கட்டுரைகள்

பாஜக அரசால் பழிவாங்கப்பட்டு சிறையில் வாடும் சஞ்சீவ் பட் ஐபிஎஸ்

ஆகாஷி சஞ்சீவ் பட் எழுதிய கடிதம்

பாஜக அரசால் பழி வாங்கப்பட்டு சிறையில் வாடும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவி பட்-டின் மகள் எழுதிய கடிதம்.

சஞ்சீவ் பட், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி. குஜராத்தில் கோத்ரா கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது பணியாற்றியவர். 2002 பிப்ரவரி 27ஆம் தேதி அன்று கோத்ரா ரயில் பெட்டி எரிப்பில் 63 பேர் கொல்லப்பட்டனர். அன்று இரவு அப்போதைய குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடி காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்த, அடுத்த நாள் விஸ்வ ஹிந்து பரிஷத் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது, இந்துக்கள் தமது கோபத்தை தணித்துக் கொள்ள வாய்ப்பு அளித்து விலகியிருங்கள் என்று வாய்மொழி உத்தரவிட்டதாக, குஜராத் அரசின் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கூறினார். பின்னர் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இன்று வரை அங்கு பிஜேபி ஆட்சி தான் நடக்கிறது. கொலையாளிகளை இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை!

குறிப்பிடப்பட்ட அந்த நாளில் விஸ்வ ஹிந்து பரிஷத் பந்த் நடத்தியதோடு மட்டுமல்ல, மிகப்பெரும் கலவரம் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு வந்த போது, ஐபிஎஸ் அலுவலரான சஞ்சீவ் பட், 2011 ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் முதலமைச்சர் நரேந்திர மோடி நடத்திய காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் பற்றியும், அதில் ஒதுங்கி இருக்குமாறு சொல்லப்பட்ட உத்தரவு குறித்தும் விரிவான விவரங்கள் சொல்லப்பட்டிருந்தன.
2015 ஆம் ஆண்டில், தகவல் சொல்லாமல் வேலைக்கு வராமல் இருந்தார் என்று ஒரு பொய் காரணத்தைச் சொல்லி சஞ்சீவி பட் காவல்துறையிலிருந்து நீக்கப்பட்டார்.

1990-ல் போலீஸ் காவலில் இருந்த ஒரு கைதி கொல்லப்பட்டதற்கு சஞ்சீவ் பட் தான் காரணம் என்று 2019 ஜூன் 20ஆம் தேதி ஜாம்நகர் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

அந்த சிறைத் தண்டனையை அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே, 1996 ஆம் ஆண்டில், ஒரு ‘அப்பாவி’ வழக்கறிஞர் 1.5 கிலோ ஓபியம் எனும் போதைப் பொருள் வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சுமத்தியதாக சஞ்சீவ் பட் மீது வழக்கு தொடரப்பட்டு, மீண்டும் 2024 மார்ச் 27ஆம் தேதி அன்று, பலன்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

புகழ்பெற்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அது கள ஆய்வை மேற்கொண்டது. அந்தக் குழுவின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான கே எஸ் சுப்பிரமணியன், 2002ல் குஜராத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்து சஞ்சீவி பற்றி சொன்னது போல மோடி பேசியது உண்மைதான் என்று அறிக்கை தந்தார். அந்த அறிக்கை மற்றவர்கள் சொன்னதை கேட்டு எழுதியது தான் என்று கூறி அந்த அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
எந்தச் சூழலிலும் அவர் சிறையில் இருந்து வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக மூன்றாவது வழக்கும் தொடரப்பட்டது. 1997இல் போலீஸ்காவலில் ஒரு கைதியை சித்திரவதை செய்ததாக சஞ்சீவ் பட் மீது இன்னொரு வழக்கு (18 ஆண்டுகள் கழித்து) 2013 ஏப்ரல் 15 ஆம் தேதி எஃப் ஐ ஆர் போடப்பட்டது.

