகுள் மூலமாக நம்முடைய தனிப்பட்ட விவரங்கள் உட்பட அனைத்தும் கூகுள் நிறுவனத்தால் பார்க்க முடியும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் தரவுகளே மிகப் பெரும் ஆதாரமாக பார்க்கப்படுகிறது. உலகமே கூகுளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது சீனா அதற்குப் போட்டியாக தங்களுக்கென்று தனி இணையதளத்தை உருவாக்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
நாங்கள் நேரில் கண்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி மிரள வைக்கிறது. வல்லரசு நாடுகள் என்று சொல்லப்படும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் தர நாடுகளை அடிமைப்படுத்தி காலனிகளாக கொண்டு அவர்களின் செல்வத்தை சுரண்டி அதன் மூலமாக வளர்ந்த நாடுகள். அமெரிக்காவும் கருப்பின மக்களை அடிமைகளாக கொண்டு சென்று அவர்களின் உழைப்பை சுரண்டி இன்று ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தால் வல்லரசாக தொடர்ந்து வருகிறது. சீனா எந்த நாட்டையும் காலனி நாடாக வைத்துக் கொள்ளாமல், தங்கள் உழைப்பால் மட்டுமே வறுமையை ஒழித்து உட்கட்டமைப்பு வசதிகளில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக உருவாக்கி தொழில் நுட்ப வளர்ச்சியில் உச்சம் தொடுகிறது.