அதன் மீது இந்த ஆண்டு டிசம்பர் எட்டாம் தேதி அன்று குஜராத் போர்பந்தர் நீதிமன்றம், சஞ்சீவ் பட் மீது குற்றம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்துள்ளது. ஆனாலும் ஏற்கனவே ஒரு ஆயுள் தண்டனை, பிறகு 20 ஆண்டுகள் சிறை தண்டனை ஆகியவற்றை அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரது குடும்பமே போராடிக் கொண்டிருக்கிறது. இப்போது 61 வயதாகும் சஞ்சீவ் பட்டுக்கு டிசம்பர் 21ஆம் தேதி பிறந்த நாள்.

பிறந்தநாளை ஒட்டி, அவரது மகளான ஆகாஷி சஞ்சீவ் பட் அவருக்கு எழுதியுள்ள கண்ணீர் கடிதம் இது:

இன்று எங்கள் தந்தை திரு. சஞ்சீவ் பட் அவர்களின் 61வது பிறந்தநாள். அவரது கடந்த ஆறு பிறந்த நாட்களிலும் அவர் எங்களோடு இல்லை. சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்.
ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் புனிதமாகக் கருதும் உண்மை, நீதி, இலட்சியங்கள் ஆகியவற்றில் அவர் வைத்துள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக, அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எது சரியானதோ, உண்மையானதோ அதனை விட்டுக் கொடுக்காத, நிகழ்ச்சியோ ஏக்கமோ இன்றி, அச்சம் துளியுமின்றி, நீண்ட ஆறு ஆண்டுகளாக நீளும் தளராத போராட்டம்.
எங்கள் வீட்டில் பிறந்த நாட்கள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. கேக் வெட்டுவது பரிசுப் பொருட்கள் வழங்குவது போன்றவற்றால் அல்ல, வீட்டில் அனைவரும் ஒன்றாக இருந்து சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பரிமாறிக் கொள்ளும் அன்பு குறித்தது அது. என் தந்தையின் கம்பீரக் குரல் ஒலிக்க, எமது குடும்பமும் நண்பர்களுமாக வீடு முழுக்க மகிழ்ச்சி பூத்திருக்கும். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக, எங்கள் வீட்டையும் இதயங்களையும் அதீத அமைதி நிரப்பியுள்ளது. அது சொற்களால் விவரிக்க முடியாத வெறுமை.
எப்போது எவ்வாறு முடியும்? என்று தெரியாத இந்த இருளடர்ந்த போராட்டத்தின் மத்தியில், நம்பிக்கையை வழங்கும் வெளிச்சக் கீற்றாய் ஒரு தீர்ப்பு வந்துள்ளது. டிசம்பர் 7, 2024 அன்று, ஒரு செஷன்ஸ் நீதிமன்றம் எங்கள் தந்தை திரு சஞ்சீவ் பட்டின் வாயை அடைக்க, இந்த பழிவாங்கும் ஆட்சியால் வடிவமைக்கப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றிலிருந்து அவரைக் குற்றமற்றவர் என்று விடுவித்துள்ளது.
இது ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றி. உண்மை, எவ்வளவு அடக்கப்பட்டாலும், அதை உடைப்பதற்கான ஒரு வழி உள்ளது என்பதை இதை நிரூபித்துள்ளது. போர் இன்னும் முடியவில்லை. வெற்றி இலக்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது. எந்த உண்மைக்காக எனது தந்தை நிற்கிறாரோ, அந்த உண்மை, பொய்கள் மற்றும் அடிபணிதல் என்னும் அழுத்தத்தின் கீழ் இன்னும் ஆழப் புதைந்து கிடக்கிறது. அவருடைய சுதந்திரம் இன்னும் அவரைத் தவிர்க்கிறது. அவரையும், எங்களையும், இந்த நாட்டின் நீதியின் ஆன்மாவையும் உடைத்து நொறுக்க முயல்கிற சாம்ராஜ்யத்தின் கொடூர பிடியின் கீழ் எனது தந்தை சஞ்சீவி பட் இப்போதும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக, எங்கள் தந்தை கற்பனை செய்ய முடியாத துன்புறுத்தலைச் சகித்து வருகிறார். அதிகாரத்திடம் உண்மையைப் பேசியது தான் அவர் செய்த ஒரே குற்றம். அநீதியை அம்பலப்படுத்த அவர் துணிந்தார். மற்றவர்கள் தலை வணங்கிக் கடந்த போது, அவர் நிமிர்ந்து நின்றார்.
சர்வாதிகார ஆட்சிக்கு, அதன் மேல் கொண்ட விசுவாசத்தால் நீதித்துறை முடங்கிப் போயிருக்கும் ஒரு தேசத்தில், வரவிருக்கும் போராட்டம் அச்சுறுத்தலாகவும் ஆபத்தானதாகவும் தெரிகிறது. எவ்வாறாயினும், சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதிக்கான எங்கள் போராட்டம் தொடர்கிறது, ஆனாலும் எங்கள் தந்தை, உடைந்து போகாமல், வளைந்து தராமல், தலை குனியாமல் தனது தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார்.
அப்பா இந்த நாளில், நீங்கள் எப்போதும் எங்கள் ஹீரோவாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! உங்களின் வலிமை, அச்சமின்மை, அசைக்க முடியாத நீதி உணர்வு ஆகியவைதான் ஷானும் நானும் நம்பும் அனைத்திற்கும் அடித்தளம்.
இரவு எவ்வளவு இருட்டாக இருந்தாலும், நாம் ஒளியை நோக்கி நடக்க வேண்டும் என்பதை நீங்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். நிமிர்ந்து நிற்பதற்கும், அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவதற்கும், துன்பம் வந்தாலும் பின்வாங்காமல் இருப்பதற்கும் எங்களுக்குக் கற்றுத் தந்துள்ளீர்கள். உண்மை மற்றும் நீதிக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள். இந்த தேசத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் என்ன விலை கொடுக்க நேரிட்டாலும் தனிப்பட்ட வகையிலும், நீங்கள் வகித்த காவல்துறை பொறுப்பிலும் சேவை செய்தீர்கள்.
நீங்கள் எப்பொழுதும் எங்கள் வலிமையின் மிகப்பெரிய ஆதாரமாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்! உங்கள் தைரியம் ஒவ்வொரு நாளும் எங்களை ஊக்கப்படுத்துகிறது. கண்ணியத்துடனும் நோக்கத்துடனும் வாழ்வதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதைக் காட்டுகிறது. முரண்பாடுகள் கடக்க முடியாததாகத் தோன்றினாலும், உண்மைக்கான போராட்டம் ஒருபோதும் வீண் போகாது என்பதை நீங்கள் எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள்.
அப்பா, நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம்! ஒவ்வொரு நாளும், உங்கள் குரல், உங்கள் ஞானம், உங்கள் அன்பு மற்றும் உங்கள் அரவணைப்புக்காக நாங்கள் ஏங்குகிறோம்.
நீங்கள் உடல் ரீதியாக எங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், எங்களது ஒவ்வொரு நகர்விலும், நீங்களும் எங்கள் கூடவே இருக்கிறீர்கள்.
உங்களது பிறந்த நாளான இன்று, உங்களைக் கட்டிப்பிடித்து, உங்கள் சிரிப்பைக் கேட்டு, உங்களோடு குடும்பமாக ஒன்று கூடி இருப்பதில் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதை நேரில் சொல்ல விரும்புகிறேன்!!
பிறந்தநாள் வாழ்த்துகள், அப்பா!!
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நீங்கள் எங்கள் பலம், எங்கள் உத்வேகம் மற்றும் எங்கள் வழிகாட்டும் ஒளி!
நாம் மீண்டும் ஒன்றாக, நம் வீட்டின் அரவணைப்பில் கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை. நீங்கள் விடுதலையாகும் வரை நாங்கள் ஓய மாட்டோம், உண்மையாக நீதி ஒரு நாள் வழங்கப்பட்டே தீரும்!
ஆகாஷி சஞ்சீவ் பட் எழுதிய கடிதம்,
தமிழில்: டி.எம்.மூர்த்தி, ஆசிரியர் ஜனசக்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button